வெள்ளி, 4 ஜூலை, 2014

இது சாத்தியமா....?



கேள்வி - மத்தேயு 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:..

பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியுமா? ஒரு தட்டையான உலகத்திலேயே அது சாத்தியம்….?


பூமிப்பந்தில் எவ்வளவுதான் உயரமான மலைக்கு சென்றாலும் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் பார்க்கமுடியாது என்பது மெய்தான். தட்டையான பூமியில்தான் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் பார்க்கமுடியும் என்பதும் மெய்தான்.

ஆனால் உலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமைகளையும் நம் மாம்சக் கண்களால் துல்லியமாக/தெளிவாகப் பார்க்கமுடியுமா எனக் கேட்டால், உலகம் தட்டையாக இருந்தாலும் கோளமாக இருந்தாலும் அது சாத்தியமல்ல என்பதுதான் பதிலாக இருக்கும்.

பூமி தட்டையாக இருந்தால்கூட, பூமியின் எவ்வளவு உயர்ந்த மலைக்குச் சென்று பார்த்தாலும் நம் அருகாமையில் அதிகபட்சம் ஒரு 10 கிலோமீட்டர் ஆரமுள்ள வட்டப்பகுதியிலுள்ளவற்றை மட்டுமே ஓரளவு தெளிவாகப் பார்க்கமுடியுமேயன்றி, அதற்கும் மேலாக பல்லாயிரம் கி.மீ. தூரத்தில் உள்ளவற்றை ஒரு கடுகளவிற்குக்கூட காண இயலாது என்பதே உண்மை.

எனவே சாத்தான் இயேசுவை உயரமான மலைக்குக் கொண்டுசென்றதன் நோக்கம்: சொல்லர்த்தத்தின்படி இவ்வுலகின் சகல ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் இயேசுவின் மாம்சக் கண்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. பரந்த இவ்வுலகின் மகிமைகளை முடிந்தவரை அதிகபட்சம் காட்டி, இயேசுவின் மனக்கண்களுக்குள் இவ்வுலகின் முழு மகிமையையும் கொண்டுவந்து, இயேசுவை உலக இச்சைக்குள் வீழ்த்தவேண்டும் என்பதே.

ஆதியில் தேவனோடிருந்து இவ்வுலகை சிருஷ்டித்த தேவகுமாரனான இயேசுவுக்கு, இவ்வுலகின் மகிமைகளை சாத்தான் காட்டித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஆகிலும் இயேசு இவ்வுலகில் ஒரு மனுஷனாக மாம்சத்தில் இருந்ததால், அவர் கண்களின் இச்சைக்கு மசிந்துவிடுவார் எனக் கருதிய சாத்தான், அவரது மாம்சக் கண்களுக்கு முன்பாக இவ்வுலக மகிமைகளில் சிலவற்றைக் காட்டி, முழு உலகின் மகிமைகளையும் அவரது மனக்கண்களுக்குள் கொண்டுவந்திருக்கிறான்.

மற்றபடி, பூமி உருண்டையாக இருந்தாலும் தட்டையாக இருந்தாலும், இவ்வுலகின் முழு மகிமைகளையும் நேரடியாக இயேசுவின் மாம்சக்கண்களின் பார்வைக்குள் கொண்டுவருவது நிச்சயமாக சாத்தியமல்ல.

எனவே மத்தேயு 4:8-ல், உலகம் உருண்டையா, தட்டையா எனும் கேள்விக்கான பதிலை அறியக்கூடிய தகவல் எதுவுமில்லை என்பதே உண்மை.

எனவே உலகம் தட்டையானது என வேதாகமம் கூறுவதாகச் சொல்வதற்கு ஆதாரமாக மத்தேயு 4:8-க் காட்ட இயலாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக