போராட்டமும் முடிவும்
🌹வெளிப்படுத்தின விசேஷம் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Apokalypsis” (Book of Revelation) என்று அழைக்கப்படுகிறது.
☀ அப்பாக்கலிப்ஸிஸ் (Apokalypsis [Apocalypse]) என்பதற்கு “திறத்தல்” அல்லது “திரை நீக்குதல்” என்று அர்த்தம்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே கடைசியும், 66-வது புத்தகமாகவும் வருகிறது.
☀ இந்த புத்தகத்தின் எழுத்தாளர் யோவான்; இயேசு கிறிஸ்துவின் அடிமை என்றும், சகோதரனும், உபத்திரவத்தில் பங்காளியும், பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தவர் என்றும் இவரைப் பற்றி நமக்கு சொல்லப்படுகிறது.
☀ இந்த யோவான் யாருக்காக இதை எழுதினாரோ அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்; ஆதலால் தன்னை யாரென மேலும் அடையாளங்காட்ட வேண்டிய அவசியமில்லை.
☀ அவர் அப்போஸ்தலன் யோவானாகவே இருக்க வேண்டும். இந்த முடிவை பெரும்பாலான பூர்வ சரித்திராசிரியர்கள் ஆதரிக்கின்றனர்.
☀ யோவானின் மற்ற புத்தகங்கள் அன்பை பெருமளவு வலியுறுத்துவது உண்மைதான். அதற்காக, அதிக வல்லமை வாய்ந்த, ஊக்கமிக்க இந்த வெளிப்படுத்துதலை அவர் எழுதியிருக்க முடியாதென்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை.
☀ யோவானும் அவருடைய சகோதரனாகிய யாக்கோபும்தான் ஒரு சமாரிய பட்டணத்தின் மீது மிகுந்த கோபமூண்டவர்களாய் வானத்திலிருந்து அக்கினி விழுந்து அதிலிருந்தவர்களைப் பட்சிப்பதற்கு அனுமதி கேட்டனர். இதனிமித்தமே இவர்களுக்கு, “பொவனெர்கேஸ்” அல்லது “இடிமுழக்க மக்கள்” என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது. (மாற். 3:17; லூக். 9:54)
☀ வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயம் வேறுபட்டது என்பதை நாம் நினைவில் வைக்கையில், இதன் எழுத்துநடையிலுள்ள வேறுபாடு எந்த விதத்திலும் இடையூறாய் இருக்காது.
☀ இந்தத் தரிசனங்களில் யோவான் கண்டது இதற்கு முன் அவர் கண்ட எதற்கும் ஒத்ததாய் இருக்கவில்லை.
☀ ஆரம்ப கால அத்தாட்சியின்படி, எருசலேமின் அழிவுக்குப் பெரும்பாலும் 26 ஆண்டுகளுக்குப் பின், ஏறக்குறைய கி.பி. 96-ல் யோவான் வெளிப்படுத்துதலை எழுதினார். இது பேரரசன் டொமிஷியனுடைய ஆட்சி காலம் முடிவடையும் சமயமாக இருந்திருக்கும்.
☀ எருசலேமை அழிப்பதற்கு ரோம படையை வழிநடத்திய டைட்டஸின் சகோதரன்தான் டொமிஷியன்.
☀ டைட்டஸின் மரணத்திற்குப்பின் இவன் பேரரசனானான்; இது வெளிப்படுத்துதல் புத்தகம் எழுதப்பட்டதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
☀ டொமிஷியன் தன்னை கடவுளாக வணங்க வேண்டுமென்று இவன் கட்டளையிட்டு, (“நம்முடைய கர்த்தரும் கடவுளும்” என்று அர்த்தப்படும்) டொமினஸ் எட் டியஸ் நாஸ்டர் என்ற பட்டப்பெயரை தனக்கு சூட்டிக் கொண்டான்.
☀ பொய்க் கடவுள்களை வணங்கினவர்களுக்குப் பேரரசனை வணங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; ஆனால் ஆரம்ப கால கிறிஸ்தவர்களால் இதில் ஈடுபட முடியாது. இந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மறுத்தனர்.
☀ இவ்வாறு, டொமிஷியனின் ஆட்சி கால முடிவில் (கி.பி. 81-96), கிறிஸ்தவர்களின்மீது கொடூர துன்புறுத்துதல் துவங்கியது. டொமிஷியனே யோவானைப் பத்மு தீவுக்கு நாடுகடத்தினானென கருதப்படுகிறது.
☀ கி.பி. 96-ல் டொமிஷியன் படுகொலை செய்யப்பட்டபோது, அவனுக்குப் பதில் சகிப்புத்தன்மை மிக்க பேரரசன் நெர்வா பதவி ஏற்றான்; இவனே யோவானை விடுதலை செய்ததாக தோன்றுகிறது.
☀ பத்மு தீவில் சிறைப்பட்டிருந்த சமயத்திலேயே யோவான், தான் எழுத்தில் வடித்த தீர்க்கத்தரிசனங்களைப் பெற்றார்.
☀ எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற காரியங்களைக் குறித்து தேவன் தனக்களித்த தரிசனங்களை ஆசியாவின் 7 சபைகளுக்கும் யோவான் எழுதுகிறார். கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையில், பரிசுத்தவான்களுக்கு உபத்திரவம், துன்மார்க்கருக்குக் கோபாக்கினை மற்றும் தேவனுடைய மக்களுக்கு இறுதியான ஜெயமும், பலனும் கிடைப்பதைப் பற்றி அறிவிக்குமாறு எழுதப்பட்டது.
☀ சாத்தானுடைய தீய வல்லமைகளை முறியடித்து, தேவனோடு ஜெயங்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு அவர் பலனளிக்கும் ஒரு முடிவு காலம் சமீபமாயிருக்கிறதென்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம், தங்களுக்கு நேரிடும் உபத்திரவங்களைப் பொறுமையோடு சகிக்கும்படி அவர்களை இப்புத்தகம் ஊக்குவிக்கின்றது.
☀ இயேசு கிறிஸ்துவினுடைய அதிகதிகமான கர்த்தத்துவத்தைக் குறித்து நான்கு மடங்கான தரிசனம்; ஒவ்வொரு தரிசனத்திலும் “ஆவிக்குள்ளானேன்” என்ற சொற்றொடர் இடம் பெறுகிறது. (வெளி. 1:10; 4:2; 17:3; 21:10).
1. முதலாம் தரிசனம்: கிறிஸ்து - சபையின் கர்த்தர் (வெளி. 1:9-3:22).
2. இரண்டாம் தரிசனம்: கிறிஸ்து - சரித்திரத்தின் கர்த்தர் (வெளி. 4:1-16:21).
3. மூன்றாம் தரிசனம்: கிறிஸ்து - கர்த்தாதி கர்த்தர் (வெளி 17:1-21:10).
4. நான்காம் தரிசனம்: கிறிஸ்து - சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் (வெளி 21:11-22:5).
☀ நிகழ்ச்சிகள் உருவகமாகவும், எண்களின் மூலமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணம்: முத்திரை, கோபகலசம், கலியாணம், ஆட்டுக்குட்டி; 7 என்ற எண் சுமார் 54 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. 6, 12, 24, 666, 1260, 1,44,000 ஆகிய எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
☀ இப்புத்தகத்தை மூன்று பகுதியாக பகுத்து படிக்கலாம்: அவை:
1. நீ கண்டவை:
உயிர்த்தெழுந்த கிறிஸ்து (வெளி. 1:9-20)
2. இருப்பவை:
ஏழு சபைகளின் நிலை (வெளி. 2:1-3:22)
3. இனி சம்பவிப்பவை:
(இதில் 3 வகை) (வெளி. 4:1-22)
அ) சபைக்கு சம்பவிப்பவை:
✍ பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படல் (4:1-5)
✍ பரலோக ஆராதனை (4:1-5:14)
✍ ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் (19:9)
ஆ) யூதருக்கு சம்பவிப்பது:
✍ உபத்திரவம் (12:1-17)
✍ செய்தி பெறுதல்: இரு சாட்சிகள் (11:1-12)
✍ முத்திரையிடப்பட்டு பாதுகாப்பு (7,14)
இ) உலகத்திற்கு சம்பவிப்பது:
✍ அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி (6:1-13)
☀ ஏழு முத்திரைகள்:
1. ஆறு முத்திரைகள் உடைக்கப்படல் (6:1-17)
2. இடைவெளி: இரு ஜனத்திரள் (7:1-17)
3. ஏழாம் முத்திரை (8:1-6)
4. ஏழு எக்காளங்கள்:
✍ ஆறு எக்காளம் ஊதப்படல் (8:7-9:21)
✍ 2ம் இடைவெளி சிறு புத்தகம் (10:1-11)
5. ஏழாம் எக்காளம்: (11:15-19)
✍ 3ம் இடைவெளி 7 கோப கலசங்களையுடைய தூதர்கள் (15:1-8)
✍ 7 கோப கலசங்கள் (16:1-21)
6. மார்க்க அமைப்பு வீழ்ச்சி: (17:1-18)
7. உலக பாபிலோன் வீழ்ச்சி: (18:1-24)
✍ அர்மகதோன் யுத்தம் (19:11-20; 14:17-20)
✍ ஆயிர வருட அரசாட்சி (20:1-6)
✍ இறுதி யுத்தம் (20:7-10)
✍ வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பு (20:11-15)
✍ புதிய வானம், புதிய பூமி (21:1)
☀ இப்புத்தகத்தில் நாம் காணும் முக்கிய உண்மைகள்:
1. தேவன் சர்வ வல்லவர் (4:8; 15:3; 19:6; 11:7)
💥 பரிசுத்தர் (4:8; 15:4)
💥 ஆராதனைக்குப் பாத்திரர் (4:11; 5:12)
💥 நீதி செய்பவர் (19:6)
2. தேவன் ராஜ்யபாரம் பண்ணுபவர் - யாவும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டது. (19:6; 17:14)
3. அநீதி, அநியாயத்திற்கு தேவன் தீர்ப்பளிப்பார் - சாத்தானுக்கு முடிவு உண்டு.
4. தேவன் ஒருவரே, ஆராதனைக்கு உரியவர்; தேவனால் பயன்படுபவர்கள் அல்ல (22:8,9)
5. தேவன் தம்முடையவர்களைப் பாதுகாப்பவர் (அதிகாரம்: 7,12)
6. தேவன் நம்மிலுள்ள நற்காரியங்களை பாராட்டுபவர்; குறைகளை சுட்டிக் காண்பிக்கிறவர் (அதிகாரம்: 2,3)
7. மனந்திரும்ப வாய்ப்பளிப்பவர் (அதிகாரம்: 2,3,11)
8. தேவனுடைய கிருபையை அவமாக்கினால் தண்டனைக்கு தப்ப இயலாது (அதிகாரம்: 6,9)
9. அவரவரின் கிரியைக்கு நிச்சயம் பிரதி பலன் உண்டு (22:12)
10. நியாயத்தீர்ப்பு உண்டு; நரகம் உண்மையானது. நரகத்தில் இடம் பெறுபவர் (20:15: 21:8)
11. நித்திய மகிமை, பரலோகம், நித்திய வாழ்வு உண்மையானவை.
☀ தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது:
✍ அவர் சொல்லுவதை கவனமாக கேட்பது, ஜாக்கிரதையாகக் கைக்கொள்ளுவது, ஜெயிக்கும் வாழ்க்கை (12:10).
✍ உண்மையுள்ள வாழ்க்கை (17:14) மேலும், பரிசுத்தமாகுதல் (22:11)
✍ வசனத்தின்படி வாழ்தல் (1:3)
✍ முடிவு பரியந்தம் நிலைத்திருத்தல்.
☀ மொத்தம் 22 அதிகாரங்களும், 404 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 15-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு “கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும்” காட்டிக்கொடுக்கிறார்.(வெளி:1:19). அதாவது கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.
✍ அவர் கண்டவை என்ன? அவை முதலாம் அதிகாரத்தில் வருகிறது. சீஷனாகிய யோவான், மரித்து உயிரோடெழுந்த இயேசுவை அவர் மகிமையிலும் வல்லமையிலும் காண்கிறார்.இது கடந்தகாலம்.
✍ இருக்கிறவை என்ன? அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் வருகிறது.போதகரான யோவான் தன் சபைகளுக்கு கடிதங்களை எழுதுகிறார். இது சபையின் காலம். ஏறத்தாழ கி.பி. 33ல் தொடங்கி இன்றுவரைக்கும் அது நீடிக்கிறது. சபை இரகசிய வருகையிலே எடுத்துக்கொள்ளப்படும் வரை அது தொடரும். இது நிகழ்காலம்.
✍ இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கப்போகிறவை என்ன? நான்காம் மற்றும் ஐந்தாம் அதிகாரத்தில் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையை நாம் பரலோகத்திலே காணலாம். ஏழு வருட காலம் இது நீடிக்கும்.
அதே வேளை பூமியிலே முதல் மூன்றரை வருட உபத்திரவ காலமும் பின்பு இன்னும் மூன்றரை வருட மகா உபத்திரவகாலமும் நடைபெறும். அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலம். இதை ஆறாம் அதிகாரம் முதல் பத்தொன்பதாம் அதிகாரம் வரை நாம் காணலாம்.
அந்த ஏழு வருட முடிவில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும். இஸ்ரேலுக்கு எதிராக வரும் அர்மகெதோன் யுத்தத்தில் கர்த்தர் வெற்றி சிறப்பார், சாத்தான் பாதாளத்திலே அடைக்கப்படுவான். இயேசுகிறிஸ்து பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சியை செய்வார். இதை இருபதாம் அதிகாரத்தில் காணலாம்.
ஆயிர வருட முடிவில் சாத்தான் பாதாளத்திலிருந்து வெளியே விடப்படுவான். அவன் உலக ஜாதிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு வர கோகு மாகோகு எனும் இறுதி யுத்தம் நடைபெறும். சாத்தான் எரிகிற நரகத்திலே தள்ளப்படுவான். இந்த பழைய வானமும் பூமியும் ஒழிந்துபோம்.
இருபத்தி ஒன்று மற்றும் இருபத்தி இரண்டாம் அதிகாரத்தில் புதிய வானம் புதிய பூமி உருவாக இனி அங்கே மரணமில்லை. கண்ணீர் இல்லை. என்றென்றும் கர்த்தரோடே கூட இருப்போம். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்...