சிறந்த போதனைகளைத் தன்னுள் கொண்டுள்ள
🌹எபேசியர் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Ephesious” (Letter [Epistle] to the Ephesians) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 49-வது புத்தகமாக வருகிறது.
☀ ஏறக்குறைய கி.பி. 59-61-ல், அப்போஸ்தலன் பவுல் ரோமில் முதல் தடவை சிறைப்பட்டிருக்கையில் அவர் இராயனுக்கு மனு செய்திருந்தார்.
☀ விசாரணையை எதிர்நோக்கி காவலிலிருந்தபோதிலும், சில காரியங்களைச் செய்ய அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது.
☀ பெரும்பாலும் கி.பி. 60-ல் அல்லது 61-ல் பவுல், ரோமிலிருந்து “எபேசியருக்கு” தன் நிருபத்தை எழுதினார்; அதை தீகிக்குவின் மூலம் அனுப்புகையில், ஒநேசிமுவும் அவரோடுகூட சென்றார். (எபே. 6:21; கொலோ. 4:7-9).
☀ முதல் வாக்கியத்திலேயே தன்னை எழுத்தாளராக பவுல் அடையாளம் காட்டுகிறார். மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தன்னை ‘ஆண்டவருக்குள் கைதி’ என்பதாக நான்கு தடவை குறிப்பிடுகிறார். (எபே. 1:1; 3:1,13; 4:1; 6:19).
☀ பவுல் எழுத்தாளர் அல்ல என்பதற்கான விவாதங்கள் பயனற்று போயிருக்கின்றன.
☀ பவுலின் நிருபங்கள் அடங்கிய ஒரு கையெழுத்துச் சுவடியின் 86 தாள்கள், சுமார் கி.பி. 200-ஐச் சேர்ந்ததாக கருதப்படும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் உள்ளன. இத்தாள்களுள் எபேசியருக்கு எழுதின இந்த நிருபமும் உள்ளது. இவ்வாறு, அவருடைய நிருபங்களில் ஒன்றாக அது அந்தச் சமயத்தில் வகைப்படுத்தப்பட்டது தெரிகிறது.
☀ இந்த நிருபத்தைப் பவுல் எழுதினார் என்றும் இது “எபேசியருக்கு” எழுதப்பட்டதென்றும் ஆரம்ப கால திருச்சபை எழுத்தாளர்கள் உறுதிசெய்கின்றனர். உதாரணமாக...,
✍ கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஐரீனியஸ், எபேசியர் 5:30-ஐ இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் நாம் அவருடைய சரீரத்தின் உறுப்பினரென்று சொல்லுகிறபடி.”
✍ அதே சமயத்தில் வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் பின்வருமாறு அறிவிக்கையில் எபேசியர் 5:21-ஐ மேற்கோள் காட்டினார்: “இக்காரணத்தால், எபேசியருக்கு எழுதின நிருபத்திலும் அவர், தேவ பயத்தில் ஒருவருக்கொருவர் கீழ்ப்பட்டிருங்கள் என்று எழுதுகிறார்.”
✍ கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளின் எழுத்தாளரான ஆரிகென், பின்வருமாறு சொல்கையில் எபேசியர் 1:4-ஐ மேற்கோள் காட்டினார்: “ஆனால், இந்த அப்போஸ்தலன் எபேசியருக்கு எழுதின நிருபத்தில், உலக தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்துகொண்டவர் என்று சொல்கையில், அதே மொழிநடையையே பயன்படுத்துகிறார்.”
✍ ஆரம்ப கால கிறிஸ்தவ சரித்திரத்திற்கு (கி.பி. 260-342), சான்றாதாரம் அளிக்கும் இன்னொருவர் யூஸிபியஸ்; இவர் வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் எபேசியரைச் சேர்க்கிறார்.
☀ செஸ்டர் பியட்டி பப்பைரஸ், வாடிகன் கையெழுத்துப்பிரதி எண் 1209, சினியாட்டிக் கையெழுத்துப் பிரதி ஆகியவை முதலாம் அதிகாரம் 1-ம் வசனத்தில், ‘எபேசுவில்’ என்ற வார்த்தையை உபயோகிக்காமல் விட்டுவிடுகின்றன.
☀ இவ்வாறு இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதில்லை. மேலும், (எபேசுவில் பவுல் மூன்று ஆண்டுகள் உழைத்திருந்தபோதிலும்) எபேசுவிலிருந்த தனிப்பட்ட நபர்களுக்கு வாழ்த்துதல்களை அதில் தெரிவிக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களும் சேர்ந்து, இந்த நிருபம் வேறு யாருக்காவது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எபேசு உட்பட, ஆசியா மைனரிலுள்ள எல்லா சபைகளிலும் வாசிக்கப்படுவதற்கு அனுப்பப்பட்ட நிருபமாக இருந்திருக்கலாம் என்று சிலரை ஊகிக்க செய்திருக்கிறது.
☀ எனினும், பெரும்பான்மையான மற்றநேக கையெழுத்துப் பிரதிகளில் ‘எபேசுவில்’ என்ற வார்த்தை காணப்படுகிறது. மேலும் ஏற்கெனவே நாம் பார்த்தபடி, ஆரம்ப கால திருச்சபை எழுத்தாளர்கள் இதை எபேசியருக்கு எழுதின நிருபமாகவே ஏற்றுக்கொண்டனர்.
☀ இந்த நிருபம் எதற்காக எழுதப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள சூழமைவைப் பற்றிய சில தகவல்கள் நமக்கு உதவும்.
☀ கி.பி முதல் நூற்றாண்டில், எபேசு பட்டணம் பில்லிசூனியம், மந்திரம், சோதிடம், கருவளத் தேவதை அர்டிமிஸின் வணக்கம் ஆகியவற்றிற்கு பேர்போனதாக இருந்தது.
☀ அந்தத் தேவதையின் சிலைக்காக பிரமாண்டமான கோவில் எழுப்பப்பட்டிருந்தது, அது பூர்வ உலகின் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாய் கருதப்பட்டது.
☀ 19-வது நூற்றாண்டில் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளின்படி, அந்தக் கோவில், ஏறக்குறைய 73 மீட்டர் அகலமும் 127 மீட்டர் நீளமுமுள்ள மேடையின்மீது கட்டப்பட்டிருந்தது.
☀ அந்தக் கோவில் மட்டுமே ஏறக்குறைய 50 மீட்டர் அகலமும் 105 மீட்டர் நீளமுமுடையதாய் இருந்தது. ஏறக்குறைய 17 மீட்டர் உயரமுள்ள 100 பளிங்குக்கல் தூண்கள் அதில் இருந்தன.
☀ வெண் பளிங்குக்கல் பாளங்களால் அமைந்த கூரை இருந்தது. அந்தப் பளிங்குக்கல் பாளங்களை இணைப்பதற்கு இடையே சாந்துகலவைக்குப் பதிலாக பொன் பயன்படுத்தப்பட்டிருந்ததாய் சொல்லப்படுகிறது.
☀ உலகின் நாலா புறமும் இருந்து சுற்றுலா பயணிகளை இந்தக் கோயில் கவர்ந்திழுத்தது. பண்டிகை காலங்களில் காண வருவோர் கூட்டம் லட்சக்கணக்கில் இந்த நகரத்துக்குள் திரண்டு வந்தது.
☀ வெள்ளி உருவங்களைச் செய்யும் எபேசுவின் தட்டான்கள் அர்டிமிஸ் கோவிலைப் போன்ற சின்னஞ்சிறு வெள்ளி உருவச் சிலைகளைச் செய்து யாத்திரிகருக்கு நினைவுப்பொருட்களாக விற்று வருவாய் மிகுந்த தொழிலை நடத்தி வந்தனர்.
☀ இந்த பிரசங்க ஊழியத்தின் போது, வழிப்பாட்டிற்கு உருவங்களைப் பயன்படுத்துவது தவறென பவுல் வெளிப்படையாய் சொன்னார். வெள்ளி உருவச் சிலைகளைச் செய்து விற்கும் தெமேத்திரியு போன்ற தட்டான்களின் கோபத்தை இது தூண்டிவிட்டது. அந்தப் பெரும் அமளியால் பவுல் கடைசியாக இந்தப் பட்டணத்தை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று. (அப். 19:23–20:1).
☀ புறமத வழிப்பாட்டாராலும் அர்டிமிஸின் மலைப்பூட்டும் கோவிலின் செல்வாக்காலும் சூழப்பட்டு இருந்த எபேசு சபை எதிர்ப்படுகிற பிரச்சினைகளைப் பற்றி இப்போது சிறையில் இருக்கையில் பவுல் சிந்திக்கிறார்.
☀ அபிஷேகம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் “பரிசுத்த ஆலயமாக” இருக்கிறார்கள் என்பதையும் அதில் கர்த்தர் வாசம் செய்கிறார் என்பதையும் காட்டுவதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்ட பொருத்தமான உவமையைப் பவுல் இப்போது பயன்படுத்துகிறார். (எபே. 2:21)
☀ கடவுளுடைய நிர்வாகத்தை (தம்முடைய வீட்டாரின் விவகாரங்களை அவர் கையாளும் முறை) பற்றிய ‘இந்தப் பரிசுத்த இரகசியம்’ எபேசியருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாகவே அவர், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு ஒற்றுமையையும் சமாதானத்தையும் திரும்ப நிலைநாட்டுவார். இது அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும் ஆறுதலையும் அளித்தது என்பதில் சந்தேகமில்லை. (1:9,10)
☀ கிறிஸ்துவில் யூதரும் புறஜாதியாரும் ஒன்றிணைவதை பவுல் வலியுறுத்துகிறார். ஒன்றுபடவும் ஐக்கியப்படவும் புத்தி சொல்கிறார்.
☀ மொத்தம் 6 அதிகாரங்களும், 155 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 5-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ எபேசியர் நிருபம் மிகவும் சிறந்த போதனைகளைத் தன்னுள் கொண்டுள்ளது; திருச்சபை பற்றிய அழகான உருவகங்களை தருகிறது.
☀ கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் கர்த்தருடன் ஒப்புரவாக்குவது என்னும் உயரிய கருத்தை இந்நிருபம் எடுத்துரைக்கிறது; குடும்பவாழ்வு பற்றிச் சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.
☀ இந்நிருபம் கொலோசெயர் நிருபத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பலர் இதனைக் கொலோசேயர் நிருபத்தின் விளக்கமாகக் கருதுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக