கர்த்தருக்கு கீழ்ப்படிதல் அவசியம் என்ற போதனையை தரும் –
🌹 2 நாளாகமம்🌹
☀ “2 நாளாகமம்” என்னும் இந்நூல் “1 நாளாகமம்” தொடர்ச்சியாகும்.
☀ 1 நாளாகமத்திற்கு கொடுக்கப்பட்ட பெயர் விளக்கங்கள், 2 நாளாகமத்திற்கும் பொருந்தும். இவ்விரு புத்தகங்களும் மூலமொழியான எபிரேயத்தில் ஒரே புத்தகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 14-வது புத்தகமாக வருகிறது.
☀ 2 நாளாகமத்தின் முடிவான இரண்டு வசனங்களும் எஸ்றா புத்தகத்தின் ஆரம்பத்திலுள்ள முதல் இரண்டு வசனங்களும் ஒன்றேதான்.
☀ மேலும் 2 நாளாகமத்தின் கடைசி வாக்கியம் எஸ்றா 1:3-ல் முடிவடைகிறது. “எஸ்றா” புத்தகத்தை எழுதிய எஸ்றாவே 1,2 நாளாகம புத்தகங்களையும் எழுதினார் என்பதற்கு அத்தாட்சியாகும்.
☀ எழுத்துநடை, மொழிநடை, சொற்கள், எழுத்துக்கூட்டுதல் ஆகியவற்றில் நாளாகம புத்தகங்களும் எஸ்றா புத்தகமும் ஒரே மாதிரி இருப்பதிலிருந்து இது மேலுமாக நிரூபிக்கப்படுகிறது.
☀ இந்த இரண்டு புத்தகங்களிலும் காணப்படும் சில சொற்றொடர்கள் வேதாகமத்தில் வேறு எந்த புத்தகத்திலும் காணப்படுவதில்லை. எஸ்றா புத்தகத்தை எழுதிய எஸ்றாவே நாளாகம புத்தகங்களையும் எழுதியிருக்கவேண்டும்.
☀ 2 நாளாகமம், சாலொமோனின் ஆட்சியில் தொடங்கி, எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தை கட்டுமாறு கோரேசு கட்டளை பிறப்பித்தது வரையாக யூதாவில் நடந்த சம்பவங்களை குறிப்பிடுகிறது.
☀ இந்த 500 ஆண்டு கால சரித்திரத்தில், பத்துக்கோத்திர ராஜ்யம், யூதாவின் விவகாரங்களில் தலையிடும் போது மாத்திரமே அதைப்பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
☀ முக்கிய சம்பவங்கள் நிறைந்த காலப்பகுதிக்குரிய மற்ற அத்தாட்சிகளோடு 2 நாளாகமம் வலிமைமிக்க அத்தாட்சியை கொடுக்கிறது.
☀ மேலும், மற்ற சரித்திரத் தொகுப்புகளில் இல்லாத மதிப்புள்ள கூடுதலான தகவல்களை இதுகொடுக்கிறது. 2 நாளாகமம் 19,20,29-31 போன்ற அதிகாரங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
☀ 2 நாளாகமத்தில் மிக சிறிய அதிகாரம் 27, பெரிய அதிகாரம் 6.
☀ மொத்தம் 36 அதிகாரங்களும், 822 வசனங்களும் உள்ளன.
☀ 2 நாளாகமத்தின் 36 அதிகாரங்களில் முதல் 9 அதிகாரங்கள் சாலொமோனின் ஆட்சிக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த 9 அதிகாரங்களில் 6 அதிகாரங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கான ஏற்பாடுகளுக்கும் பிரதிஷ்டைக்குமே முழுமையாக ஒதுக்கப்படுகின்றன. சாலொமோனுடைய தவறை இப்புத்தகம் குறிப்பிடவில்லை.
☀ மீந்துள்ள 27 அதிகாரங்களில் 14, கர்த்தருடைய வழிபாட்டுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்திய தாவீதின் முன்மாதிரியை பின்பற்றின ஐந்து அரசர்களை குறிப்பிடுகிறது. ஆசா, யோசபாத், யோதாம், எசேக்கியா, யோசியா என்பவர்களே இந்த அரசர்கள்.
☀ மற்ற 13 அதிகாரங்களிலுங்கூட, கர்த்தருக்கு கீழ்ப்படிவில்லாத அரசர்களின் நல்ல குணங்களை எஸ்றா கவனமாக எடுத்துரைக்கிறார். உண்மையான வழிபாடு திரும்ப நிலை நாட்டப்படுவதோடும் பாதுகாக்கப்படுவதோடும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அவர் எல்லா சமயத்திலும் வலியுறுத்துகிறார்.
☀ 2 நாளாகமத்தின் கடைசி வசனங்கள் (36:17-23) எரேமியா25:12-ல் நிறைவேறின.
☀ தவறாமல் அப்படியே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. (2 நாளாகமம் 20:17,24; 21:14-19; 34:23-28; 36:17-20.)
☀ வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று முதல் முறை 2 நாளா 20:7-ல் சொல்லப்பட்டுள்ளது.
☀ வேதத்திலே ஜெபம் பண்ணி வானத்திலிருந்து கடைசியாக அக்கினியை வரவைத்தவர் சாலொமோன் – 2 நாளா 7:1.
☀ 2 நாளாகமத்தின் நம்பகத்தன்மைக்கு தொல்பொருள் ஆராய்ச்சியுங்கூட சான்றளிக்கிறது.
☀ பூர்வ பாபிலோன் இருந்த இடம் தோண்டப்பட்ட போது நேபுகாத் நேச்சாரின் ஆட்சி காலத்திற்குரிய களிமண் பலகைகள் கிடைத்தன. அவற்றில் ஒன்று, “யாக்கின், யாஹுத் தேசத்தின் அரசன்,” அதாவது, “யோயாக்கீன், யூதா தேசத்தின் அரசன்” என்பதாக வெளிப்படுத்துகிறது.
☀ இது, நேபுகாத் நேச்சாருடைய ஆட்சியின் ஏழாவது ஆண்டில் யோயாக்கீன் பாபிலோனுக்கு சிறை பிடித்து செல்லப்பட்டதை பற்றிய வேதாகம விவரத்தோடு நன்றாக பொருந்துகிறது.
☀ யூதாவின் அரசர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் நன்கு செயல்பட்டனர்; ஆனால் கொஞ்சகாலத்திற்கு பின்பு அவர்கள் பொல்லாத வழிகளுக்குள் வீழ்ந்துவிட்டனர். கடவுளுக்கு உண்மையாயிருப்பதன் பேரிலேயே வெற்றி சார்ந்துள்ளதை இந்த சரித்திரப்பதிவு மனதில் பதியுமாறு எவ்வளவு அழுத்தந்திருத்தமாய் விளக்கிக்காட்டுகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக