ஞாயிறு, 27 டிசம்பர், 2015

3 யோவான் - உபசரித்தல்

உபசரித்தல்

🌹3 யோவான் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Ioannou γ” (Third Letter [Epistle] of John) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 64-வது புத்தகமாக வருகிறது.

☀ தொடக்க வார்த்தைகளும், முடிவான வாழ்த்துதல்களும் இரண்டு யோவானில் காணப்படுவதைப் போன்றே உள்ளன; எழுத்தாளர் தன்னை ‘மூப்பர்’ என மறுபடியுமாக அடையாளம் காட்டுவதால், இந்த நிருபத்தின் எழுத்தாளரும் அப்போஸ்தலனாகிய யோவானே என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (2 யோ. 1)

☀ பொருளடக்கத்திலும் மொழிநடையிலும் ஒத்திசைவு காணப்படுகிறது. எனவே, மற்ற இரண்டு நிருபங்களைப் போலவே இதுவும் எபேசுவில் அல்லது அதன் சுற்றுவட்டாரத்தில் ஏறக்குறைய கி.பி. 98-ல் எழுதப்பட்டதைத் தெரிவிக்கிறது.

☀ இப்புத்தகம் சுருக்கமாக இருப்பதால், ஆரம்ப கால எழுத்தாளர்கள் இதிலிருந்து மிக அரிதாகவே மேற்கோள் காட்டினர்.

☀ யோவான் அதிகம் நேசித்த காயுவுக்கு எழுதப்பட்டிருக்கிறது இந்த நிருபம்.

☀ காயு என்ற இந்தப் பெயர், ஆதிச் சபையில் பொதுவாக நன்கு அறியப்பட்ட பெயர்.

☀ புதிய ஏற்பாடு வேதாகமத்தில் இன்னும் நான்கு இடங்களில் இப்பெயர் காணப்படுகிறது. குறைந்தது மூன்று அல்லது ஒருவேளை நான்கு பேர் அப்பெயரில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. (அப். 19:29; 20:4; ரோ. 16:23; 1 கொ. 1:15)

☀ யோவான் இந்த நிருபத்தைக் காயுவுக்கு எழுதினபோதிலும் அவர் மேற்குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவர் என திட்டமாய் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

☀ காயுவைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் இதுவே: அவர் ஆதிச் சபையின் அங்கத்தினர், யோவானின் பிரத்தியேக நண்பர்.

☀ இந்த நிருபம் தனிப்பட்ட விதத்தில் காயுவுக்காகவே எழுதப்பட்டது. அதன் காரணமாகவே இந்நிருபத்தில் எப்போதும் “நீ” என்பதாக ஒருமையில் சொல்லப்படுகிறது.

☀ பயணிகளாக வரும் சகோதரர்களை காயு உபசரித்தார்; அதற்கான போற்றுதலை அவருக்கு யோவான் தன் நிருபத்தில் குறிப்பிடுகிறார்.

☀ முதன்மையாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு என்பவனின் தொல்லையையும் குறிப்பிடுகிறார்.

☀ தெமேத்திரியு என பெயர் குறிப்பிடப்பட்டவரே இந்த நிருபத்தைக் காயுவுக்கு எடுத்துச் சென்றதாக தோன்றுகிறது. எனவே, இவர் யோவானால் அனுப்பப்பட்டவராகவும் அவருடைய பயணத்தின்போது காயுவின் உபசரிப்பு தேவைப்பட்டவராகவும் இருந்திருக்கலாம்.

☀ காயுவின் உபசரிப்பை பெற இந்த நிருபம் தெமேத்திரியுவுக்கு நிச்சயம் உதவியிருக்கும்.

☀ காயுவைப் போலவே இந்தத் தியோத்திரேப்புவையும் தெமேத்திரியுவையும் பற்றி இங்கே நாம் வாசிப்பதற்கும் அதிகமாக வேறு எதுவும் தெரியாது. எனினும், ஆதிச் சபை கிறிஸ்தவர்களிடம் நிலவிய நெருங்கிய சர்வதேச சகோதரத்துவத்தைப் பற்றி கருத்தைக் கவரும் காட்சியை இந்த நிருபம் அளிக்கிறது.

☀ மற்ற விஷயங்களோடு, ‘அவருடைய நாமத்தினிமித்தம்’ பயணம் செய்து வருவோரை உபசரிக்கும் பழக்கமும் இதில் உட்பட்டிருந்தது. விருந்தினரைத் தனிப்பட்ட விதமாய் அறிந்திராத போதிலும் அவர்கள் உபசரித்தனர். (1 யோ. 1:7).

☀ யோவான் எழுதிய மூன்றாம் நிருபம் 14 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு மிகச் சிறிய நிருபம்.

☀ பல விஷயங்களை எழுதுவதைப் பார்க்கிலும், சீக்கிரத்தில் காயுவை நேரில் காணும் வாய்ப்பிருப்பதை யோவான் வெளிப்படுத்துகிறார். (1:14).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD