கிறிஸ்துவை பற்றி -
🌹 கொலோசெயர் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Kolossaeis” (Letter [Epistle] to the Colossians) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 51-வது புத்தகமாக வருகிறது.
☀ எபேசுவிலிருந்து புறப்பட்ட இருவர் ஆசியா மைனர் வழியாக மியான்டர் நதியோரமாய் கிழக்கு நோக்கி பயணப்பட்டனர். பிரிகியா நாட்டிலுள்ள லீக்கஸ் எனப்பட்ட கிளைநதியை அடைந்தபோது, மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் வழியாக நதி போகும் பாதையிலேயே செல்லும்படி அவர்கள் தென்கிழக்கு பக்கம் திரும்பினர்.
☀ செழுமையான பச்சைப் பசேல் என்ற மேய்ச்சல் நிலங்களில், கூட்டம் கூட்டமாக செம்மறியாட்டு மந்தைகளின் அழகிய காட்சி அவர்களுக்கு தென்பட்டது. (கம்பளி பொருட்கள் அந்தப் பிராந்தியத்துக்கு முக்கிய வருவாய் அளித்தன.) அந்தப் பள்ளத்தாக்கு வழியாக சென்ற இந்தப் பயணிகள் வலதுபுறத்தில் செல்வ செழிப்பான லவோதிக்கேயா நகரத்தைக் கடந்தனர்; அந்த மாகாணத்தில் ரோம நிர்வாகத்தின் மையமாய் அது திகழ்ந்தது.
☀ இடதுபுறம், நதிக்கு அப்பால் அவர்கள் ஹயராப்போலிஸைக் காண முடிந்தது. இது அதன் கோவில்களுக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கும் புகழ்பெற்று விளங்கியது. இந்த இரண்டு நகரங்களிலும், அந்தப் பள்ளத்தாக்குக்கு ஏறக்குறைய பதினாறு கிலோமீட்டருக்கு அப்பாலிருந்த சிறிய பட்டணமாகிய கொலோசெயிலும்கூட கிறிஸ்தவ சபைகள் இருந்தன.
☀ அந்தப் பயணிகள் செல்லவிருந்த இடம் கொலோசெ. அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள்.
☀ அவர்களில் ஒருவர் கொலோசெயைச் சேர்ந்தவர், ஆகையால் அந்தப் பிராந்தியம் அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. அவருடைய பெயர் ஒநேசிமு. இவர், அங்கேயிருந்த சபையின் அங்கத்தினராய் இருக்கும் தன் எஜமானரிடம் திரும்பிச் செல்லும் ஓர் அடிமை.
☀ ஒநேசிமுவுடன் செல்பவர் தீகிக்கு. இவர் அடிமை அல்ல, சுயாதீனர். இவர்கள் இருவரும் அப்போஸ்தலனாகிய பவுலினிடமிருந்து வரும் தூதுவர்கள். ‘கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற சகோதரருக்கு’ என முகவரியிட்டு அவர் எழுதிய ஒரு நிருபத்தை அவர்கள் கொண்டு செல்கின்றனர்.
☀ நமக்குத் தெரிந்த வரையில், பவுல் கொலோசெயிக்கு செல்லவேயில்லை.
☀ யூதரல்லாதவர்களே பெரும்பாலும் இந்தச் சபையில் இருந்தனர்; ஒருவேளை எப்பாப்பிராவால் இந்தச் சபை ஸ்தாபிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுடன் சேவை செய்துவந்த அவர், இப்போது பவுலுடன் ரோமில் இருந்தார். (கொலோ. 1:2)
☀ இந்த நிருபத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள வார்த்தைகளில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறபடி, அவரே இதன் எழுத்தாளர். (1:1; 4:18)
☀ சிறைச்சாலையிலிருந்து இதை எழுதினாரென்று அவருடைய முடிவுரையே காட்டுகிறது.
☀ ரோமில் முதல் தடவையாக கி.பி. 59-61-ல் சிறைப்பட்டிருந்த காலப்பகுதியில் அதை எழுதியிருக்கலாம். அந்தக் காலப்பகுதியில் அவர் உற்சாகத்தை அளிக்கும் பல நிருபங்களை எழுதினார். பிலேமோனுக்கு எழுதின நிருபத்தோடுகூட கொலோசெயருக்கு எழுதின இந்த நிருபமும் அனுப்பப்பட்டது. (கொலோ. 4:7-9; பிலே. 10, 23)
☀ எபேசியருக்கு நிருபம் எழுதிய சமயத்திலேயே இதையும் பவுல் எழுதியதாக தோன்றுகிறது; காரணம் அதில் காணப்படும் பல கருத்துக்களும் சொற்றொடர்களும் ஒரே மாதிரி இருக்கின்றன.
☀ ஏறக்குறைய கி.பி. 200-ன் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-ல் பவுலின் நிருபங்களோடு இதுவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
☀ எப்பாப்பிரா சமீபத்தில்தான் பவுலிடம் வந்தார், கொலோசெயின் நிலைமைகளைப் பற்றி அவர் கொடுத்த அறிக்கை, அந்த நிருபத்தை எழுதுவதற்கு பவுலை தூன்டியது என்பதில் சந்தேகமில்லை. (கொலோ. 1:7, 8; 4:12)
☀ குறிப்பிட்ட ஓர் ஆபத்து அங்கிருந்த கிறிஸ்தவ சபையை அச்சுறுத்தி வந்தது.
☀ பழைய மதக் கருத்துக்களை ஒன்றிணைப்பதால் புதிய மதங்கள் தொடர்ந்து உருவாகி வந்தன.
☀ துறவறம், ஆவியுலகத் தொடர்பு, விக்கிரகாராதனை சார்ந்த மூடநம்பிக்கை ஆகியவை உட்பட்ட புறமத தத்துவக் கோட்பாடுகளும் இருந்தன.
☀ இவற்றோடு, உணவுகளைத் தவிர்ப்பதும், நாட்களை அனுசரிப்பதுமான யூதப் பழக்கங்களும் அந்தச் சபையிலிருந்த சிலரைப் பாதித்திருக்கலாம்.
☀ பிரச்சினை என்னவாயினும், எப்பாப்பிரா பவுலைக் காணும்படி ரோமுக்கு இவ்வளவு நீண்ட தூரம் பயணப்பட்டு வந்ததற்குப் போதிய காரணம் இருந்ததாய் தோன்றுகிறது.
☀ எனினும், பொதுவில் முழு சபையுமே உடனடியாக ஆபத்திற்குள்ளாகும் நிலையில் இல்லை; அவர்கள் காட்டிய அன்பையும் உறுதியையும் பற்றிய எப்பாப்பிராவின் ஊக்கமூட்டும் அறிக்கை இதை காட்டுகிறது.
☀ இந்த அறிக்கையைக் கேட்டதாலேயே பவுல் இந்த நிருபத்தைக் கொலோசெய சபைக்கு எழுதினார்; அதில் திருத்தமான அறிவையும் பரிசுத்தமான வழிப்பாட்டையும் உறுதியாய் ஆதரித்து பேசினார்.
☀ புறமதத் தத்துவத்திற்கும், தூதர் வழிப்பாட்டிற்க்கும், யூதப் பாரம்பரியங்களுக்கும் மேலாக கர்த்தர் கொடுத்த கிறிஸ்துவின் மேன்மையை இது வலியுறுத்தினது.
☀ கிறிஸ்துவுடன் ஐக்கியப்பட்டிருப்போருக்கு பரலோகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அந்த மகிமையான நம்பிக்கையை இந்த நிருபம் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறது. (1:5, 27; 3:4)
☀ கிறிஸ்தவ ஊழியருக்குரிய அருமையான அறிவுரை கொலோசெயர் 4:6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”
☀ இந்த உலகின் அடிமைப்படுத்தும் சிந்தனைகளிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் விடுதலையாவதன்பேரில் கொலோசெயருக்குக் கொடுக்கப்பட்ட உற்சாகமூட்டும் அறிவுரை, இன்றைய சபைக்கும் நடைமுறை பயனுள்ள செய்தியாக நிலைத்திருக்கிறது.
☀ மொத்தம் 4 அதிகாரங்களும், 95 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 1-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 4-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ கொலோசெயருக்கு எழுதின இந்த நிருபத்தை நீங்கள் இன்னும் முழுமையாய் ஆராய்கையில் பயனுள்ளதும், நடைமுறையானதும் போதனைக்குரியதுமான இன்னும் பல மணிக்கற்களைக் காண்பீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக