வியாழன், 5 நவம்பர், 2015

இயேசு ஏன் பிரதான ஆசாரியர் என அழைக்கப்படுகிறார்?

இயேசு பிரதான ஆசாரியர்

எபிரேயர் 2 : 17-18; 4 : 15-16                                                                                                                                         
“எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்படும் பாவமில்லாத பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்” –  எபிரேயர் 4 : 15

இஸ்ரவேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்று வந்த போது, கடவுள் அவர்கள் நடுவில் வாசம் பண்ணும்படி ஒரு இடத்தை அமைக்கச் சொன்னார். அவரே தான் வாசம் பண்ணும் இடத்தின் வரைபடத்தையும் வரைந்து கொடுத்தார். இதற்கு ஆசரிப்புக் கூடாரம் அல்லது தரிசனக் கூடாரம் என்று பெயர்.
இது பரிசுத்த இடம், மகாபரிசுத்த இடம் என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. மகா பரிசுத்த இடத்தில் உடன்படிக்கை பெட்டியும் அதன்மேல் கடவுள் வீற்றிருக்கும் கிருபாசனம் என்ற மூடியும் இருந்தன. மகா பரிசுத்த இடத்தில் பரிசுத்தமுள்ள கடவுள் இருந்ததால் அங்கு சென்று பணிபுரிய ஆசாரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் மக்களுக்காக பலி செலுத்தி, மக்களுக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்து, மக்களுக்கு கடவுளின் செய்தியை அறிவித்து வந்தார்கள். இந்த ஆசாரியக் கூட்டத்தின் தலைவரே பிரதான ஆசாரியர்.

நமது தியானப்பகுதி இயேசுவை பிரதான ஆசாரியர் என்று விவரிக்கின்றது. முந்தைய ஆசாரியர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு பிரித்தெடுத்தாலும் அவர்கள் பாவஞ் செய்கிறவர்கள், பாவிகள். ஆனால் இயேசுவே பாவமில்லாத பிரதான ஆசாரியர் என்று அழைக்கப்படுகிறார்.
தரிசன கூடாரத்தின் மகா பரிசுத்த இடத்திற்கு போகும் போது பிரதான ஆசாரியன் முதலில் தனது பாவங்களுக்காகப் பலி செலுத்த வேண்டும். தான் மன்னிப்பைப் பெற்ற பின் பிறமக்களின் மன்னிப்புக்காகப் பலி செலுத்த வேண்டும். இயேசு பாவமில்லாதவராகையால் கடவுளின் சமூகத்தில் அவர் துணிவோடு செல்ல முடியும். இயேசு உலக மக்களுக்காகத் தாமே பலியானதால் பலிகளுக்கும், இரத்தஞ் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு வந்தது. இயேசு நமக்காகத் தம்மைத் தாமே கிருபாதார பலியாகப் பலியிட்டார். நமக்காகப் பிதாவினிடம் பரிந்து பேசுகிறார். பிதா வெளிப்படுத்தினவற்றை நம்மோடு பேசினார். இவ்விதமாய் ஆசாரியப் பணியைச் செய்து வந்தார்.
இயேசு பிரதான ஆசாரியர் என்று நாம் அறியும் போது ஆசாரியர்கள் யார் என்ற கேள்வி எழும். தூய பேதுரு, இயேசு பிரதான ஆசாரியர், நாம் ஆசாரியக் கூட்டம் என்கிறார். அவர் ‘கடவுளுக்குகந்த ஆவிக்குரிய பலிகளைச் செலுத்தும்படியான பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்’ என்றும் ‘ஒளியினிடத்திற்கு உங்களை வரவழைத்தவரின் குணாதிசயங்களை அறிவிக்கும்படியான ராஜரீக ஆசாரியக் கூட்டம்’ என்றும் சொல்லுகிறார்.
கடவுள் இயேசுவில் நம்மை ஞானஸ்நானத்தில் அபிஷேகம் பண்ணி ஆசாரியக் கூட்டமாக்கியிருக்கிறார். ஆசாரியப் பணியை பிரதான ஆசாரியராம் இயேசுவின் தலைமையில் நிறைவேற்றுவோம்.

1 கருத்து:

ஆழி இணை