உலக வரலாற்றில் கிறிஸ்து இயேசுவின்
உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
ஆதாம், முதல் மனிதனாக கடவுளால்
படைக்கப்பட்டு, அவனில் இருந்து 60வது தலைமுறையில் கிறிஸ்து எனப்பட்ட தீர்க்கதரிசி,
கடவுளின் மகனாக கன்னிப்பெண்வயிற்றில் பாலகனாக பிறப்பார் என்ற செய்தியை கூறும்
பைபிள், "பாடுபட்ட சிலுவை மரணத்தைச் சந்திப்பார். மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவார்' என்றும் முன்னறிவித்தது.
உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம்,
பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன. கி.பி. 1ல் ரோம்
நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார். அந்தக் காலத்தில் இஸ்ரேல்
நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார். கி.பி.
34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத
மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது. மரணத்திற்குப்
பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால்
ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர். மூன்றாம் நாள்
அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த
பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான். போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து
செத்தவர்கள் போல ஆனார்கள். அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர்
வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு
போய்விட்டனர் என்று புலம்பினர்.
அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன்
அவர்களை நோக்கி, ""அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்,
'' என்றார். இயேசு உயிர்த்தெழுந்ததை அறிந்த யூத குருக்கள் மறைந்திருந்தனர். அவரது
சீடர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்,
""குற்றமற்ற ரத்தத்தைக் காட்டிக் கொடுத்தேன்,'' என்று மனம் நொந்து
தற்கொலை செய்து கொண்டான். பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர்
பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.
தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர். தோமாவோ இதை நம்பவில்லை. அப்போது, இயேசு
அங்கு வந்தார், தோமாவை நோக்கி, ""சந்தேகப்படாதே'' என்று கூறி அவனது
கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார். அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி
அழுதான். இயேசு சீடர்களை நோக்கி, ""கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள்.
காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,'' என்று கூறினார். அன்று முதல் இயேசு
40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள்
பரலோகத்திற்கு ஏறிச் சென்றார். உலக வரலாற்றின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது
இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி. அந்த நிகழ்வே அவரை நடுமைய
நாயகனாக(கி.மு.,-கி.பி.,) இன்று வரை சாதிக்க வைத்துள்ளது.
சீடர்களுக்கு பிறப்பித்த கட்டளை: உலகில் பிறந்த எவரும் மரிப்பது கட்டாயமான ஒன்று. ஆனால்,
இயேசு கிறிஸ்து மட்டும் பிறந்து இறந்து உயிர்த்து எழுந்தார் என்ற நிகழ்ச்சி ஒரு
சாதனை நிகழ்வாகும். உயிர்த்தெழுந்த பின் அவர் கூறியதைக் கேளுங்கள்.
""நான் மரித்தேன். ஆனாலும் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன். என்
பெயரால் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள்
நடுவில் இருக்கிறேன். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு
கொடுக்கப்பட்டிருக்கிறது. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். நீங்கள்
ஜெருசலம் தொடங்கி உலகமெங்கும் சர்வ ஜாதியாருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.
மனம் திரும்புதலுக்கென்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுங்கள்,'' என்றார். இவ்வாறு சீடர்களுக்குக் கட்டளையிட்ட பிறகு அவர்
வானத்திற்கு ஏறிப்போனார்.
ஈஸ்டர் முட்டை: அமெரிக்காவில் ஈஸ்டர் விழா அரசு விழாவாக நடத்தப்படுகிறது.
அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம்
பூசி அழகுபடுத்துகின்றனர். அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர்.
பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில்
அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம்
தடவப்படுகிறது. ஈஸ்டர் திருநாளுக்கு மறுநாள் அமெரிக்க ஜனாதிபதி தமது வெள்ளை
மாளிகையில் குழந்தைகளுக்கு ஈஸ்டர் முட்டை வழங்குகிறார். நியூயார்க் நகரில் ஈஸ்டர்
அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
ஈஸ்டர் அன்று கண்டுபிடிக்கப்பட்ட தீவு: பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியில் ஈஸ்டர் தீவு
இருக்கிறது. 1722ம் ஆண்டு போர்த்துக்கீசிய மாலுமியான ஜேக்கப் ரோக்கிவீன் என்பவர்
டேவிட்தீவைக் கண்டுபிடிக்கச் சென்றபோது, வழியில் இந்த தீவை கண்டுபிடித்தார். அவர்
கண்டுபிடித்த நாள் ஈஸ்டர் திருநாள் என்பதால், அந்த தீவுக்கும் ஈஸ்டர் என்று பெயர்
சூட்டினார். அந்த தீவில் வசித்த மக்கள், "ரப்பா நூய்' என்ற மொழியைப்
பேசியதால் பிற்காலத்தில் அப்பெயரையே தங்கள் நாட்டிற்குச் சூட்டினர். இருப்பினும்,
"ஈஸ்டர் தீவு' என்ற பெயரே மீண்டும் சூட்டப்பட்டது. இந்த தீவு தனிநாடாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சிலி நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்ட இத்தீவின்
தலைநகரம்,"ஹாங்கா ரோவா' இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே 4000க்குள் தான்.
இவர்களை ஆள்வதற்கு ஒரு கவர்னரும், ஒரு மேயரும் பணி செய்கின்றனர்.
விழாவுக்கு நாள் குறிப்பது எப்படி? கிறிஸ்துமஸ் விழாவுக்கு டிசம்பர் 25 என்று நிலையான ஒரு நாள்
குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈஸ்டர் திருநாள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.
உத்தேசமாக மார்ச் 22 முதல் ஏப்.25க்கு உட்பட்ட நாட்களில் ஏதாவது ஒரு ஞாயிறு அன்று
இந்த விழா கொண்டாடப்படும். சூரியன் நிலநடுக்கோட்டை கடந்து செல்லும் காலத்தில்,
ஏற்படும் பவுர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாள் குறிக்கப்படும் என பெடி
என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக