எஸ்தர் முழு புத்தகத்தின் சுருக்கம்:-
♔அகஸ்வேர் (கிரேக்கம்: அர்த்தக்சஸ்தா) என்னும் பாரசீக அரசரின் மனைவி வஸ்தி (கிரேக்கம்: ஆஸ்தின்) அரசி. ஒரு சமயம் அரசர் மாபெரும் விருந்தொன்று அளிக்கிறார். அரசி வஸ்தியும் உயர்குடிப் பெண்டிருக்கு விருந்தளிக்கிறார். ஏழு நாள்கள் தொடர்ந்த விருந்தின் இறுதி நாளில் அரசர் அதிகமாகக் குடித்துவிட்டு, தம் அரசியை விருந்தினர்முன் வரச்சொல்லி அவரது அழகைக் காட்டுவதற்குக் கேட்கிறார். ஆனால் அரசியோ அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்து, வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்.
♔ இதனால் அரசன் கடும் கோபமடைகிறார். தம் ஆணையை மீறிய வஸ்தி அரசியை என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார். அரசியைத் தண்டிக்காமல் விட்டால் அரசு முழுவதிலுமுள்ள மனைவியர் தம் கணவர் சொல் கேட்டு நடக்க மறுப்பார்கள் என்றும், அதனால் அரசிக்குத் தண்டனை கொடுத்தால் நாடு முழுவதற்கும் அது ஒரு பாடமாக இருக்கும் என்றும் ஆலோசனை கூறுகிறார்கள். அரசி இனிமேல் தம் கண்முன் வரலாகாது என்று அரசர் அவரை ஒதுக்கிவிடுகிறார்.
♔ ஒரு புதிய அரசியைத் தேடும் படலம் தொடங்குகிறது. நாடெங்கிலுமிருந்து அழகிய இளம் பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். அப்போது சூசா நகரைச் சார்ந்த யூத குலத்தவரான மொர்தக்காய் என்பவரின் வளர்ப்பு மகளாகிய எஸ்தர் என்னும் அழகிய பெண்ணும் வருகிறார். மொர்தக்காயும் எஸ்தரும் யூதர்கள் என்பது அரசனுக்கோ பிறருக்கோ தெரியாது.
♔ அழகு மிகுந்த எஸ்தரை அரசன் தன் நாட்டுக்கு அரசியாக முடிசூட்டுகிறார்.
♔ ஒருசிலர் அரசனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த மொர்தக்காய் அதை எஸ்தர் வழியாக அரசனுக்குத் தெரிவித்து அரசனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்.
♔ அரசனும் மொர்தக்காயைப் பாராட்டுகிறார். ஆனால் அரசவையில் உயர்பதவி வகித்த ஆமான் என்பவன் மொர்தக்காய் தனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று சினம் கொண்டு அவரைக் கொல்ல வழி தேடுகிறான். அவர் ஒரு யூதர் என்றறிந்து, நாட்டில் உள்ள எல்ல யூதர்களையும் அடியோடு ஒழித்திட மன்னன் ஆணை பிறப்பிக்க வேண்டுமென்று அவரிடம் ஆமான் கேட்கிறான்.
♔ அரசன் ஒப்புதல் தரவே, ஆமான் நாட்டிலுள்ள யூதர்களைக் கொல்லவும் அவர்களுடைய சொத்துக்களைச் சூறையாடவும் ஆணை பிறப்பிக்கிறான்.
♔ இதை அறிந்த மொர்தக்காய் தம் இன மக்களுக்கு நேரவிருக்கின்ற கொடுமையைத் தவிர்க்கும் வண்ணம் அரசனின் மனத்தை மாற்றுவதற்காக எஸ்தர் வழி முயற்சி செய்கிறார்.
♔ மொர்தக்காயும் எஸ்தரும் தம்மையும் தம் இன மக்களையும் காக்கும்படி கடவுளை மன்றாடுகின்றனர்.
♔ ஒருநாள் எஸ்தர் அரசி அகஸ்வேர் அரசனுக்கும் அரசவை அதிகாரி ஆமானுக்கும் விருந்தளிக்கிறார். ஆமான் ஒரு தூக்குமரத்தை ஏற்பாடு செய்து, அதில் மொர்தக்காயை ஏற்றிக் கொல்வதற்குத் திட்டமிடுகிறான். அரசி மறுநாளும் அரசரும் ஆமானும் விருந்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்கிறார்.
♔ ஆமான் பெருமகிழ்ச்சியுற்று, தன் திட்டம் நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என்று மனப்பால் குடிக்கின்றான்.
♔ இதற்கிடையில் அரசர் தம் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காயைப் பெருமைப்படுத்த எண்ணுகிறார். விருந்துக்கு வந்த ஆமானிடம் அவர், "நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்?" என்று ஆலோசனை கேட்கின்றார்.
♔ தன்னைப் பெருமைப்படுத்த மன்னர் கேட்கிறார் என்று தப்புக் கணக்குப் போட்ட ஆமான், மிக்க மகிழ்ச்சியோடு, "மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து, அவரைக் குதிரையில் ஏற்றி எல்லாரும் பாராட்டும் விதத்தில் நகரின் தெருக்களில் வலம் வரச் செய்யலாம்" என்று ஆலோசனை கூறுகிறான்.
♔ தான் பெருமைப்படுத்த விரும்பிய மனிதர் வேறு யாருமல்ல, மொர்தக்காய்தான் என்று அரசர் கூறியதும் ஆமான் அதிர்ச்சியடைகிறான்.
மொர்தக்காய் பெருமைப் படுத்தப்படுகிறார்.
♔ ஆமான் தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு வீடு சென்று, தன் மனையிடம் நடந்ததையெல்லாம் கூறுகிறான்.
♔ அரசி எஸ்தர் அளித்த விருந்தில் கலந்துகொண்ட அரசன் அகஸ்வேர் மீண்டும் ஒருமுறை அரசியிடம், "உனக்கு என்ன வேண்டும், கேள்" என்று கூற அரசி, "என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். ஆமான் எங்களைக் கொல்லத் தேடுகிறான்" என்கிறார்.
♔ ஆமான் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொள்கிறான். அரசியின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி, தன் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான். இதைக் கண்ட அரசர், இந்த ஆமான் என் மனைவியையே கெடுக்க எண்ணிவிட்டானா என்று கூறி, மொர்தக்காயைத் தூக்கிலிட்டுக் கொல்வதற்காக ஆமான் ஏற்பாடு செய்திருந்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தூக்கிலிடும்படி ஆணையிடுகிறார்.
♔ ஆமான் தூக்கில் ஏற்றப்பட்டு சாகிறான். அரசன் அகஸ்வேர் புதிதாக ஓர் ஆணை பிறப்பித்து, யூதர்கள் தங்கள் சமயத்திற்கேற்ப சட்டங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும், தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் அறிக்கையிடுகிறார்.
♔ யூதர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்ட அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் திருவிழாவாகக் கொண்டாட வழிபிறக்கிறது. இதுவே பூரிம் திருவிழா.
♔ தொடக்கத்தில் மொர்தக்காய் ஒரு கனவு கண்டார். அக்கனவு நிறைவேறியதை எடுத்துரைத்து, எஸ்தர் நூல் முடிவடைகிறது ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக