திங்கள், 28 டிசம்பர், 2015

யூதா - விசுவாசத்திற்காக போராடுதல்

விசுவாசத்திற்காக போராடுதல்

        🌹யூதா 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Iouda” (Letter [Epistle] of Jude) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 65-வது புத்தகமாக வருகிறது.

☀ இந்த நிருபத்தை “இயேசுகிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா,... அழைக்கப்பட்டவர்களுக்கு” எழுதினாரென்று தொடக்க வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன.

☀ இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் 2 பேர் யூதா என்ற பெயரில் இருந்தனர். (லூக். 6:16)

☀ யூதா தன்னை அப்போஸ்தலன் என சொல்லிக் கொள்வதில்லை; அதற்குப் பதிலாக, அப்போஸ்தலர்களை ‘அவர்கள்’ என்ற படர்க்கைச் சொல்லால் குறிப்பிட்டு தன்னை அவர்களிலிருந்து பிரித்துக் காட்டுகிறார். (யூ. 1:17,18)

☀ யூதா, தன்னை ‘யாக்கோபின் சகோதரன்’ என குறிப்பிடுகிறார். யாக்கோபு நிருபத்தின் எழுத்தாளரான, இயேசுவின் சகோதரனை இது குறிக்கிறது. (1:1)

☀ எருசலேமிலிருந்த சபையின் “தூண்களில்” ஒருவராக இருந்த இந்த யாக்கோபு எல்லாராலும் நன்கு அறியப்பட்டவர்; ஆகவேதான் யூதா தன்னை அவரோடு சம்பந்தப்படுத்தி அடையாளம் காட்டுகிறார். அப்படியென்றால் இவர் இயேசுவின் சகோதரன், மற்றவர்களும் அவ்வாறே கருதினர். (கலா. 1:19; 2:9; மத். 13:55; மாற். 6:3)

☀ எனினும், இயேசுவுடனான இரத்த சம்பந்தமான உறவுக்கு யூதா முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இயேசுகிறிஸ்துவின் அடியான்’ என தன் ஆவிக்குரிய உறவையே மனத்தாழ்மையுடன் வலியுறுத்தினார். (1 கொ. 7:22; 2 கொ. 5:16; மத். 20:27).

☀ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மியூராடோரியன் சுருளில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

☀ குறிப்பிட்ட ஒரு சபையையோ தனி நபரையோ அவர் குறிப்பிடாமல், “அழைக்கப்பட்டவர்களுக்கு” என யூதா எழுதுகிறார்; ஆகவே அவருடைய நிருபம் கிறிஸ்தவர்கள் எல்லாரும் வாசிப்பதற்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு பொது நிருபம்.

☀ யூதா புத்தகம் எங்கு எழுதப்பட்டது என குறிப்பிடப்படாவிட்டாலும், பலஸ்தீனாவாகவே பெரும்பாலும் இருக்கலாம்.

☀ இப்புத்தகம் எழுதப்பட்ட காலப்பகுதியைத் திட்டவட்டமாக குறிப்பிடுவதும் கடினம். எனினும் கிறிஸ்தவ சபை நன்கு வளர்ச்சியடைந்த காலமாய் அது இருந்திருக்க வேண்டும்; ஏனெனில், “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைக”ளிடம் யூதா கவனத்தைத் திருப்பி, 2 பேதுரு 3:3-ஐயும் மேற்கோள் காட்டுவதிலிருந்து இது தெரிகிறது. (யூ. 1:17,18)

☀ மேலும், யூதாவுக்கும் இரண்டு பேதுருவின் இரண்டாம் அதிகாரத்துக்கும் நெருங்கிய ஒப்புமை உள்ளது.

☀ ஏறக்குறைய பேதுரு எழுதின அதே சமயத்தில் எழுதப்பட்டதை இது குறிப்பாய் தெரிவிக்கிறது. அவை இரண்டுமே அந்தச் சமயத்தில் சபை எதிர்ப்படும் ஆபத்தின் பேரில் அதிக கவலையை வெளிப்படுத்துகின்றன.

☀ ஆகவே, பெரும்பாலும் அந்தக் காலப்பகுதி கி.பி. 65 ஆக இருக்கலாமென குறிப்பிடப்பட்டிருக்கிறது.

☀ கி.பி. 66-ல் செஸ்டியஸ் காலஸ் யூதரின் கலகத்தை அடக்குவதற்கு வந்ததைப் பற்றியும் கி.பி. 70-ல் எருசலேமின் வீழ்ச்சியைப் பற்றியும் யூதா குறிப்பிடாதது அந்தக் காலப்பகுதியை மேலும் ஆதரிக்கிறது.

☀ பாவிகளின்மீது குறிப்பாக நிறைவேறிய கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை யூதா தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.

☀ எருசலேம் வீழ்ச்சியடையும் என்பதாக இயேசு ஏற்கெனவே முன்னறிவித்திருந்தார். இந்த சமயத்தில் எருசலேம் அவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்தால், இந்த தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேற்றத்தை தவறாமல் குறிப்பிடுவதன் மூலம் யூதா தனது வாதத்தை மேலும் உறுதிப்படுத்தியிருப்பார். (யூ. 5-7; லூக். 19:41-44).

☀ கிறிஸ்து இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, அந்நிய போதகங்கள் கிறிஸ்தவ சபைக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தன.

☀ பவுல் அப்போஸ்தலன் 14 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தபடியே, விசுவாசத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு எதிரி படிப்படியாக ஊடுருவியிருந்தான். (2 தெ. 2:3) இந்த ஆபத்தைக் குறித்து சகோதரர்களை எச்சரிப்பதும், தற்காத்துக் கொள்ள; வெளிப்படையாய் சொல்வதில் உறுதியும் கண்டிப்பும் மிக்க யூதாவின் நிருபத்தில் இதற்கான பதிலிருந்தது.

☀ யூதா தானே 3-ம் 4-ம் வசனங்களில் தன் நிலையைத் தெளிவாக கூறினார்: ‘பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.’

☀ யூதா நிருபம் 25 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நிருபமாகும்.

☀ யூதா, பழைய ஏற்பாட்டின் சில பிரத்தியேக உதாரணங்களைப் பயன்படுத்தினார். அவை: தாங்கள் விட்டு வந்ததையே நாடிச் சென்ற இஸ்ரவேலர்கள், பாவம் செய்த தூதர்கள், சோதோம் கொமோராவின் மக்கள். அத்தகைய தீயக் காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வருவோர் அதே போன்ற தண்டனையை அனுபவிப்பார்கள் என்பதை காட்ட இவற்றைப் பயன்படுத்தினார்.

☀ மோசமான மனிதரை பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு ஒப்பிட்டார். மேலும் அவர்கள் காயீனின் பாதையில் சென்றதையும், பிலேயாமின் பாவத்துக்குள் விரைந்தோடியதையும், தங்கள் கலகத்தனமான பேச்சினிமித்தம் கோராவைப்போல் அழிந்ததையும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...