வெள்ளி, 25 டிசம்பர், 2015

1 யோவான் - அன்புக் கடிதம்

அன்புக் கடிதம்

🌹1 யோவான் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Ioannou A” (First Letter [Epistle] of John) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 62-வது புத்தகமாக வருகிறது.

☀ ஒன்று யோவான் புத்தகத்தின் எழுத்தாளர் அப்போஸ்தலனாகிய யோவான்தான்; சந்தேகமின்றி அவரே எழுதியதாக ஒப்புக்கொள்ளப்படும் நான்காவது சுவிசேஷத்துடன் அது நெருங்க ஒத்திருப்பதிலிருந்து இது தெரிகிறது.

☀ “ஜீவவார்த்தையை... பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை” கண்ணாரக் கண்ட சாட்சி என்ற தன்னைப் பற்றிய குறிப்புடன் இந்த நிருபத்தை அப். யோவான் ஆரம்பிக்கிறார். இந்தச் சொற்கள் கவனத்தைக் கவரும் விதத்தில் யோவானுடைய சுவிசேஷத்தின் தொடக்க சொற்களுடன் அதிகம் ஒத்திருக்கின்றன.

☀ இயேசு கிறிஸ்துவின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய அப்போஸ்தலன்தான் யோவான்.

☀ அப். யோவான் நீதியை பெருமளவு நேசித்தார். இது இயேசுவின் சிந்தையை ஆழமாக புரிந்துகொள்வதற்கு அவருக்கு உதவியது. ஆகையால், அவருடைய எழுத்துக்களில் அன்பே மையப் பொருளாய் மேலோங்கியிருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியமடைகிறதில்லை.

☀ எனினும், அவர் உணர்ச்சிவசப்படுபவர் அல்ல. ஏனென்றால் இயேசு அவரை ‘இடிமுழக்க மக்களில் [பொவனெர்கேஸ்]’ ஒருவராக குறிப்பிட்டார். (மாற். 3:17)

☀ உண்மையில், சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் போராடுகிறவராய் அவர் தன் மூன்று நிருபங்களையும் எழுதினார்; ஏனெனில் அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்த விசுவாசதுரோகம் அப்போது வெளிப்படையாய் தெரிந்தது.

☀ யோவானின் மூன்று நிருபங்களும் நிச்சயமாகவே காலத்துக்கேற்றவை. ஏனெனில் ‘பொல்லாங்கனின்’ ஆக்கிரமிப்பிற்கு எதிரான அவர்களுடைய போராட்டத்தில் கிறிஸ்தவர்களைப் பலப்படுத்துவதற்கு அவை உதவின. (2 தெ. 2:3,4; 1 யோ. 2:13,14; 5:18,19).

☀ பொருளடக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்த நிருபங்கள் மத்தேயு, மாற்கு சுவிசேஷங்களுக்கு வெகு காலத்திற்குப் பின் எழுதப்பட்டவை. சொல்லப்போனால், பேதுரு, பவுல் எழுதிய நிருபங்களுக்கும் வெகு பிந்தி எழுதப்பட்டவை.

☀ காலம் மாறிவிட்டது. சபைகளின் ஆரம்ப காலத்தில் அவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாயிருந்த யூதேய மதத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இதில் சொல்லப்படுவதில்லை. மேலும் பழைய  ஏற்பாட்டிலிருந்து நேரடி மேற்கோள்கள் எதுவும் இதில் காணப்படுவதில்லை.

☀ அப். யோவான் ‘கடைசிக்காலத்தையும்,’ “அநேக அந்திக்கிறிஸ்துகள்” தோன்றியிருப்பதையும் பற்றி பேசுகிறார். (1 யோ. 2:18)

☀ விசுவாசிகளை குறிப்பிடுகையில், “பிள்ளைகளே” எனவும் தன்னை ‘வயோதிபன்’ எனவும் குறிப்பிடுகிறார். (1 யோ. 2:1,12,13,18,28; 3:7,18; 4:4; 5:21).

☀ அப். யோவானின் மூன்று நிருபங்களும் பிந்தி எழுதப்பட்டது. மேலும், யோவானின் சுவிசேஷமும் ஏறக்குறைய அதே சமயத்தில் எழுதப்பட்டது என்பதை 1 யோவான் 1:3,4 வசனங்களிலிருந்து தெரிகிறது.

☀ யோவானின் மூன்று நிருபங்களும் பெரும்பாலும் கி.பி. 98-ல் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது; இது அந்த அப்போஸ்தலன் மரணமடைவதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பாக இருக்கலாம். எபேசுவுக்கருகில் அவை எழுதப்பட்டன.

☀ யோவான், தனக்கு ‘மிக நேசமானவர்களை,’ தன் ‘இளம் பிள்ளைகளை,’ ‘அநேக அந்திக்கிறிஸ்துக்களின்’ தவறான போதகங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இதை எழுதுகிறார்.

☀ அவர்களுக்குள்ளிருந்து வெளியேறிவிட்ட இந்த அந்திக்கிறிஸ்துக்கள், சத்தியத்தைவிட்டு விலகிச் செல்ல இவர்களைத் தூண்டுகின்றனர். (2:7)

☀ இந்த விசுவாச துரோகிகளான அந்திக்கிறிஸ்துக்கள், ஆரம்ப கால மறைஞான கோட்பாடு (Gnosticism) உட்பட, கிரேக்க தத்துவங்களால் வசப்படுத்தப்பட்டு இருந்திருக்கலாம். இவற்றைப் பின்பற்றிய இந்த அந்திக்கிறிஸ்துக்கள் ஒருவித மறைபொருளான விசேஷித்த அறிவைத் தாங்கள் கடவுளிடமிருந்து பெற்றிருப்பதாக சொல்லிக் கொண்டனர்.

☀ விசுவாச துரோகத்துக்கு எதிராக உறுதியான நிலைநிற்கை ஏற்றவராய் யோவான், மூன்று விஷயங்களை விரிவாக கலந்தாலோசிக்கிறார். அவை பாவம், அன்பு, அந்திக்கிறிஸ்து. பாவத்தைப் பற்றியும், பாவங்களுக்கான இயேசுவின் பலியை ஆதரித்தும் அவர் பேசுகிறார்.

☀ அந்த அந்திக்கிறிஸ்துக்கள் தாங்கள் பாவமில்லாதவர்கள், இயேசுவின் மீட்கும் பலி தங்களுக்குத் தேவையில்லையென சொல்லிக்கொண்ட சுயநீதிக்காரர்களாக இருந்ததைக் காட்டுகின்றன.

☀ சுயதிருப்தி காணும் அவர்களுடைய “அறிவு” தன்னலக்காரர்களாகவும் அன்பற்றவர்களாகவும் அவர்களை ஆக்கியிருந்தது. உண்மையான கிறிஸ்தவ அன்பை யோவான் தொடர்ந்து வலியுறுத்துகையில் அவர்களுடைய இந்த நிலைமையையும் அவர் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

☀ இயேசுவே கிறிஸ்து என்றும், மனிதராக வருவதற்கு முன்னதாகவே அவர் வாழ்ந்தார் என்றும், விசுவாசிக்கும் மனிதருக்கு இரட்சிப்பை அருள அவர் கடவுளுடைய குமாரனாக மாம்சத்தில் வந்தார் என்றும் அவர் விவரமாக எடுத்துரைக்கிறார்.

☀ இவற்றை சொல்லி இவர்களுடைய பொய்க் கோட்பாட்டை எதிர்த்து யோவான் வாதிடுகிறார். (1:7-10; 2:1,2; 4:16-21; 2:22; 1:1,2, 4:2,3,14,15)

☀ இந்தக் கள்ளப் போதகர்களை “அந்திக்கிறிஸ்துகள்” என்று யோவான் வெளிப்படையாக அடையாளம் காட்டுகிறார். கடவுளுடைய பிள்ளைகளையும் பிசாசின் பிள்ளைகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்கான பல வழிவகைகளைக் கொடுக்கிறார். (2:18,22; 4:3).

☀ மொத்தம் 5 அதிகாரங்களும், 105 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ இன்ன சபைக்காக என குறிப்பிட்டு இது எழுதப்படவில்லை. எனவே, முழு விசுவாசிகளுக்காகவும் இந்த நிருபம் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

☀ தொடக்க வாழ்த்துரையும் முடிவில் வணக்கவுரையும் இல்லாதிருப்பதும் இதைக் குறிப்பிட்டு காட்டும். சிலர் இந்தப் படைப்பை நிருபம் என்பதைப் பார்க்கிலும் ஆய்வுக் கட்டுரை என்பதாகவே வர்ணிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD