சீவக சிந்தாமணி
சோழர்களுடைய
ஆட்சிக் காலத்தில் இயற்றப் பெற்ற காப்பியம் சீவக
சிந்தாமணி. இது
கி. பி. ஒன்பது
அல்லது பத்தாம் நூற்றாண்டில்
தோன்றியது என்பர்.
சீவக சிந்தாமணிக்கு முன்னர்
எழுந்த பெரிய நூல்கள் எல்லாம்
வெண்பாவாலும், அகவலாலும்
இயற்றப்பட்டன. ஆனால் முதன் முறையாக
‘விருத்தம்’ என்ற ஒரு புதுச்செய்யுள்
வகையில் எழுதப்பட்டது சீவக சிந்தாமணி.
‘இது
வரையிலும் பெரிய நூல்கள் எல்லாம்
வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டு வந்த தமிழிலக்கிய வரலாற்றில், கி. பி. ஒன்பதாம்
நூற்றாண்டில், ஒரு
புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவர். அவர் சீவகன் என்ற
அரசனுடைய வரலாற்றை ஒரு காப்பியமாகப் பாடியபோது, விருத்தம்
என்ற புதுச் செய்யுள் வகையைப்
பயன்படுத்தினார். மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாட்டுகள் கொண்ட ஒரு பெருங்காப்பியத்தை
அந்தப் புதிய செய்யுள் வகையிலேயே
முழுதும் பாடி முடித்தார்’ எனப்
பேரா. மு. வரதராசனார் திருத்தக்க
தேவரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றார்.
விருத்தம் என்பது நான்கு அடிகள்
உடையது. முதல் அடியில் எத்தனை
சீர்கள் வருமோ அத்தனை சீர்களே
பிற மூன்று அடிகளிலும் வரும். முதல்
அடியில் அமைந்த சீர்களின் அமைப்பே
அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால்
முதலடியின் ஓசையே பிற மூன்று
அடிகளிலும் திரும்பத்
திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை
சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள்
வர வேண்டும் என்ற வரையறை இல்லாமையால்,விருத்தம் பலவகையாக விரிவு அடைந்தது.
ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு வரலாம்;
மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி வரலாம்.
சிறு சிறு சீர்கள் கொண்ட
ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட
மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ, உணர்ச்சி
நீண்டதாகவோ ஒலிக்கலாம். ஆகவே, விருத்தம் என்ற
பெயர் கொண்ட இது, ஒரு
செய்யுள் வகையாக இருந்தாலும் நூற்றுக்கணக்கான
ஓசை வேறுபாடுகளைப் படைத்துக்காட்ட இடம் தந்தது. தமிழ்க்கவிதையில்
ஏற்பட்ட இந்தப் புரட்சியால் உணர்ச்சிக்கு
ஏற்றவாறு கவிதையின் நடையை மாற்றியமைக்கும் வடிவச்
சிறப்பு மேலும் வளர்ந்து பெருகத்
தொடங்கியது. பிற்காலத்தில் கம்பர் இதில் பெரும்
வெற்றி பெற்றார். சேக்கிழார், கச்சியப்பர் ஆகியோரும் இந்த யாப்பைப் பயன்படுத்தி
வெற்றி பெற்றுள்ளனர்.
வடமொழியிலுள்ள க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஸ்ரீபுராணம்
ஆகிய நூல்களில் உள்ள கதையைத் தழுவிச்
சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. சீவகசிந்தாமணி
கூறும் சீவக மன்னனது வரலாறு,
வடநாட்டுச் சார்பு உடையது. எனினும்
தமிழகத்துச் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
இந்த நூல் பிற்கால
இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது
என்பர். கம்பர்,
இக்காப்பியத்திலிருந்து,
‘ஓர் அகப்பையை முகந்து கொண்டார்’ என்று கூறும் மரபு
உண்டு. நாடு நகரம் முதலியவற்றை
வருணிக்கும் முறையிலும், ஐந்திணையாகப்
பகுக்கப்படும் நிலங்களின் இயற்கை அழகுகளை விளக்கும்
முறையிலும், இசை
முதலிய கலைகளை விளக்கும் முறையிலும், சீவக
சிந்தாமணி, காப்பிய
அமைப்பின் முன்னோடியாகச் சிறப்புற்றுத் திகழ்கிறது. காதல்
சுவை மிகுந்திருந்தாலும், எண்வகைச்
சுவையும் இக்காப்பியத்தில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு
நச்சினார்க்கினியர் சிறந்த உரை ஒன்று
எழுதியுள்ளார்.
பெயர்க் காரணம்
‘சிந்தாமணி’ என்பது தேவர் உலகத்து
மணிகளுள் ஒன்று. வேண்டியோர்க்கு வேண்டியதை
வழங்கும் தன்மையுடையது. சிந்தாமணிக்
காப்பியமும் கற்போர்க்கு வேண்டியதை வழங்கும் சிறப்புடையது. சீவகனின் தாயார் முதன் முதலில்
தன் மகன் சீவகனுக்கு இட்ட
பெயர் சிந்தாமணி. ‘சீவ’ என்பது பின்னர்
‘அசரீரி’யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி
என்று பெயர் பெற்றது என்பர்.
நூலின் அமைப்பு
இந்நூல் 13 இலம்பகங்களையும்
(இலம்பகம் - காண்டம்
என்பது போன்ற பகுப்பு),
3145 செய்யுட்களையும்
உடையது. நாமகள் இலம்பகம் (379), கோவிந்தையார்
இலம்பகம் (84), காந்தருவ தத்தையார் இலம்பகம் (358), குணமாலையார் இலம்பகம் (315), பதுமையார் இலம்பகம் (246), கேமசரியார் இலம்பகம் (145), கனகமாலையார் இலம்பகம் (339), விமலையார் இலம்பகம் (106), சுரமஞ்சரியார் இலம்பகம் (107), மண்மகள் இலம்பகம் (225), பூமகள் இலம்பகம் (51), இலக்கணையார்
இலம்பகம் (221), முக்தி இலம்பகம் (547) என்பன
13 இலம்பகங்கள்.
சீவகன் கல்வி கற்றதைக்
கூறுவது நாமகள் இலம்பகம்.
கட்டியங்காரனை வென்று நாட்டை அடைந்தது
மண்மகள் இலம்பகம். சீவகன்
ஆட்சி எய்தியது பூமகள் இலம்பகம், வீடுபேறடைய விரும்பியது முத்தியிலம்பகம். பிற எட்டு இலம்பகங்களும்
முறையே, காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை,
விமலை, சுரமஞ்சரி, மாமன்மகள் இலக்கணை ஆகிய எட்டுப் பேரைச்
சீவகன் திருமணம் செய்த செய்திகளைக் கூறுகின்றன. நண்பன்
பதுமுகனுக்கு நந்தகோபன் மகள் கோவிந்தையை மணம்
முடித்து வைத்த செய்தியும் ஓர்
இலம்பகத்தில் கூறப்படுகிறது. இப் பெண்களின் பெயர்களாலேயே
இலம்பகப் பெயர்கள் அமைந்துள்ளன.
சீவகன், எட்டுப்
பெண்களைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிகள்
காப்பியத்தின் பெரும் பகுதியாக அமைந்துள்ளன.
சீவகனின் நண்பன் பதுமுகன் திருமணம்
செய்து கொண்ட நிகழ்ச்சியும் இடம்
பெற்றுள்ளது. இவை
மட்டுமல்லாமல் சீவகன் கல்வி பயின்று
சிறப்புற்ற செய்தியைக் கூறுமிடத்தும், சமண
நெறி பெற்ற செய்தியைக் கூறுமிடத்தும், அவை
திருமணமாகவே கூறப்பட்டுள்ளன. அதனால் இந்நூலை மணநூல்
என்று கூறுவர்.
திருத்தக்க தேவர்
சீவக சிந்தாமணியை இயற்றியவர்
திருத்தக்க தேவர். இவர் சோழர்
குலத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் உரை
குறிப்பிடுகின்றது. இவர், தமிழிலும் வடமொழியிலும்
புலமை உடையவர். இளமையிலேயே சமண சமயத்தைத் தழுவித்
துறவு பூண்டவர்.
திருத்தக்க
தேவர் சான்றோர்களுடன் தொடர்புகொள்ளக் கருதி, மதுரைக்குச் சென்று,
அங்குச் சங்கப் புலவர்களோடு கூடி
அளவளாவி இருந்தபோது அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் சிலர், ஆருகத சமயத்தைச்
சார்ந்தவர்கள் துறவு முதலியவற்றையே பாடுவார்களேயன்றிக்
காமச் சுவைபடக் காப்பியம் பாட இயலாதவர் என்று
கூறினர் என்றும் இதைக் கேட்ட திருத்தக்க
தேவர், காமச்
சுவையுடன் சிந்தாமணியை இயற்றினார் என்றும் ஒரு கதை நிலவுகிறது.
காப்பியம் செய்யக் கருதிய திருத்தக்க தேவர்,
தம் கருத்தினைத் தம் ஆசிரியருக்குக் கூற,
அதற்கு அவர், திருத்தக்க தேவரின்
புலமையை அறிய, அப்பொழுது அங்கே
ஓடிய ஒரு நரியைச் சுட்டிக்
காட்டி, ‘நீங்கள்
காவியம் பாடுமுன்னர், இந்த
நரியைப் பொருளாக வைத்து ஒரு நூல்இயற்றிக்
காட்டுக’ என்று
கட்டளை இட்டார் என்றும், உடனே
தேவரும் ஒரு சிறு நூல்
பாடி அதற்கு ‘நரிவிருத்தம்’ என்று பெயரிட்டுத் தம்
ஆசிரியருக்குக் காட்டினார் என்றும் குறிப்பிடுவர். அது நரியின் செயலைக்
கொண்டு நீதியை வற்புறுத்தும் நூல்.
நூலின் சிறப்பினை அறிந்த ஆசிரியர், ‘இனி
நீயிர் நினைத்தபடியே பெருங்காப்பியம் செய்க’ என்று
பணிக்க அப்பணியைத் தலைமேற் கொண்டு, அக்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி
வழங்குமாறு வேண்டினார் என்றும், ஆசிரியரும்,
‘செம்பொன் வரைமேற் பசும்பொன்’ என்று தொடங்கும் பாட்டைப்
பாடிக் கொடுத்தார் என்றும், பின்னர்த் திருத்தக்க தேவர், ‘மூவர் முதலா உலகம்’
என்னும் கடவுள் வாழ்த்தைப் பாடிக்
காப்பியத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுவர்.
சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம்
ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன். இவன், மனைவி
விசையை மீது அளவு கடந்த
காதல் கொண்டு, அரசாட்சியைக்
கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஒப்படைத்துவிட்டு,
அந்தப்புரத்திலேயே காலம் கழித்தான்.
கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து, அரசனைப்
போரிட்டுக் கொன்றுவிட முயலும் பொழுது, கருவுற்றிருந்த தன் மனைவி விசையையை
ஒரு மயில் பொறியில் ஏற்றி
அனுப்பிவிட்டான்; பின்னர்ப் போரில் மடிந்தான்.
விசையை இடுகாட்டில் சீவகனைப்
பெற்றெடுத்தாள். பின்னர்த் தவம் செய்யச் சென்றுவிட்டாள்.
கந்துக்கடன் என்ற வணிகன், சீவகனை
எடுத்து வளர்த்தான். சீவகன் அச்சணந்தி என்பவரிடம்
கல்வி கற்றான். சீவகன், தன் நண்பனுக்குக் கோவிந்தையைத்
திருமணம் செய்து வைத்தான். தானும்
தன் பல்வேறு திறப்பாடு காரணமாக எண்மரை மணந்தான்.
கட்டியங்காரனின் சூழ்ச்சியை முறியடித்து, அவனை வென்று, ஏமாங்கத நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினான். பின்னர், இல்வாழ்வின்
நிலையாமையை உணர்ந்து, ஞானம் பெற்றுத் துறவு
நிலையை அடைந்தான். இதுவே, சீவக சிந்தாமணி
கூறும் கதை.
மனிதன்
மன்னராக இருக்கலாம்; மகளிரை
மணக்கலாம்; அறநெறி
தவறாமல் போரிடலாம்; ஆனால், தன் கடமைகளை
ஆற்றிய பின்னர், இறுதியில் முற்றும் துறந்து, தவம் புரிதல் உயிரின்
உயர்ந்த கடமை என்ற சமணத்
தத்துவத்தை இக்காப்பியத்தின் கதை வெளிப்படுத்துகிறது.
சமணக் கோட்பாடு
சமண சமயத்தின் கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் மக்களிடையே எடுத்துரைப்பதற்காக எழுந்த காப்பியம் சீவக
சிந்தாமணி. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சமண சமயத் தத்துவங்களை
நன்கு அறிந்த பின்னரே இந்நூலுக்கு
உரை எழுதினார் என்று கூறுவர். அந்த அளவு சமணக்கோட்பாடுகள்
இதில் இடம்பெற்றுள்ளன. அருகனைத்
துதித்து ஆங்காங்கே காப்பியத்தில் பாடல்கள் வருகின்றன. உலக நிலையாமை, செல்வ
நிலையாமை, யாக்கை நிலையாமை என்பன
பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. துறவறத்தின் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
பஞ்ச நமஸ்காரம்
பஞ்ச நமஸ்காரம் என்பது
சமண சமயத்தின் மூல மந்திரம்.
இதன் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று குணமாலையார் இலம்பகத்தில்
இடம்பெற்றுள்ளது.
தாம் உண்ணுவதற்காக அந்தணர்
ஆக்கிய சோற்றை நாயொன்று கவ்விச்
சென்றது. அதனால் கோபங் கொண்ட
அந்தணர், நாயை அடிக்க ஓடினர்.
நாய் அஞ்சி ஓடி, அருகில்
இருந்த குளத்தில் பாய்ந்தது. அவர்கள் அதனை அடித்து, அதன்
காலை ஒடித்தனர். அதைக் கண்ட அந்த
நாயின் சொந்தக்காரன் மிகுந்த துன்பம் அடைந்தான். அவனது
துன்பத்தைக் கண்ட சீவகன், பஞ்ச நமஸ்காரத்தை நாயின்
செவியில் ஓதினான். நாய் செவிமடுத்து அதனைக்
கேட்டது. சிறிது நேரத்தில் அந்த
நாய் சுதஞ்சணன் என்னும் தேவனாகியது. சுதஞ்சணன்
தனக்கு நடந்தவைகளையெல்லாம் உணர்ந்து கொண்டான். சீவகன் செயல், பின்வரும்
பாடலில் விளக்கப்பெறுகிறது.
உறுதிமுன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தமுண்டால்
பெறுதி நற் கதியை என்று பெருநவை அகற்றினானே. (பாடல், 946)
‘முன்னே செய்த நன்மை
ஒன்றுமில்லை என்று நினைத்து நீ
வருந்த வேண்டாம். பற்றையும் ஆர்வத்தையும் விட்டுவிடு, இறப்பு என்னும் அச்சத்தைக்
கொள்ளாதே; இவ்வாறு வாழ்ந்து, இறைவன் கூறிய ஐம்பதமாகிய
அமிர்தத்தை (பஞ்ச நமஸ்காரம்) நீ
பருகினால் நற்கதியை அடைவாய்’ என்று கூறி நாயின்
பெருந்துன்பத்தை நீக்கினான்.
உலகப்பற்றை
நீக்கி, பஞ்சநமஸ்காரத்தை
அறிந்தால் நற்கதியை அடையலாம் என்ற சமணக் கோட்பாடு
இதன் வாயிலாக வெளிப்படுத்தப்படுகிறது.
மும்மணிக் கோட்பாடு :
நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்
என்பவை மும்மணிகள் எனச் சமண சமயம்
கூறுகிறது. சமணர்களின் கோட்பாடாகிய மும்மணிக் கோட்பாட்டையும் சீவகன் கூறுகிறான்.
சித்திர கூடம் என்னும் இடத்தில்
வாழும் துறவிகளுக்குச் சீவகன், அருகப்
பெருமானின் மறை மொழிகளைப் பின்பற்றுமாறு
கூறுகையில் மும்மணிக் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறான்.
மெய்வகை தெரிதல் ஞானம்
விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல்
காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது
ஒழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
இருவினை கழியு மென்றான். (பாடல், 1436)
ஞானமாவது
உண்மையை அறிதல், காட்சியாவது
அவ்வாறு அறிந்த பொருள்களைப் பற்றித்
தெளிதல், ஒழுக்கமாவது
ஐம்பொறிகளையும் அவற்றின் போக்கில் செல்லவிடாமல் தடுத்து உயிர் உய்யும் வகையில்
நடத்தலாகும். இம்மும்மணியும்
நிறைந்தபோதே இருவினையும் கெடும் என்று சீவகன்
அறிவுரை கூறுகின்றான்.
வினைக் கொள்கையும் பிறவும்
காப்பியம் முழுக்க வினைக் கொள்கை இடம்
பெறுகிறது. வர
வேண்டிய நன்மைகள் வரும். போகவேண்டிய நலன்கள்
போகும். இதனை,
ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
போம்பொருள்கள் போகும்அவை பொறியின் வகைவண்ணம் (காந்தருவதத்தையார் இலம்பகம், 356)
என்று
காட்டுகிறார் திருத்தக்க தேவர்.
மக்களாகப் பிறந்தவர்களுக்கு வாழ்நாளும் இன்பங்களும் கருவிலே அமைக்கப்பட்டன என்றும் இறப்பதும் பிறப்பதும் வினைபற்றியே நிகழ்வன என்றும் கருத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள்
யாக்கையின் இழிவு குறித்தும் பல
இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நிலையாமை குறித்து நிகழ்ச்சி மூலம் திருத்தக்க தேவர்
விளக்குகிறார். செல்வத்தைச்
சேர்த்து வைத்துத் துய்க்காமல் புதைத்துவைத்த ஒருவன், இறக்கும் நேரத்தில் புதையல் குறித்துச் சைகையில் காட்ட அதை உணராத
உறவினர்கள், அவன் விளாம்பழம் கேட்கிறான்
என நினைக்கின்றனர். அவன் இறந்த பின்பு
அவன் நினைவாக விளாங்கனியைப் படைத்தனர் என்கிறார். பிறருக்குக்
கொடுக்க மனமில்லாதவர்கள் அடையும் இழிவை,
மண்ணார் சட்டி கரத்தேந்தி
மரநாய் கௌவுங் காலினராய்
அண்ணாந் தேங்கி இரப்பாரை
அறிந்தோம் அறிந்தோம் அம்மம்ம
பண்ணார் மொழியார் பால்அடிசில்
பரிந்தங் கூட்ட முகம் திருப்பி
உண்ணா நின்ற போதொருவற்(கு)
உதவா மாந்தர் இவர்தாமே
என்றும்,
மாசித்திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின்
ஊசி மூசிய வாடை உடையாகப்
பேசிய பாவாய் பிச்சையெனக் கையகல் ஏந்திக்
கூசிக்கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்பிறவியில்
செய்யும் வினையின் பயன் அடுத்த பிறவியில்
தொடரும் என்ற கருத்தை முத்தி
இலம்பகத்தில் குறிப்பிடுகிறார். அல்லித்தண்டு முறிந்து
விழுந்தாலும் அதன் நூல் அறுந்துவிடாமல்
இரண்டு துண்டுகளையும் தொடர்புறுத்தும். அதுபோலப்
பிறவி முடிந்தாலும் வினை, அடுத்த
பிறவியுடன் அதனை இணைக்கும் என்கிறார்.
அல்லித்தாள் அற்ற போதும் அறாத நூல் அதனைப்போல
தொல்லைத்தம் உடம்புநீங்கத் தீவினை தொடந்து நீங்கா
என்று குறிப்பிடுகிறார்.
பிறப்பை
அறுத்து வீடுபேறு நிலை அடைதலைச் சமணம்
வலியுறுத்தியது.
துறவு வெளிவேடமல்ல என்பது
சமணக் கருத்து. உள்ளத்
துறவைச் சமணம் வலியுறுத்துகிறது. வீடுபேற்றை
வெளிவேடத் துறவால் அடைய முடியாது என்பது
சிந்தாமணியில் வலியுறுத்தப்படுகிறது. சடைவளர்த்துக் காட்டில் வாழ்ந்து குளத்தில் மூழ்கி எழுகிறது கரடி, எனினும்
அதன் பிறப்பொழியவில்லை. புற ஒழுக்கத்தால் மட்டும்
பிறப்பு ஒழியாது.
நீட்டிய சடையமாகி நீர்மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னிற்
காட்டிடை கரடி போகிக் கயம் மூழ்கிக் காட்டின் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமின் என்றான்
இவ்வாறு சமண சமயக் கோட்பாடுகள்
காப்பியத்தில் பல இடங்களில் சீவகன்
வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.
திருத்தக்க தேவர் சமண சமயப்
பற்றின் காரணமாகப் பிறசமயங்களைத் தாழ்த்தியும் பேசுகிறார். பிரமன், சிவபெருமான், திருமால், புத்தர் ஆகியோரை இகழ்ந்து பாடுகிறார். பிரமன் ஓர் அழகிய
பெண்ணை விடாது காண வேண்டி
நான்கு முகங்கள் கொண்டதும், அக்காமம் காரணமாக விண்ணகம் இழந்ததும் (சீவக. 207) இவரால் காட்டப்படுகின்றன. சிவபெருமான்
தனது உடலிலேயே உமையம்மையை வைத்துக் கொண்டது இகழ்வானது என்கிறார். கண்ணன் கோபியர் துகிலைக்
கவர்ந்து இகழப்பட்டதும் காமத்தால் வருந்திய பெண் கழுதைக்காகத் தானும்
ஓர் ஆண் கழுதையாகப் புத்தர்
மாறியதும் ஒரு பெண்ணைப் பாண்டவர்
ஐவரும் மணந்து கொண்டதும் இவரால்
இகழ்ச்சிகளாகச் சுட்டப்பட்டிருக்கின்றன.
இலக்கியச் சுவை
சமண சமயத்தின் பெருமைகளை
எடுத்து இயம்புவதற்காகச் சீவக சிந்தாமணி படைக்கப்பட்டாலும்,
சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் பலவகை இலக்கியச் சுவை
நிரம்பிய காப்பியமாகவும் அது திகழ்கின்றது.
கற்பனை நயம்
நாட்டு
வளத்தை விளக்கும் பொழுது சிறந்த கற்பனை
நிறைந்த பாடல்களைப் பாடியுள்ளார் திருத்தக்க தேவர். வயல்களில் தலை
சாய்த்து விளங்கும் நெற்பயிர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது பல உவமைகளைப்
படைத்துத் தம் கற்பனைத் திறனை
வெளிப்படுத்தியுள்ளார். பாம்பின் தோற்றம் போல் நாற்று வளர்ந்து,
மேன்மையல்லார் செல்வத்தைப் போலத் தலை நிமிர்ந்து
சில நாள் நின்று, கற்றறிந்த
பெரியோர் போலத் தலைகவிழ்ந்து நெற்பயிர்கள்
காய்ந்தன என்று கூறுகின்றார்.
சொல்லரும்
சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே
கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே
போல்தலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர்
மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. (நாமகள்
இலம்பகம், 53)
மேலல்லார்
செல்வம் நிலையில்லாதது; அது சில நாள்
செல்வாக்குப் பெற்றிருக்கும்; அதன் பின் ஒன்றுமில்லாமலாகிவிடும்;
காய்ந்து முதிர்ந்து, மக்களுக்குப் பயன்படும் நெற்கதிர்கள் போல் கற்றறிந்த பெரியோர்
மக்களுக்குப் பயன்படுவர், அவர்கள்
பணிந்து அடக்கமாகவே இருப்பர் என்னும் கருத்துகளை வருணனையில் வைத்துக் காட்டிய சிறப்பைக் காண்க.
இயற்கையழகு
இயற்கையின் வளத்தை வருணிப்பதிலும் திருத்தக்க
தேவர் சிறப்புடன் பாடுகிறார். இயற்கை வளம் பூம்பொழிலில்
எவ்வாறு அமைந்திருந்தது என்பதனை,
விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன
சண்பகத் தணிமலர் குடைந்து தாதுக
வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க்
கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. (நாமகள்
இலம்பகம், 50)
என்ற
பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
வானளாவிய பெரிய கிளைகள் வளையுமாறு
சண்பகம் பூத்தது. அழகிய
சண்பக மலர்களை மகரந்தப் பொடி சிந்துமாறு குடைந்து
மயில்களுடன் குயில்களும் கூவின. பார்ப்பவர்கள், தங்கள்
கண்களைத் திரும்பப் பெற முடியாதவாறு,
மிக அழகிய காட்சிகளுடன் அப்
பூம்பொழில்கள் அமைந்திருந்தன என்பது இப்பாடலின் பொருள். கிளைகளில்
பெருமளவில் பூக்கள் பூத்துள்ளன என்பதை மிக நயமாக, பூக்களின்
பாரம் தாங்காமல் பெருங்கிளைகளே வளைந்து விட்டன என்று இன்னொரு
பாடலில் கூறுகிறார்.
உவமை நயம்
திருத்தக்க
தேவர் மிக அழகான உவமைகள்
பலவற்றைக் கையாண்டுள்ளார். வானத்திலிருந்து
மழை பெய்யும் காட்சியினைச் சிறந்ததோர் உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
தேன் நிரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
மேல் நிரைத்து விசும்புற வெள்ளிவெண்
கோல் நிரைத்தன போற்கொழுந் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே. (நாமகள்
இலம்பகம் 33)
தேன் இறால் நிரைத்த
உயர்ந்த மலையின் உச்சியில் முகில்கள் வரிசையாக ஒன்றின்மேல் ஒன்றாகக் கூடி வெள்ளியால் செய்த
கோல்களை வரிசையாக நிறுத்தியதைப் போல மழைத்துளிகளைச் சொரிந்தன. தூரத்திலிருந்து
பார்க்கும் பொழுது வானத்திலிருந்து பாயும்
மழைத்துளிகள் வரிசை வரிசையாக நிறுத்தியிருக்கும்
வெள்ளிக் கம்பிகள் போல் காட்சியளிக்கின்றன என்று
நயமாகக் குறிப்பிடுகின்றார்.
எரிந்துகொண்டிருக்கும் விளக்கு காற்றடிக்கும் போது அங்குமிங்கும் அசையும்; நெகிழும்;
அணைந்துவிடுமோ என்று ஐயுறும் வகையில்
காற்றால் தாக்குண்டு மங்கலாக எரியும்; மீண்டும்
சுடர்விட்டு எரியும். இவ்வாறு காற்றின் அழுத்தத்திற்கேற்ப இயங்கும். துன்பம் வரும்போது மனம் படும் பாட்டிற்கு
இதனை அழகிய உவமையாக்கி விளக்குகிறார்
திருத்தக்க தேவர் (காந்தருவதத்தை இலம்பகம்,
16)
இவ்வாறு
சிறந்த பல உவமைகளைக் காப்பியத்தில்
பயன்படுத்தியுள்ளார்.
உணர்ச்சி வெளிப்பாடு
தன் கணவன், கட்டியங்காரன்
சூழ்ச்சியில் சிக்குண்டபோது, அரண்மனையை விட்டு வெளியேறிய விசையை
சுடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுத்தாள். அரண்மனையில், மன்னன் மகனாக, பெரிய
ஆடம்பரமான விழாக்களுக்கும், பாராட்டுகளுக்கும்
உரியவனாகப் பிறந்திருக்க வேண்டிய அரசகுமாரன், இவ்வாறு
இங்கு (சுடுகாட்டில்), யாரும்
துணையில்லாமல் திக்கற்றவனாய்ப் பிறக்க நேர்ந்ததே என்று
நினைத்துப் புலம்புகிறாள் விசையை. இதனை,
வெவ்வாய்
ஓரி
முழவாக
விளிந்தார்
ஈமம்
விளக்காக
ஒவ்வாச்
சுடுகாட்டு
உயர்அரங்கின்
நிழல்போல்
நுடங்கிப்
பேயாட
எவ்வாய்
மருங்கும்
இருந்திரங்கிக்
கூகை
குழறிப்
பாராட்ட
இவ்வா
றாகிப்
பிறப்பதோ
இதுவோ
மன்னர்க்கு
இயல்வேந்தே. (நாமகள் இலம்பகம், 309)
என்று
துன்பத்தின் எல்லையில் நின்று தாய் புலம்புவதாகத்
திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.
நரியின் குரல் முழவு என்னும்
வாத்தியமாக ஒலிக்கிறது. செத்தவர்களின்
பிணங்களைச் சுடும் ஈமத்தீயே மங்கல
விளக்காக ஒளி விடுகிறது.
சுடுகாடாகிய கலையரங்கில், நிழல்
போல் பேய்கள் கூத்தாடுகின்றன. ஆந்தைகள்
திசைகள் எங்கும் கத்துகின்றன. அக்குரல்
பலரும், பல
இடங்களிலிருந்து பாடிப் பாராட்டுதல் போல
உள்ளது. இந்நிலைக்கு ஆளாகிப் பிறக்க நேர்ந்ததே, அரசே
இதுவோ, அரசருக்குரிய இயல்பு? என்று புலம்புவதை மிகவும்
துன்பச் சுவையுடன் பாடலாக அமைந்துள்ளார் ஆசிரியர்.
கருத்துச் சிறப்பு
சீவக சிந்தாமணியில் எல்லோருக்கும்
எக்காலத்தும் பொருந்துகின்ற பல அரிய கருத்துகள்
உள்ளன. எடுத்துக்காட்டாகக் கல்வி பற்றிய கருத்தைக்
காண்போம்.
கல்வியின் சிறப்பினைப் பற்றி ஓர் அரிய
பாடல் உள்ளது. எத்தகைய பொருட் செலவு வந்தாலும்,
பொருட்படுத்தாமல் கல்வியைக் கற்க வேண்டும். அதனால்
பல நன்மைகள் விளையும் என்பதனை,
கைப்பொருள் கொடுத்துங் கற்றல்
கற்றபின் கண்ணு மாகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையு மாகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்
புகழுமாம் துணைவி யாக்கும்
இப்பொருள் எய்தி நின்றீர்
இரங்குவ தென்னை என்றான்.
என
விளக்குகிறார் திருத்தக்க தேவர்.
கைப்பொருள் கொடுத்துக் கல்வியைக் கற்பாயாக, அவ்வாறு
கற்ற கல்வி, கண்ணாகும்;
மெய்ப்பொருள் விளைவிக்கும்; துன்பத்தில் துணையாக அமையும்; அதனால் புகழ்கிட்டும்; மனைவி
போல் பேருதவியாக அமையும் என்று கல்வியின் பெருமைகளைப்
பட்டியலிட்டுக் கூறுகின்றார் ஆசிரியர்.
Thanks by :tamilperayamtamil_courses