வியாழன், 5 நவம்பர், 2015

யூதா கோத்திரத்தை சேர்ந்த இயேசு எப்படி பிரதான ஆசாரியன் ஆகமுடியும்?

(எபி 7:17)  நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.

ஆசாரியத்துவம் பெறுகிறவர், (அதாவது பலிபீடத்தில் (எபி 7:13) ஊழியம் செய்யும் ஆசாரியன்) லேவி கோத்திரத்திலிருந்து வரவேண்டும். ஆனால் தேவன் புதிதாய் மெல்கிசேதேக்கின் முறைமை ஒன்றை கொண்டு, யூதா கோத்திரத்தில் பிறந்த, தம் குமாரன் இயேசுவை பிரதான ஆசாரியராக அபிஷேகம் செய்கிறார்.  "மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை." (எபி 5:4) ஆனால் அதே தேவன் கனமான ஊழியத்துக்கான அபிஷேகத்தை, ஆரோன் முறையின்படி அல்ல, மெல்கிசேதேக்கின் முறையில் கிறிஸ்துவுக்கு கையளிக்கிறார்.

ஆரோனைவிட சிறந்த ஓர் அபிஷேகம் கிறிஸ்துவின் மேல் வைக்கப்படவேண்டியது. காரணம், ஆரோன் ஒரு மனிதர். குற்றங்களை புரிந்தவர். இஸ்ரவேலரை, பொன்கன்றுக்குட்டியின் சிலை வழியே விக்கிரக பாவத்தில் விழச்செய்தவர்.
    ஆண்டவர் இயேசுவோ, பாவமக்களை மீட்கவந்த பரிசுத்தர். எனவே, அவர்மேல் வைக்கப்படவேண்டிய அபிஷேகம் முற்றிலும் புதிதாய், மேன்மையாய் இருத்தல் அவசியம். எனவே, மெல்கிசேதேக் எனும் ஆசாரிய முறை கிறிஸ்து இயேசுவின்மேல் வருகிறது. கிறிஸ்து நம் பிரதான ஆசாரியன். ஆனால், ஆரோனின் வழியில் அல்ல. மெல்கிசேதேக்கின் வழியில்.

இந்த மெல்கிசேதேக் யார்? அப்படி என்ன விசேஷம் அவரில்? அவரைப் பற்றி..

*இவர் பெயரின் அர்த்தம் "நீதியின் ராஜா"
*இவர் சாலேமின் ராஜா. (சமாதான அரசன் என்றும் பொருள்படும்)
*உன்னததேவனின் ஆசாரியன்.
*இவர் வம்சவரலாறு அற்ற, தொடக்கமும் முடிவுமில்லாதவர்.. (அல்பா, ஒமேகா)
*ஆபிரகாமுக்கு, அப்பம், திராட்சை ரசம் கொடுத்து, ஆபிரகாமின் சந்ததிக்கே, கிறிஸ்துவின் மரணத்தை முன்னறிவித்தவர்.
*பிதாவின் நாமத்தில் ஆபிரகாமை ஆசீர்வதித்தவர்.
*ஆபிரகாமிடம் தசமபாகம் பெற்றவர்.
*சங் 110:4 ன் படி மேசியா, மெல்கிசேதேக்கின் முறையில் நித்திய ஆசாரியராவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
*தேவகுமாரனுக்கு ஒப்பானவராக அடையாளம் காணப்பட்டவர்.
*மிகவும் பெரியவர்.
*பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவர். (ஜீவிக்கிறவர்)
*ஆபிரகாம் வழியாக லேவியிடமும் தசமபாகம் பெற்றவர்.

இவையெல்லாம் கிறிஸ்து இயேசு எனும் தேவகுமாரனின் அச்சடையாளங்களே.. கிறிஸ்து இயேசு, தாவீதின் வழியே ராஜா.. மெல்கிசேதேக்கின் முறையில், நித்திய பிரதான ஆசாரியர். அழியும் மனுஷீக கட்டளையின்படியல்ல, அழியாத நித்திய கட்டளையின்படி. நாமும் தெரிந்துகொள்ளப்பட்ட ஆசாரியக் கூட்டம். நம் இயேசு பிரதான ஆசாரியர். நாம் ராஜாக்கள். நம் இயேசு ராஜாதிராஜா. இன்னும் புகழ்வோம்.. மகிமைப்படுத்துவோம்.
(1 பேது  2:9) "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்."  ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆழி இணை