செவ்வாய், 24 ஜூன், 2014

இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம்

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8)


உலகில் அநேக மக்கள், இயேசுகிறிஸ்துவை ஒரு நல்ல போதகராக ஏற்றுக் கொள்கிறார்கள். அவருடைய எளிய சத்தியங்களை இதுவரை யாரும் போதிக்காத சத்தியம் என்பதையும் ஏற்று கொள்கிறார்கள். ஆனால் அவர் தேவன், தேவனுடைய குமாரன் என்ற சத்தியததை ஏற்க மறுத்து, தங்களுடைய பாவத்திற்காக தம் இரத்தத்தை சிந்தின இரட்சகர்தான் இயேசு என்ற சத்தியத்தையும், தாங்கள் இரட்சிப்படைய ஒரு இரட்சகர் உண்டு என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் 50 வருடங்களும், பிளாட்டோ 50 வருடங்களும், அரிஸ்டாட்டில் 40 வருடங்களும் போதித்தனர். அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர். ஏன் அவர்களிடம் கற்றறிந்த கமாலியேலினிடத்தில்தான் பவுல் அப்போஸ்தலன் கல்வி பயின்றார் (அப்போஸ்தலர் 22:3). ஆனால் இவர்கள் மூவரும் இணைந்து 140 வருடங்கள் போதித்த போதனைகளைவிட இயேசுகிறிஸ்துவின் மூன்றறை வருட போதனை உலகத்தையே ஒரு மாறுதலுக்கு கொண்டு வந்தது. உலகத்தையே அசைத்தது. அவர்கள் மூவர் சேர்ந்து செய்த போதனைகளை கடைபிடிப்பவர்களைவிட இயேசுகிறிஸ்துவின போதனைகளை கடைபிடிப்பவர்களே அதிகம்!
இயேசுகிறிஸ்து எந்த ஓவியங்களையும் வரையவில்லை. ஆனால் அவருடைய போதனைகள், லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ராபீல் போன்ற தலைசிறந்த ஓவியர்களுக்கு அவருடைய ஓவியங்களை வரைவதற்கு ஒரு ஊன்றுகோலாய் இருந்தது.
இயேசுகிறிஸ்து ஒரு கவிதையையும் எழுதவில்லை. ஆனால், மில்டன், டான்டி போன்ற உலகப் புகழ் பெற்ற கவிஞர்கள் அவரைக் குறித்து உன்னதமான கவிதைகளை இயற்றினார்கள். அவர் ஒரு பாடலையும் எழுதவில்லை, ஆனால் பீத்தோவன், ஹைடன் போன்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் அவரைக்குறித்து, பாடல்களை அதிகமாய் இயற்றியும், அருமையான தங்களது இசையால் அவரை புகழ்ந்தும் அவரை சிறப்பித்தனர். இன்றளவும், அவரைக் குறித்த பாடல்கள் ஒவ்வொரு மொழிகளிலும் அதிகமாய் பாடப்பட்டு வருகிறது.

இப்படி உலகத்தின் தலைச்சிறந்த மனிதர்கள், எந்த துறைகளில் இருந்தாலும் நாசரேத்திலிருந்து வந்த சாதாரண தச்சனாகிய இயேசுகிறிஸ்துவை சுற்றியே தங்களது தாலந்துகளை படைத்தார்கள். ஏன் மற்றவர்களுக்கு இல்லாத அந்த சிறப்பு, மூன்றறை வருடங்கள் மாத்திரமே ஊழியம் செய்த இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்றால், அவர் மாத்திரமே உலக மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தார். தத்துவங்களோ, வேதாந்தங்களோ, இசையோ, கவிதைகளோ சாதிக்க முடியாத ஆத்தும இரட்சிப்பை இயேசுகிறிஸ்து மாத்திரமே கொடுக்க முடியும். இயேசுகிறிஸ்து மாத்திரமே நம் வாழ்விலுள்ள பாவத்தின் கட்டுகளை அறுத்தெறிய முடியும், அதற்காகவே அவர் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் சாதாரண தச்சன் அல்ல, வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர். அவரே மனுஷரூபமாய் காணப்பட்டு, அடிமையின் ரூபமெடுத்து, நம்முடைய பாவங்களுக்காக பலியானார். அவருடைய இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு இரட்சிப்பு உண்டு.
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார் என்ற எபிரேயர் 9:12 ம் வசனத்தில் பார்க்கிறோம். வெள்ளாட்டுக்கடா அல்லது இளங்காளையினுடைய இரத்தம் நமது பாவத்தை போக்காது. இயேசுகிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
ஆகையால் எந்த தத்துவ ஞானிகளும், எந்த மத வல்லுநர்களும் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அவர்களுக்காக சிந்தப்பட்டது. எந்த தலைசிறந்த கலைஞனாக இருக்கட்டும், எந்த தலைச்சிறந்த தலைவனாக இருக்கட்டும், அவர்களுடைய பாவங்களை போக்கும் ஒரே ஜீவாதார பலி இயேசுகிறிஸ்துவின் இரத்தமே. அதை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கே நித்திய ஜீவன் உண்டு. உலகிலே வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒரே ஒளி இயேசுகிறிஸ்துவே. உலகிலே வந்த எந்த மனிதனையும் இரட்சிக்கிற தேவன் இயேசுகிறிஸ்துவே. ஆமென் அல்லேலூயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD