திங்கள், 14 டிசம்பர், 2015

1 தெசலோனிக்கேயர் - அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தது

அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த

🌹1 தெசலோனிக்கேயர்🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Thessalonikeis A” (First Letter [Epistle] to the Thessalonians) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 52-வது புத்தகமாக வருகிறது.

☀ அப்போஸ்தலன் பவுல் எழுதியவற்றுள் இதுவே முதலாவது நிருபம்.

☀ அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தை ஏறக்குறைய கி.பி. 50-ல் மேற்கொண்டார். அப்போது மக்கெதோனியா பட்டணமாகிய தெசலோனிக்கேயுக்குச் சென்று அங்கே ஒரு கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்தார்.

☀ அடுத்த வருடத்தில் அவர் சில்வானுடனும் (அப்போஸ்தலர் புத்தகத்தில் சீலா என்பவர்) தீமோத்தேயுவுடனும் கொரிந்துவில் தங்கியிருந்தார். அச்சமயம் தெசலோனிக்கேயருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.

☀ அவர்களுக்கு ஆறுதல் அளித்து விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே இந்த முதல் நிருபத்தை எழுதினார். இது பெரும்பாலும் கி.பி. 50-ன் இறுதியாக இருக்கலாம்.

☀ இந்தப் புத்தகத்தை எழுதியதற்கு அத்தாட்சியாக பவுல் தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வேதவசனங்களின் மீதிபாகத்தோடு ஒத்திசைந்துள்ளது. (1 தெ. 1:1; 2:18)

☀ செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46) என்பது சில பைபிள் புத்தகங்களின் தொகுப்பு; இது ஏறக்குறைய கி.பி. 200-க்குரியது; ஒன்று தெசலோனிக்கேயர் புத்தகம் இதில் இருக்கிறது.

☀ அதேபோல இப்போது பெல்ஜியத்திலுள்ள கென்ட்டில் இருக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்குரிய மற்றொரு பப்பைரஸில் (P30), முதலாம் இரண்டாம் தெசலோனிக்கேயரின் சில பகுதிகள் உள்ளன.

☀ தொடக்கத்திலிருந்தே, இந்தச் சபை கடும் துன்புறுத்துதலையும் எதிர்ப்பையும் அனுபவித்தது. அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்தில் பவுலும் சீலாவும் தெசலோனிக்கேயுக்கு வந்து சேர்ந்ததைப் பற்றி லூக்கா அறிவிக்கிறார்.

☀ “அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.” தொடர்ந்து வந்த மூன்று ஓய்வுநாட்களின்போது பவுல் அவர்களுக்குப் பிரசங்கித்து வேத வசனங்களிலிருந்து உண்மைகளை எடுத்துக்கூறினார்.

☀ இதற்கும் அதிகமான காலம் அங்கே தங்கினார் என்பதற்கான குறிப்புகளும் இருக்கின்றன. எவ்வாறெனில், அவர் தனக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு சபையையும் ஸ்தாபித்து ஒழுங்குபடுத்தினார். ஆகவே அதிக காலம் இருந்திருப்பார். (அப். 17:1; 1 தெ. 2:9; 1:6,7).

☀ தெசலோனிக்கேயில் அப்போஸ்தலன் பிரசங்கித்ததால் ஏற்பட்ட நல்ல விளைவைப் பற்றி அப்போஸ்தலர் 17:4-7-ல் விளக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

☀ பவுலின் கிறிஸ்தவ ஊழியம் நற்பயன் தந்தது; அதைக் கண்டு பொறாமைப்பட்ட யூதர்கள் ஒரு கலகக்கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு பட்டணத்தில் அமளி உண்டாக்கினர்.

☀ யாசோனின் வீட்டைத் தாக்கி, அவரையும் மற்ற சகோதரரையும் இழுத்துச் சென்றனர். அவர்களை பட்டணத்து அதிகாரிகளிடம் கொண்டுபோய், “உலகத்தைக் குழப்புகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களை யாசோன் வரவேற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, ராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய் நடக்கிறார்களென்று” கூக்குரலிட்டனர்.

☀ யாசோனும் மற்றவர்களும் விடுவிக்கப்படுவதற்கு முன்பாக பிணையத்தொகை அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.

☀ அங்கிருந்த சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் அந்த இரவே பெரோயாவுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களது பாதுகாப்புக்காகவும் சபையிலிருந்த சகோதரர்களின் பாதுகாப்புக்காகவும் இப்படிச் செய்தார்கள்.

☀ ஆனால் தெசலோனிக்கேயில் இருந்த சபை இப்போது நல்லவிதமாக ஸ்தாபிக்கப்பட்டது.

☀ வெறிபிடித்த யூதர்கள் பவுலை பின்தொடர்ந்து பெரோயாவிற்கு வந்தனர்; அங்கே அவர் பிரசங்கிப்பதை நிறுத்தும்படி பயமுறுத்தினர்.

☀ பின்பு அவர் கிரீஸிலுள்ள அத்தேனே பட்டணத்துக்குச் சென்றார். எனினும் தெசலோனிக்கேயிலிருந்த தன் சகோதரர்கள் உபத்திரவத்தை எவ்வாறு சகிக்கிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருந்தார்.

☀ அவர்களிடம் திரும்பி வருவதற்கு இருமுறை பவுல் முயற்சித்தார். ஆனால் ‘சாத்தான் அவரை தடுத்துவிட்டான்.’ (1 தெ. 2:17, 18)

☀ விசுவாசத்தில் ‘குழந்தையாக’ இருந்த அந்த சபையைப் பற்றி பவுல் அதிக கவலை அடைந்தார்; அந்த சபையார் அனுபவித்த உபத்திரவத்தையும் அறிந்திருந்தார்.

☀ எனவே, சகோதரர்களுக்கு ஆறுதலளிக்கவும் விசுவாசத்தை இன்னும் உறுதியுடன் காத்துக்கொள்வதற்கு உதவுவதற்கும் தீமோத்தேயுவை தெசலோனிக்கேயுக்கு அனுப்பினார்.

☀ தீமோத்தேயு அவருடைய இருதயத்தை மகிழ்விக்கும் செய்தியுடன் திரும்பிவந்தார்; அவர்கள் பயங்கரமான துன்புறுத்தலை அனுபவித்தபோதிலும் உறுதியுடன் உத்தமத்தைக் காத்துவருகின்றனர் என்பதே அந்தச் செய்தி. அதைக் கேட்டு பவுல் பூரிப்படைந்தார்.

☀ மக்கெதோனியா மற்றும் அகாயா முழுவதிலுமிருந்த விசுவாசிகளுக்கு அவர்களுடைய உறுதியான நிலைநிற்கை இதற்குள் ஒரு முன்மாதிரியாகிவிட்டது. (1:6-8; 3:1-7)

☀ அவர்கள் உண்மையுடன் சகித்து நிலைத்திருந்ததற்காக கர்த்தருக்கு பவுல் நன்றி கூறினார்.

☀ ஆனால், ‘குழந்தைப்’ பருவத்தைக் கடந்து முதிர்ச்சி அடைவதற்காக அந்தச் சபை வளரும்போது வழிநடத்துதலும் அறிவுரையும் தேவை என்பதையும் உணர்ந்தார்.

☀ இதன் காரணமாக, பவுல் கொரிந்துவில் இருக்கும்போது தெசலோனிக்கேயருக்குத் தன் முதல் நிருபத்தை எழுதினார். அப்போது தீமோத்தேயுவும் சில்வானும் அவருடன் இருந்தனர்.

☀ மொத்தம் 5 அதிகாரங்களும், 89 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 5-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ ஆரம்பக்கால நிருபமாக இருப்பதால் இதில் பக்தி வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை.

☀ இருப்பினும், உயிர்த்தெழுதல், இயேசுவின் இரண்டாம் வருகை ஆகியவை பற்றிய இதன் உள்ளடக்கம் முக்கியமானவை.

☀ பவுல் அவர்களுடைய நகரத்தில் இருந்தபோது கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளின் ராஜ்யத்தைப் பற்றி தைரியமாய்ப் பிரசங்கித்தார்.

☀ ஏனெனில், “இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவரை ராஜா என்று சொல்லி ராயனின் கட்டளைகளுக்கு விரோதமாய் நடக்கிறார்கள்” என்பதாக பவுலையும் அவருடைய தோழர்களையும் குற்றப்படுத்தியதிலிருந்து இது தெரிய வருகிறது. (அப். 17:7,; 1 தெ. 2:19; 3:13; 4:15; 5:23)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD