வியாழன், 26 ஜூன், 2014

கர்த்தரின் வல்லமை

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. - ஆதி 17:1

இந்த உலகத்தில் நீங்கள் எத்தனையோ விதமான வல்லமைகளை குறித்து கேட்டிருப்பீர்கள், எத்தனையோ வல்லமைகளை கண்டிருப்பீர்கள்.  சில நேரங்களில் பிசாசின் வல்லமையினால் பாதிக்கப்பட்ட சிலரை கண்டிருப்பீர்கள்.  நீங்களும் பிசாசின் தந்திரமான கிரியைகளையும் வல்லமைகளையும் உணர்ந்திருப்பீர்கள். ஆனால் இவைகள் எல்லாவற்றைக்காட்டிலும் பெரிய வல்லமை கர்த்தருடைய வல்லமை.  இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார். அவரைப்போல் போதிக்கிறவர் யார்? (யோபு 36:22). சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? (சங் 89:8). பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் சர்வவல்லவர். இன்றைக்கு உன் கண்களுக்கு முன்பாக உன் வேதனைகள், பிரச்சனைகள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் உன் தேவனாகிய கர்த்தர் அதைவிடப்பெரியவராய் இருக்கிறார், அதை தீர்த்துவைக்க வல்லவர்.  தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அனைத்தும் உருகிப்போகும்.  மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். (எபி 7:25). தேவன் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் மோசேயின் மூலம் வழிநடத்தினார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், தேவனுக்கும் விரோதமாய் முறுமுறுத்தார்கள். நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். (யாத் 14:12). ஆனால் தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. தன் தாசனாகிய மோசேயின் மூலம் அற்புதங்களை செய்தார். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள். நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். (யாத் 14:13-14). இஸ்ரவேல் ஜனங்கள் தொடர்ந்து முறுமுறுத்தார்கள்.  தேவன் அவர்களை கானான் தேசத்திற்கு அழைத்து செல்வேன் என்ற வாக்குத்தத்தை நிறைவேற்றினார். தேவன் அவர்களை தண்டிக்காமல் தம்முடைய கிருபையால் அவர்களை நடத்தினார்.  அவர்களுக்கு தடையாய் காணப்பட்ட செங்கடலை பிளந்து வழியை அவர்களுக்கு உண்டுபண்ணினார். அவர்களை நடத்தின தேவன் உன்னையும் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவர். நீங்களும் பல முறை பாவத்திற்கும், ஜென்ம சுபாவத்திற்கும் அடிமைப்பட்டு காணப்படுகிறீர்களா? விடுதலையின்றி தவிக்கிறீர்களா?  தேவனையே சார்ந்துகொள்ளுங்கள், தேவன் உங்களை விடுவிடுத்து முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.  தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். (யோபு 42:2)

தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் எப்போதும் வாக்குத்தத்தங்களை கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார்.  அந்த வாக்குத்தத்தங்கள் பல மாதங்கள் அகியும் இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனால் தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிச்சயமாய் நிறைவேற்றுவார். அவருடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும் ஆமேன் என்றும் இருக்கிறது.  தேவன் உனக்கு செய்த வாக்குத்தத்தை நிறைவேற்ற ஒருபோதும் தாமதிப்பதில்லை. உங்களிடம் காணப்படுகிற கீழ்படியாமையின் நிமித்தம் வாக்குத்தத்தம் நிறைவேற தாமதிக்கிறது. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்@ ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். (2பேதுரு 3:9). உனக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார் என்று நம்பி விசுவாசத்தோடு காத்திருக்க வேண்டும். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். (எபி 11:11). தாவீதைக் குறித்து அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடந்தான் என்று வேதம் சொல்லுகிறது. செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், (1இராஜா 9:4). தேவன் சவுலை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக ஏற்படுத்தினார். ஆனால் சவுல் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் ராஜ்யத்தை இழந்தான். தாவீது தேவனுக்கு கீழ்படிந்து இராஜ்யத்தை பெற்றுக்கொண்டான். அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். - (1சாமு 15:28). அதை போலவே வஸ்தி ராஜாவாகிய அகாஸ்வேருக்கு கீழ்படியாதபடியினால் ராஜமேன்மையை இழந்தாள், அவளைக்காட்டிலும் உத்தமியாகிய எஸ்தருக்கு ராஜமேன்மை கிடைத்தது. ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்தது, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். - (எஸ்தர் 1:19).  தாவீதையும் எஸ்தரையும் போல தேவனுக்கு கீழ்படியுங்கள் சர்வவல்வமையுள்ள தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதை காண்பீர்கள்.
 
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். - யூதா 1:24-25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...