கிறிஸ்துவைப் பற்றி யூதர்களுக்கு
🌹 எபிரெயர் 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Ebraious” (Letter [Epistle] to the Hebrews) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 58-வது புத்தகமாக வருகிறது.
☀ எபிரெயர் புத்தகத்தை பவுல்தான் எழுதினார் என்பதை சில விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். பவுலின் பெயர் இந்த நிருபத்தில் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு காரணம். இது உண்மையில் ஒரு பிரச்சினை அல்ல. அதிகாரப்பூர்வ பட்டியலிலுள்ள அநேக புத்தகங்களில் எழுத்தாளருடைய பெயர் காணப்படுவதில்லை.
☀ ஆனால் எழுத்தாளரின் எழுத்துநடை போன்ற பைபிள் சார்ந்த அத்தாட்சியால் எழுத்தாளரை அநேக சந்தர்ப்பங்களில் அடையாளம் காண முடிகிறது.
☀ பவுலின் பெயரை கேட்டாலே ஜனங்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி யூதேயாவில் இருந்த சில யூதர்கள் செய்திருந்தனர். எனவே, யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதும்போது தன் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து. (அப். 21:28).
☀ பவுலுடைய எழுத்துநடை மற்ற நிருபங்களின் எழுத்துநடையிலிருந்து மாறியிருந்தாலும் அவர்தான் எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை.
☀ புறமதத்தாரிடமோ யூதரிடமோ அல்லது கிறிஸ்தவர்களிடமோ நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்போது ‘எல்லாருக்கும் எல்லாமாகும்’ திறமை பவுலுக்கு எப்போதும் இருந்தது.
☀ நியாய விவாதங்களை அவர்கள் முழுமையாய்ப் புரிந்துகொண்டு மதிப்பதற்காகவே, ஒரு யூதன் மற்ற யூதர்களுக்கு விளக்குவதாக அவரது விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. (1 கொ. 9:22).
☀ பவுலே இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் என்பதற்கு வேதாகமம் சார்ந்த அத்தாட்சி முழுமையான ஆதரவளிக்கிறது. இதன் எழுத்தாளர் இத்தாலியில் இருந்தார், தீமோத்தேயுவுடன் அவருக்கு கூட்டுறவு இருந்தது. இந்த உண்மைகள் பவுலுக்குப் பொருந்துகிறது. (எபி. 13:23, 24)
☀ விவாதங்கள் யூத நோக்குநிலையிலிருந்து அளிக்கப்பட்டிருந்தாலும் கோட்பாடுகளை விளக்கும் விதம் பவுலின் பாணியில் இருக்கிறது. எனவே எபிரெய சபைக்காகவே எழுதப்பட்ட இந்தக் கடிதம் அவர்களது அக்கறையை தூண்டும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
☀ இது யூதருக்குத்தான் எழுதப்பட்டது என்பதை இந்த நிருபத்தின் முழு அமைப்பும் நிரூபிக்கிறது.
☀ இது ஒருவேளை புறஜாதியாருக்கு எழுதப்பட்டிருந்தால் அவர்களில் பத்தாயிரத்தில் ஒருவர்கூட அந்த விவாதத்தைப் புரிந்துகொண்டிருக்க முடியாது; ஏனெனில் அவர்களுக்கு யூத ஒழுங்குமுறையைப் பற்றி எதுவும் தெரியாது.
☀ நிருபத்தை வாசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அறிவு இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் எழுத்தாளர் முழு நிருபத்தையும் எழுதியிருக்கிறார். இதன் மூலம், பவுலின் மற்ற நிருபங்களிலிருந்து எழுத்துநடை ஏன் வேறுபடுகிறது என்பதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
☀ பவுல்தான் இந்த நிருபத்தின் எழுத்தாளர் என்பதற்கு கூடுதல் அத்தாட்சியை செஸ்டர் பியட்டி பப்பைரஸ் சுவடி எண் 2 (P46) அளித்திருக்கிறது; இந்தச் சுவடி ஏறக்குறைய 1930-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பவுல் மரணமடைந்து கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் இந்த பப்பைரஸ் எழுதப்பட்டது.
☀ பவுலைத் தவிர வேறு யாராவது இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு வேதாகமம் சார்ந்த அல்லது வேதாகமம் சாராத அத்தாட்சி எதுவுமே இல்லை.
☀ பவுல் இத்தாலியில் இருந்தபோது இந்த நிருபத்தை எழுதினார் என்பது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது. அவர் இந்த நிருபத்தை முடிக்கையில், ‘நமது சகோதரராகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவர் சீக்கிரமாய் வந்தால் அவரோடு நானும் உங்களைக் காண்பேன்’ என்று சொல்கிறார். (13:23)
☀ சிறையிலிருந்து சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படலாம் என்று பவுல் எதிர்பார்த்தார் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்; ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டிருந்த தீமோத்தேயுவுடன் சேர்ந்து வரமுடியும் என்று எதிர்பார்த்தாரென்பதும் தெரிகிறது.
☀ ஆகவே, ரோமில் பவுலின் முதல் சிறையிருப்பின் கடைசி ஆண்டில், அதாவது கி.பி. 61-ல் இதை எழுதியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
☀ யூத ஒழுங்குமுறையின் கடைசி காலம் யூதேயாவிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, முக்கியமாக எருசலேமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு கடுமையான துன்புறுத்துதலின் காலமாக இருந்தது.
✍ நற்செய்தி எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டது. அநேகர் அதை ஏற்றுக்கொண்டனர். இதைக் கண்ட யூதர்கள், கிறிஸ்தவர்கள் மேல் அதிக மனக்கசப்பை வளர்த்து அவர்களை மதவெறியுடன் துன்புறுத்தினர்.
✍ சில ஆண்டுகளுக்கு முன், பவுல் எருசலேமுக்கு வந்தபோது ஒரு பெரிய கலகமே ஏற்பட்டது. மதவெறி பிடித்த யூதர்கள் பின்வருமாறு கூச்சலிட்டனர்: “இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல.” பவுலைக் கொலைசெய்யும் வரை சாப்பிடவோ பானம்பண்ணவோ மாட்டோம் என்று 40-க்கு மேற்பட்ட யூதர்கள் சபதம் எடுத்திருந்தனர்.
✍ ஆகவே, இரவு நேரத்தில் அவரை செசரியாவுக்குக் கொண்டுவருவதற்கு ஆயுதம் தாங்கிய பலத்த படையின் பாதுகாப்பு தேவைப்பட்டது. (அப். 22:22; 23:12-15, 23, 24)
✍ இப்படிப்பட்ட மத வெறியும், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பும் இருந்த சூழ்நிலையில்தான் அந்தச் சபையினர் வாழ்ந்தனர். இதன் மத்தியில்தான் அவர்கள் பிரசங்கிக்கவும், விசுவாசத்தில் உறுதியாய் நிற்கவும் வேண்டியிருந்தது.
✍ கிறிஸ்து எவ்வாறு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார் என்பதைப் பற்றிய திருத்தமான அறிவும் புரிந்துகொள்ளுதலும் அவர்களுக்கு தேவைப்பட்டது; இதன் மூலம் அவர்கள் மிருக பலிகளைச் செலுத்தி மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டு திரும்ப யூத மதத்தில் வழுவி விழாதபடி தங்களைக் காத்துக்கொள்ள முடியும்.
✍ ஏனெனில் நியாயப்பிரமாணம் சம்பந்தப்பட்ட யாவும் இப்போது வெறும் ஆசாரமாகிவிட்டன.
✍ யூதக் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் துன்புறுத்துதலையும் அப்போஸ்தலன் பவுலைத் தவிர வேறு யாரும் சரியாக புரிந்துகொண்டிருக்க முடியாது.
✍ யூதப் பாரம்பரியங்களை தவறென நிரூபிப்பதற்கு வலிமைமிக்க விவாதங்களையும் குறிப்புகளையும் எடுத்துக் காட்ட முன்னாள் பரிசேயனாகிய பவுலைவிட தகுதிபெற்றவர் வேறு யாருமேயில்லை.
✍ கமாலியேலிடம் கல்வி கற்றதால் மோசேயின் நியாயப்பிரமாணத்தை குறித்து அவருக்கு ஆழமான அறிவு இருந்தது. அதைப் பயன்படுத்தி நியாயப்பிரமாணம், அதில் உட்பட்ட சடங்குகள், பலிகள் போன்றவற்றின் நிறைவேற்றம் கிறிஸ்துவே என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சிகளை அளித்தார்.
✍ முன்நிழலாக இருந்தவை எல்லாம் இப்போது மகிமைபொருந்திய இயேசுவில் நிஜமாயின; எனவே ஒரு புதிய மற்றும் மேம்பட்ட உடன்படிக்கையால் மதிப்பிட முடியாத சிறந்த நன்மைகள் விளைந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார்.
✍ அறிவுக்கூர்மை மிக்க அவர் அத்தாட்சிகளை படிப்படியாக, தெளிவான முறையில் அளித்தார்.
☀ ஆர்வத்தைத் தூண்டும் அந்தப் புதிய போதகங்கள் இவையே:
✍ நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுற்று புதிய உடன்படிக்கையின் ஆரம்பம்.
✍ ஆரோனிய ஆசாரியத்துவத்துக்கு மேலாக கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் மேன்மை.
✍ காளை, வெள்ளாட்டுக்கடாக்களின் பலியைவிட கிறிஸ்துவினுடைய பலியின் உண்மையான மதிப்பு.
✍ வெறும் பூமிக்குரிய கூடாரத்துக்குள் பிரவேசிப்பதைவிட இயேசு கிறிஸ்துவின் வழியில் பரலோகத்திற்குள் பிரவேசிப்பது.
☀ அவிசுவாசிகளான யூதருக்கு இவை வெறுப்புண்டாக்கின. ஆனால், நேர்மையான எந்த யூதனும் இவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; ஏனெனில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏராளமான அத்தாட்சிகளுடன் இவை எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டன.
☀ மொத்தம் 13 அதிகாரங்களும், 303 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 11-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 8-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ இந்த நிருபத்தை ஆயுதம்போல் உபயோகித்து தங்களைத் துன்புறுத்தும் யூதர்களின் வாயை எபிரெய கிறிஸ்தவர்கள் அடக்க இயலும்.
☀ அதோடு கடவுளுடைய சத்தியத்தை நாடும் நேர்மையுள்ள யூதர்களுக்கு மெய்யை நிரூபித்து, மனந்திரும்புவதற்குத் தூண்டும் விவாதங்களை அளிக்கும் வல்லமைவாய்ந்த புதிய ஆயுதமாக இந்த நிருபம் இருந்தது.
☀ எபிரெய கிறிஸ்தவர்களிடம் பவுலுக்கிருந்த ஆழ்ந்த அன்பை இது தெளிவாக காட்டுகிறது. தேவையான சமயத்தில் அவர்களுக்கு நடைமுறையான விதத்தில் உதவிசெய்ய வேண்டும் என்ற அவரது ஆவலையும் இந்த நிருபம் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக