ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பிலிப்பியர் - சந்தோஷத்தின் வெளிப்பாடு

சந்தோஷத்தின் வெளிப்பாடு -

🌹 பிலிப்பியர் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Philippesious” (Letter [Epistle] to the Philippians) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 50-வது புத்தகமாக வருகிறது.

☀ இதன் முதல் வசனத்தில் குறிப்பிடப்பட்டபடி, பவுல்தான் இந்த நிருபத்தை எழுதினார் என்பதை வேதாகம உரையாசிரியர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர்.

☀ ஏறக்குறைய கி.பி. 200-ஐச் சேர்ந்ததாக கருதப்படும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் பவுலின் மற்ற எட்டு நிருபங்களுடன் இதுவும் காணப்படுகிறது.

☀ நற்செய்தியை மக்கெதோனியாவில் அறிவிக்கும்படியான அழைப்பை அப்போஸ்தலன் பவுல் தரிசனத்தில் பெற்றார்; அவரும் அவருடைய தோழர்களான லூக்கா, சீலா, இளைஞனான தீமோத்தேயு ஆகியோரும் உடனடியாக அந்த அழைப்பிற்கு கீழ்ப்படிந்தனர்.

☀ ஆசியா மைனரிலுள்ள துரோவாவிலிருந்து நெயாப்போலிக்கு அவர்கள் கப்பலில் சென்றனர். அங்கிருந்து ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டுக்குள் அமைந்திருந்த பிலிப்பிக்கு மலைப்பாதையில் உடனடியாக பயணப்பட்டனர். அது, ‘மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலையானது’ என லூக்கா விவரித்திருக்கிறார். (அப். 16:12)

☀ கி.மு. 356-ல் இந்த நகரத்தை மக்கெதோனியாவின் அரசன் இரண்டாம் பிலிப்பு (மகா அலெக்ஸாந்தரின் தகப்பன்) கைப்பற்றினார்; பின்பு இந்த நகரத்திற்கு பிலிப்பி என பெயரிடப்பட்டது.

☀ பின்னால் இதை ரோமர் கைப்பற்றினர். அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள ஆக்டேவியனுக்கு உதவிய மிக முக்கியமான போர்கள் கி.பி. 42-ல் இந்த இடத்தில் நடந்தன. இவரே பின்னர் அகஸ்து இராயன் என அழைக்கப்பட்டார். தன் வெற்றியின் நினைவாக, பிலிப்பியை இவர் ரோம குடியேற்றத்திற்கு உரியதாக்கினார்.

☀ புதிதாக ஒரு நகரத்துக்கு பிரசங்கிக்க செல்கையில், யூதர்களுக்கு முதலாவது பிரசங்கிப்பது பவுலின் வழக்கமாயிருந்தது. எனினும், ஏறக்குறைய கி.பி. 50-ல் முதன் முதலாக அவர் பிலிப்பிக்கு வந்துசேர்ந்தபோது யூதர்கள் வெகு சிலரே இருப்பதைக் கண்டார்.

☀ அங்கு ஒருவேளை ஜெபாலயம் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே ஜெபிப்பதற்காக அவர்கள் அந்தப் பட்டணத்துக்கு வெளியே ஓர் ஆற்றோரத்தில் கூடுவது வழக்கமாய் இருந்தது.

☀ பவுலின் பிரசங்கிப்பு விரைவில் பலன்தந்தது. அங்கு லீதியாள் என்னும் பெண்மணி முதலாவது சத்தியத்தை ஏற்று மனம் மாறினாள்.

☀ இவள் ஏற்கெனவே யூத மதத்துக்கு மாறினவள், வியாபாரம் செய்துவந்தாள். கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை இவள் உடனடியாக ஏற்றதோடு, அந்தப் பயணிகளைத் தன் வீட்டில் தங்கும்படி வற்புறுத்தினாள்: ‘அவள் எங்களை வரும்படி செய்தாள்’ என்று லூக்கா எழுதுகிறார்.

☀ விரைவில் எதிர்ப்பும் தலைதூக்கியது. பவுலும் சீலாவும் தடிகளால் அடிக்கப்பட்டு, சிறையிலிடப்பட்டனர். அவர்கள் சிறையில் இருக்கையில், பூமியதிர்ச்சி உண்டானது, சிறைச்சாலைக்காரனும் அவனுடைய குடும்பத்தாரும் பவுலுக்கும் சீலாவுக்கும் செவிசாய்த்து, விசுவாசிகளானார்கள்.

☀ அடுத்த நாள் பவுலும் சீலாவும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அந்த நகரத்தைவிட்டு செல்வதற்கு முன்பாக அவர்கள் லீதியாளின் வீட்டிலுள்ள சகோதரர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.

☀ அந்தப் பிலிப்பி சபை புதியதாக ஸ்தாபிக்கப்பட்டபோது எதிர்ப்பட்ட உபத்திரவங்களின் மங்காத நினைவுகளை மனதில் சுமந்தவராக பவுல் அங்கிருந்து சென்றார். (அப். 16:9-40).

☀ சில ஆண்டுகளுக்குப் பின், தன் மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது, பவுல் மறுபடியுமாகப் பிலிப்பி சபைக்கு செல்ல முடிந்தது.

☀ அந்தச் சபை ஸ்தாபிக்கப்பட்டு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நிருபத்தை அவர் எழுதினார்.

☀ பிலிப்பியிலிருந்த சகோதரர்கள் காட்டிய நெகிழ வைக்கும் அன்பு, இந்த நிருபத்தை அவர்களுக்கு எழுதும்படி பவுலைத் தூண்டியது.

☀ இது நேசத்திற்குரிய அந்த சபையின் பெயரிலேயே பரிசுத்த வேதவாக்கியங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது.

☀ இப்புத்தகம் எழுதப்பட்ட இடத்தையும் தேதியையும் ஓரளவு நிச்சயமாய் நிரூபிக்க முடியும். இது எழுதப்பட்ட சமயத்தில், ரோமப் பேரரசனுடைய மெய்க்காவலனின் பொறுப்பில் பவுல் கைதியாக இருந்தார். அங்கு அவர் இருந்த இடத்தில் கிறிஸ்தவ நடவடிக்கை தீவிரமடைந்திருந்தது. இராயனுடைய வீட்டாரில் உண்மையுள்ளோரின் வாழ்த்துதல்களைத் தெரிவிப்பதோடு தன் நிருபத்தை முடிக்கிறார்.

☀ இப்படி இவ்விஷயங்கள் அனைத்தும் இந்த நிருபம் ரோமிலிருந்து வந்ததை சுட்டிக் காட்டுகின்றன. (பிலி. 1:7,13,14; 4:22; அப். 28:30,31).

☀ ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பு காலம் ஏறக்குறைய கி.பி. 59-61 ஆக இருப்பதால், அவர் இந்த நிருபத்தை ரோமுக்கு வந்தப்பின் ஓர் ஆண்டு அல்லது அதற்கும் சற்றுப்பின் ஏறக்குறைய கி.பி. 60 அல்லது 61-ல் பெரும்பாலும் எழுதியிருக்கலாம்.

☀ சத்திய வார்த்தையினால் பிலிப்பியில் இந்தப் பிள்ளைகளைப் பெறுவதில் பவுல் கர்ப்ப வேதனைகளை அனுபவித்தார்.

☀ பவுலின் பல பயணங்களின் போதும் இக்கட்டுகளின் போதும் தேவைப்பட்டவற்றை நன்கொடையாக அளித்து பிலிப்பியர் பாசத்தைப் பொழிந்து தங்கள் தயாள குணத்தை வெளிக்காட்டினர்.

☀ பவுலுக்கும் பிலிப்பிய சகோதரர்களுக்குமிடையே உறுதியான பரஸ்பர பந்தத்தை உருவாக்கின. இப்போது அவர்கள் அனுப்பிய தயவான நன்கொடையும், எப்பாப்பிரோதீத்துவைப் பற்றி அவர்கள் கவலையுடன் விசாரித்ததும், ரோமில் நற்செய்தி பரவியதைப் பற்றி அவர்கள் அறிய விரும்பியதும் சேர்ந்து அன்பும் பாசமுமுள்ள கட்டியெழுப்பும் ஒரு நிருபத்தை அவர்களுக்கு எழுதும்படி பவுலைத் தூண்டின.

☀ மகிச்சியைக் குறிக்கும் 'காரா' எனும் கிரேக்கச் சொல் 16 முறை இந்நிருபத்தில் வருகிறது.

☀ மொத்தம் 4 அதிகாரங்களும், 104 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 1-ம் மற்றும் 2-ம் அதிகாரங்கள் பெரிய அதிகாரங்களாகவும், 3-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ பவுல் சிறைப்பட்ட போது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர். (4:18).

☀ எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் நிருபத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும். (2:25-30). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD