மணிமேகலை-விழாவறை காதை
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை.
அதில் முதல் பகுதியான விழாவறை காதை என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது.
குறிப்பாக, இந்திரவிழா நடைபெற்ற சிறப்பும், அனைவரும் சமய வேறுபாடில்லாமல் அதனைக் கொண்டாடிய
முறையும் கூறப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பழங்காலத் தமிழக மாந்தர் விழா நிகழ்த்திய முறையையும்,
ஒப்பற்ற நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம்.
இந்திரவிழா இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்பட்ட சிறப்பினையும்,
அதுவே பழங்கால மரபாக இருந்தமையையும் உணரலாம்.
பூம்புகார் நகரத்தில் சான்றோர்கள் ஒருங்கே கூடி நகரின்
நலம் நாடினார்கள் என்பதை அறியலாம்.
விழா எடுப்பதால் நகரம் வளமடையும் என்றும், விழா எடுக்காவிட்டால்
துன்பம் ஏற்படும் என்றும் ஒரு நம்பிக்கை அக்காலத்து மக்களிடையே இருந்ததை அறியலாம்.
விழாக் காலங்களில் சமயப் பூசல் இல்லாமல் சமயப் பொறை
காத்துள்ளனர் என்பதை அறியலாம்.
முரசு அறைவோர் நகரத்தையும், மழையையும், செங்கோலையும்
முதலில் வாழ்த்திப் பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்ற செய்தியினை அறியலாம்.
3.1 மணிமேகலை
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.
ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலும் மணிமேகலை சீத்தலைச் சாத்தனாராலும் பாடப்பட்டவை.
சமண சமயச் செய்திகளைச் சிலப்பதிகாரமும், பௌத்த
சமயக் கொள்கைகளை மணிமேகலையும் கூறுகின்றன.
சங்கம் மருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில்
விரிவாகப் பரவி மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. புத்தருடைய வரலாறும், அறவுரையும்
புலவர் பெருமானாகிய சாத்தனாருடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன் வெளிப்பாடே மணிமேகலையாகும்.
இந்நூல்,
1) கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின்
வரலாற்றைக் கூறுகின்றது.
2) இதனாலேயே
இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு எனச் சாத்தனார் பெயரிட்டு வழங்கினார். பின்னர்,
அது மணிமேகலை என்றே வழங்கப்படலாயிற்று.
3) நூல் முழுவதும் நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால்
பாடப்பட்டது. முப்பது காதைகளிலும் மணிமேகலையின் வாழ்க்கை வரலாறு விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
காப்பிய அமைப்பு
மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி
என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும், கோவலன் இறந்த
நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக்
காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது.
பெயர்க் காரணம்
இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை
மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு மணிமேகலை எனப் பெயர் வந்தது.
3.1.1 காப்பிய நோக்கம்
பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும். மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப்
பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை
எனலாம்.
மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்து, துறவியாகிப்
பௌத்த சமயத்தைப் போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது. இந்நூலில் அமைந்த
முப்பது காதைகளிலும் ஊடுருவிச் செல்லும் மணிமேகலையின் வரலாற்றின் மூலமாக, காப்பியத்தின்
இந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது எனலாம்.
3.1.2 காப்பியச் சிறப்பு
இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்களில்
தனி மனித வாழ்வு நிலை, சமய நிலை, சமுதாய நிலை ஆகிய மூன்றினையும் அறிந்து கொள்ளலாம்.
இம்மூன்று நிலைகளிலும் மனித வாழ்வு செம்மை அடைவதற்காக அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு
பாடப்பட்டதே மணிமேகலைக் காப்பியமாகும்.
காப்பியத் தலைவி
தன்னேரில்லாத தலைவனைக் கொண்டிருப்பதே காப்பியத்தின்
இலக்கணமாகும். ஆனால் மணிமேகலைக் காப்பியத்துள் தனக்கு நிகரில்லாத தலைவியாக மணிமேகலையே
எடுத்துக் காட்டப்படுகிறாள்.
பௌத்தக் காப்பியம்
மணிமேகலை, குறிக்கோளை வெளிப்படையாகக் காட்டிக்
கொள்கையைப் பரப்ப எழுதப் பெற்ற காப்பியம் ஆகும். ஆதலால் காப்பிய இலக்கணத்திற்கோ இலக்கியச்
சுவைக்கோ முதன்மை தராமல் பௌத்த சமயக் கருத்துகளை விளக்குவதிலே முன்னிலை வகிக்கின்றது.
இதனால் பௌத்தக் காப்பியம் என்று கூறினால் மிகையாகாது.
மாதவியின் மகளான மணிமேகலை உலக இன்ப நாட்டத்தினை
அறவே வெறுத்துப் பௌத்த மதத் துறவி (பிக்குணி)யாகித் தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்புப் பெற்றதனைச்
செந்தமிழ் நலம் சிறக்கச் சாத்தனார் பாடியுள்ளார்.
சமுதாயச் சீர்திருத்தக்
காப்பியம்
பௌத்த மதக் கோட்பாடுகள், ஒழுக்க நெறி, அரச
நெறி, பசி போக்கும் அற மாண்பு இவற்றுடன், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தல்,
கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும்
வலியுறுத்திக் கூறுகின்ற நூலாக மணிமேகலை விளங்குகிறது. இத்தகு சீர்மையில் மணிமேகலையைச்
சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்பது சாலப் பொருந்தும்.
மூன்று கருத்துகள்
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை
என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
காப்பியப் பெருமை
ஐம்பெருங் காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து
அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர். அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி
ஆகும் பெருமையுடையது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. ஐம்பெருங்
காப்பியங்கள் யாவை? [விடை]
2. இரட்டைக்
காப்பியங்கள் யாவை? அவ்வாறு வழங்குவது ஏன்? [விடை]
3. மணிமேகலை
எந்தச் சமயத்தைச் சார்ந்த காப்பியம்? [விடை]
4.
காப்பியத் தலைவியின் பெயர் யாது? [விடை]
5. மணிமேகலை
ஒரு சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்று ஏன் வழங்குகின்றனர்? [விடை
3.2 விழா அறை காதை
மணிமேகலை என்னும் காப்பியத்தில் முப்பது காதைகள்
இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதையாகும். இக்காதை,
நிலைமண்டில ஆசிரியப்பா யாப்பினால் (72 அடிகள்) அமைந்தது. பூம்புகார் நகரில் இந்திர
விழா நடப்பதனை அறிவித்தல் என்னும் செய்தியினை விளக்குகின்றது.
3.2.1 கதைச் சுருக்கம்
பண்டைக் காலத்தில், புகார் நகரத்தினை வளமுடைய நகராக
ஆக்குவதற்கு அகத்தியர் நினைத்தார். அதற்காகத் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு
நாட்கள் விழா எடுக்குமாறு, சோழ நாட்டு அரசனாகிய
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனுக்குக் கூறினார். அரசனும் அதற்கிசைந்து
அவ்விழாவைச் சிறப்புற நடத்தினான். இவ்விழாக் காலத்தில் தேவரும் புகார் நகருக்கு வந்து
தங்குவர். இந்திர விழா எடுக்கத் தவறினால் நகருக்குத் துன்பம் ஏற்படும் என்று சமயவாதிகள்
கருதி, விழா எடுக்க முடிவு செய்தனர். இச்செய்தியை வள்ளுவன் முரசு அறைந்து தெரிவித்தான்:
செய்தியைக் கூறத் தொடங்கும் முன்.
நாடு, மழை, அரசனது செங்கோல் ஆகியவை நிலவுலகில் சிறக்க
வேண்டும் என்று வாழ்த்துக் கூறினான்.
''புகார் நகர மக்களே! நம் நகரை வளமும் பொலிவும் உள்ள
நகராக அழகுபடுத்தி விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்; இறைவனுக்கும், ஊரைக் காக்கும்
தெய்வங்களுக்கும் உரிய வழிபாடு செய்து தீங்கின்றி நலமே பெற்று வாழ்க; சமயச் சான்றோர்களே,
மக்கள் மெய்ம்மொழிகளைக் கேட்டுப் பயனடையவும் வெவ்வேறு சமயங்களின் சார்பான கருத்துகளை
வெளியிடவும் பட்டி மண்டபத்தில் உரை நிகழ்த்துங்கள்; சான்றோர் உரை கேட்ட பயனால் எப்போதும்
சினமும் பகையும் இன்றி வாழுங்கள்''.
இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசு முழங்கி அறிவித்தான்.
மேலும் நாட்டில் பசி, பிணி, பகை இல்லாமல் மழையும் வளமும் நிறையட்டும் என்று வாழ்த்தி,
நகரின் பல பகுதிகளில் விழா பற்றிய செய்தியினைக் கூறி முடித்தான்.
கதை மாந்தர்கள்
விழாவறை காதை, கதை நிகழ்ச்சியில் இடம்பெறும் கதை
மாந்தர்கள் அகத்தியர், தொடித்தோட் செம்பியன், இந்திரன், தேவர்கள், முரசறையும் வள்ளுவன்
மற்றும் இந்திரவிழா எடுக்க அரசவையில் கூடியவர்கள், சமயக் கணக்கர்கள், சோதிடர், பன்மொழி
பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங் குழுவினர், எண்பேராயத்தினர் ஆவர். இவர்கள் அனைவரும்
கிளைக்கதை மாந்தர்கள்தாம். மணிமேகலைக் காப்பியக் கதையின் மாந்தர்கள் அல்லர்.
கதை அமைப்பு
இந்திர விழா நடைபெறும் பொருட்டு வள்ளுவன் முரசறைந்து,
புகார் நகருக்குச் செய்தி அறிவித்தான். இந்நிகழ்ச்சி, மக்களுக்கு விழாச் செய்தி தெரிவித்தல்
என்னும் நிலையில் அமைந்துள்ளது.
3.3 இந்திர விழா
நாவலந் தீவிலுள்ள மாந்தர் எல்லாம் பசி, பிணி, பகை
முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப்
பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத்
தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.
3.3.1 விழா வரலாறு
பழம் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது புகார் நகரமாகும்.
ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள் பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த
நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர் நினைத்தார்.
அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு
இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது புகார் நகரில்
இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு எயில்கள் எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய
தொடித்தோட் செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து,
விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான். செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில்
தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும்
புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு
மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள்.
காவிரிப் பூம்பட்டினத்திற்குப் பூம்புகார் என்ற மற்றொரு பெயரும் உண்டு. புகார் நகரம் இன்று பூம்புகார் என்னும் பெயரில்
வழங்கப்படுகிறது. விழாவறை காதைப் பகுதியால்
இந்திர விழா தொடங்கிய முறையையும், சோழ மன்னனின் அருஞ் செயலும் ஆற்றலும் வியந்து போற்றப்படும்
செய்தியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்திர விழாவினை இருபத்தெட்டு நாட்கள் சிறப்பாகக்
கொண்டாடும் மரபு இருந்துள்ளமையை உணர முடிகின்றது.
3.3.2 விழா நடத்த முடிவு செய்தல்
இந்திர விழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக
அரசவையில் கூடியவர்கள்: இம்மை, மறுமைப் பயன்களை உணர்ந்தவரும் நால்வகை உறுதிப் பொருள்களின்
உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர், காலம் கணிக்கும் சோதிடர், தம் தேவ உருவினை மறைத்து
மனித உருவம் கொண்ட கடவுளர்கள் (தேவர்கள்), பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங்
குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த முடிவு செய்தனர்.
சமயக் கணக்கரும்;தந்துறை
போகிய
அமயக் கணக்கரும்; அகலா ராகிக்
கரந்துரு எய்திய கடவுளாளரும் (13-16)
(சமயக் கணக்கர் = சமயவாதிகள்: அமயக் கணக்கர்
= காலம் கூறும் சோதிடர்; கரந்துரு எய்திய = உண்மை உருவத்தை மறைத்த.)
ஐம்பெருங் குழு : அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர்,
தூதுவர், சாரணர் ஆகிய ஐவரைக் கொண்ட குழு.
எண்பேராயம் :கரணத்து இயலவர், கரும விதிகள், கனகச்
சுற்றம், கடைக் காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர்
எனப்படும் எண்மரைக் கொண்ட குழு.
ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும் அரசனுக்குரிய
பணிகளை நிறைவேற்றக் கூடியவர்கள்.
காதையின் இப்பகுதி, பல்வேறுபட்ட மக்கள் கூடியிருத்தலைக்
காட்டுகிறது. அக்காலத்தில் சமயப் பூசல் இல்லாமல் மக்கள் சமயப் பொறை (Religious
Tolerance) காத்தனர் என்பதனை இதனால் நன்கு
உணர முடிகின்றது.
பண்டைக் காலத்தில் ஊர்ப் பொதுக் காரியங்களை நகர்
மக்களும் சான்றோரும், அரசனுடைய பணிகளைச் செய்யும் ஐம்பெருங் குழுவினரும், எண்பேராயத்தினரும்,
பலமொழி பேசுபவர்களும், ஒருங்கு குழுமியே எண்ணித் துணியும் வழக்கம் இருந்தமையை அறிய
முடிகிறது. இச்செயல் அக்காலத்து நாகரிகச் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.
3.3.3 விழாத் தொடக்கம்
இவ்விழாவினை வழக்கம்போல் நடத்தாவிடில் புகார் நகருக்கும்,
மக்களுக்கும் துன்பம் வந்து சேரும். கொடி பறக்கும் தேரினையும், படைப் பெருக்கத்தினையும்
கொண்ட கொற்றவனாகிய முசுகுந்த மன்னனுக்கு முன்னாள் ஏற்பட்ட துயரத்தினைப் போக்கியது இப்புகார்
நகரத்து நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு)ப் பூதம். அப்பூதம் தனக்கு விழாவினை வழக்கம்போல்
எடுக்காவிட்டால், சிவந்த வாயினை மடித்துத் தன் வலிமையான பற்கள் வெளித்தோன்ற, இடியின்
முழக்கம் போன்று குரலெடுத்து முழக்கமிட்டு, மக்களுக்கும், புகார் நகருக்கும் துன்பத்தைச்
செய்துவிடும் என்று சான்றோர்கள் கூறினர். மேலும், பாவிகளைப் பாசத்தால் (கயிற்றினால்)
பிடித்து உண்ணும் சதுக்கப் பூதமும் இப்புகார் நகரை விட்டு நீங்கி விடும். ஆதலினால்
இந்த மிகப்பெரிய உலகத்தில் உள்ள அரசர்கள் பலரும் ஒருங்கே வந்து கூடுகின்ற இந்திர விழாவுக்கான,
கால்கோள் விழாவினைச் (தொடக்க விழா) செய்யுங்கள் என்றனர் சமய வாதிகள்.
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க
(அடிகள் 25-26)
(ஆயிரங்கண்ணோன் = இந்திரன்)
இப்பகுதியால் இந்திர விழாவை மறந்து கைவிடத்
தகுந்த சூழ்நிலை அந்நகரத்தில் இருந்தமையை உணர முடிகிறது. புகார் நகரத்திற்கு ஏற்படும்
துன்பத்தினைத் தடுக்கவும், நகரம் வளமடையவும், இந்திர விழாவை வழக்கம்போல் கொண்டாட வேண்டும்
என்னும் செய்தி வெளிப்படுகின்றது. மேலும், உலகிலுள்ள அரசர்கள் முதலாக அனைவரும் வந்து
கொண்டாடும் விழா என்பது உணர்த்தப்படுகிறது.
வள்ளுவன் முரசு அறைந்து அறிவித்தல்
வாளேந்திய வீரர்கள், தேர்ப் படையினர், குதிரைப் படையினர்,
யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து வந்து கொண்டிருக்க, முதுகுடிப்
பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்) வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே
ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப்
பின்வரும் செய்திகளைக் கூறி அறிவித்தான்.
முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற மூதூரான இப்புகார்
நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும் மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக
என்றான். ஞாயிறு, திங்கள் முதலிய கோள்கள் தம்நிலையில் மாறுபடா வண்ணம் மன்னவன் செங்கோலனாக
ஆகுக என்று அரசனை வாழ்த்தி முரசறைந்து தெரிவித்தான்.
திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக. (32-34)
(திரு = திருமகள்; விழை = விரும்பும்; மூதூர் = பழைமை
வாய்ந்த புகார் நகரம்; கோள்நிலை = ஞாயிறு, திங்கள் முதலான கோள்கள்.)
இப்பகுதியால் முரசறைவோர் நகரத்தையும், மழையையும்,
செங்கோலையும் முதலில் வாழ்த்திப் பின்னரே செய்தி அறிவிப்பது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகின்றது.
3.3.4 விழாவின் மாண்புரைத்தல்
தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நன்மையுடைய
நாட்களிலே ஆயிரம் கண்களை உடைய இந்திரன் தலைமையாக வீற்றிருப்பான். அவ்விடத்திலே வசுக்கள்
எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவர் ஆகிய முப்பத்து
மூவர் எனப்படும் நால்வகைத் தேவர்களும், பல பிரிவினரான தேவ கணத்தினர் பதினெண்மரும் உடனிருந்து
விழாவினைச் சிறப்புச் செய்வர்.
மன்னன் கரிகால்
வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப் போயினான். அந்நாளிலே இப்புகார் நகரம்
வெறுமையாகிப் பொலிவிழந்து போயிற்று. அதுபோலத் தேவர் கோமானின் பொன்னகரமான அமராபதியும்
இந்திர விழா நாளில் வறிதாகிப் போகும் தன்மையில் தேவர்கள் இப்புகார் நகருக்கு வந்து
விடுவர். இவ்விழாவினைக் குறித்துப் பழைய நிலையினை உணர்ந்த சான்றோர்கள் முடிவாகக் கூறிய,
பொருள் பொதிந்த சொற்கள் இவையே ஆகும்.
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தொன்னிலை உணர்ந்தோர் துணிபொருள் (35-42)
(பொன்னகர் = அமராபதி; வறிதாக = வெற்றிடமாக; தொன்னிலை
= பழமையான வரலாறு)
இப்பகுதியில் இந்திர விழா நடக்கும் நாளில் தேவர்கள்
எல்லாரும் வந்து புகாரில் தங்குவதால், அமராபதியே வெற்றிடம் ஆகிவிடும் என்று கூறுவதால்
விழாவின் மேன்மை புலப்படுகின்றது.
3.3.5 மக்களின் ஈடுபாடு
வள்ளுவன் முரசறைந்து வாழ்த்திய பிறகு, மக்களுக்கு,
நகரை அழகுபடுத்தும் விதம் பற்றிக் கூறினான். கொடிகள் விளங்கும் வீதிகளிலும், குற்றமற்ற
கோயில் வாயில்களிலும் பூரணக் கும்பங்களும், பொற்பாலிகைகளும், பாவை விளக்குகளும் மற்றும்
பல வகையான மங்கலப் பொருள்களுடனே பரப்புங்கள்; வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி
ஆகியவற்றைக் கட்ட வேண்டிய இடங்களில் கட்டுங்கள்; விழாக் கோலம் நிறைந்த வீதிகளிலும்,
மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணலைப் பரப்புங்கள்; சிறுசிறு கொம்புகளில் கட்டும்
கொடி முதலானவற்றை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டுங்கள்; மேலும் நெற்றிக் கண்ணுடைய
சிவபெருமான் முதலாக இந்நகருக்குள்ளே (புகார் நகரம்) வாழும் சதுக்கத் தெய்வமான சதுக்கப்
பூதம் ஈறாக உள்ள கோயில்களில் எல்லாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்யுங்கள்
என்று மக்களுக்கு விரிவாகக் கூறி முரசறைந்தான்.
விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்
பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் (54-57)
(நுதல்விழி = நெற்றிக்கண்; சதுக்கத்துத் தெய்வம் = சதுக்கப் பூதம்)
இப்பகுதியால் மக்கள், வீதிகள், பொது இடங்கள்,
கோயில்கள் முதலான இடங்களில் அழகுபடுத்திய விதம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பகுதி இந்திரனுக்கு விழா எடுக்கும் நாட்களில்,
அந்நகரத்து உறைகின்ற எல்லாத் தெய்வங்களுக்கும் விழா நிகழ்த்தப்படும் வழக்கம் மரபாய்
இருந்தமையை உணர்த்துகின்றது.
பட்டி மண்டபம் ஏறுமின்
குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல்
தரும் மரங்களின் கீழ் அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள் அறிந்தவர்கள்
உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள் சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து
ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்; பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு
அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை ஆகிய இடங்களில் தேவர்களும்
மக்களும் சமமாக உலவிக் கொண்டு இருங்கள்; இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு
நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு செய்தி வள்ளுவன் முரசறைந்து
மக்களுக்குத் தெரிவித்தான்.
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்; (60-63)
(பற்றா மாக்கள் = பகைவர்; செற்றம் = தீராத
சினம்; கலாம் = கலகம் - போர், சண்டை)
இப்பகுதியில், விழா நாட்களில் செய்ய வேண்டியன
இவை, செய்ய வேண்டாதன இவை என்று வகைப்படுத்திச் சாத்தனார் கூறியுள்ளார்.
வாழ்த்துக் கூறுதல்
பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும்
வளமும் எங்கும் சுரக்கட்டும் என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில்
உள்ள பட்டினப் பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய செய்தியினை வள்ளுவன்
முரசறைந்து தெரிவித்தான்.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!என வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் (70-72)
(வசி = மழை.)
இப்பகுதியின் வாயிலாக, முரசறையும் செய்தி வள்ளுவன்,
தொடக்கத்திலும் முடிவிலும் நாடு, அரசன், மக்கள் முதலியோரை வாழ்த்துதல் மரபு என்ற செய்தியினை
அறிய முடிகிறது
3.4 தொகுப்புரை
தமிழ் இலக்கியங்களில் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகத்
திகழ்வது மணிமேகலை. இக்காப்பியத்தின் முதல்
காதையாகிய விழாவறை காதை என்னும் இப்பாடப் பகுதியில் பூம்புகார் நகரில் தொன்று தொட்டு
நடத்தப்பட்டு வரும் இந்திர விழாவின் சிறப்புப் பேசப்படுகிறது.
இப்பகுதி மூலம் இந்திரவிழா நடத்தப்பட்டதையும் நடத்தப்பட்ட
முறையினையும் நாம் உணர முடிகிறது; விழா நாட்களில் நகரை அழகுபடுத்திய விதம் பற்றிய கருத்துகளை
அறிய முடிகிறது.
இந்திர விழா நடப்பதைத் தெரிவிக்கும் வள்ளுவன்
முதலிலும், முடிவிலும் ஊர், மழை, அரசன் முதலானோரை வாழ்த்துவது மரபு என்னும் செய்தி
உணர்த்தப்படுகிறது.
விழா நாட்களில் மக்கள் பிறருடன் பகையும்,
கோபமும் கொள்ளக் கூடாது என்னும் பண்பு உணர்த்தப்படுகிறது. நாட்டில் பசி, பிணி, பகை
முதலியன நீங்கி மழையும் வளமும் பெருக வேண்டும் என்று வள்ளுவன் இறுதியாக வாழ்த்தினான்
என்பதும் கூறப்படுகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. விழாவறை
காதை உணர்த்தும் செய்தி யாது?
2. இந்திர
விழாவைத் தோற்றுவித்தவர் யார்? அவ்விழாவைச் சிறப்பாக நடத்திய அரசன் யார்?
3. இந்திர
விழாவைக் கொண்டாடாவிடில் என்ன நிகழும்?
4. முரசறைவோன்
வாழ்த்திய மரபு பற்றிக் குறிப்பிடுக.
5. இந்திர
விழா நடத்தப்படும் போது புகார் நகரத்தை எவ்வாறு அழகுபடுத்த வேண்டும்?
6. சாத்தனார்,
இந்திர விழா நடத்தப்படும் பொழுது மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என எவற்றைக்
குறிப்பிடுகிறார்?
clear explanation,thank you.
பதிலளிநீக்கு