இஸ்ரயேல் அரசர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ள மூன்றாவது புத்தகம்
🌹1 இராஜாக்கள் 🌹
☀ 1 இராஜாக்கள் புத்தகம் இஸ்ராயேல் அரசர்களின் வரலாறு எழுதப்பட்டுள்ள 1,2 சாமுவேல் 1,2 இராஜாக்கள் ஆகிய நான்கு புத்தகங்களில் மூன்றாவது புத்தகமாகும்.
☀ 1,2 இராஜாக்கள் புத்தகங்கள் ஆரம்பத்தில் ஒரே சுருளாக, அல்லது ஒரே புத்தகமாகவே இருந்தது.
☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல்கள் மிலாகிம், M'lakhim (ספר מלכים) எனப்படுகின்றது.
☀ கிரேக்க மொழிப்பெயர்பாளர்கள் பஸிலீயன், Basileion (βασιλιάδες) “இராஜ்யங்கள்” என அழைத்தனர். முதன்முதலில் இவர்களே, வசதியைக்கருதி அதை இரண்டு சுருள்களாக பிரித்தனர்.
☀ இப்புத்தகத்தின் மொழி, அமைப்பு, எழுத்துநடை ஆகியவை “எரேமியா” புத்தகத்தை எழுதிய எரேமியாவே இதையும் எழுதியிருக்கலாம் என தெரிவிக்கின்றன. பல எபிரெய சொற்களும் சொற்றொடர்களும் இராஜாக்கள் புத்தகங்களிலும் எரேமியாவிலும் மாத்திரமே காணப்படுகின்றன.
☀ எனினும், இராஜாக்களின் புத்தகங்களை எரேமியா எழுதியிருந்தால், அவற்றில் அவரைபற்றி ஏன் ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை? இது அவசியம் இல்லை. ஏனெனில் எரேமியாவின் பெயர் தாங்கிய புத்தகத்தில் அவருடைய ஊழியம் ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 11-வது புத்தகமாக வருகிறது.
☀ இந்த புத்தகத்தில் மொத்தம் 22 அதிகாரங்களும் 816 வசனங்களும் உள்ளன.
☀ 8-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 5-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ முக்கியமான கதாபாத்திரங்கள் - தாவீது, சாலமோன், எலியா, ஆகாபு, யோசபாத், அகசியா.
☀ 1 இராஜாக்கள் ; கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை யூதா, இஸ்ரேல் நாடுகளில் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக அவற்றை ஆண்ட அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடுவனவாகும்.
☀ இந்நூலை 3 பிரிவுகளாக பிரிக்களாம், A). இஸ்ரயேல் மக்களினம் முழுவதன் மேலும் சாலமோன் அரசுரிமை பெறுதல்; அவர் தந்தை தாவீது இறத்தல்.
B). சாலமோனின் ஆட்சியும் மாட்சியும்; எருசலேமில் அவர் எழுப்பிய தேவாலயத்தின் சிறப்பு.
C). நாடு தெற்கு வடக்கு என்ற இரண்டு அரசுகளாகப் பிரிதல்; அவற்றைக் கி.மு. 850 வரை ஆண்ட அரசர்களின் வரலாறு.
☀ 1 இராஜாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை எகிப்து, அசீரியா ஆகியவற்றின் சரித்திரம் உறுதிப்படுத்துகிறது.
☀ சாலொமோனின் ஆலயத்துக்கு தேவையான செம்பு பாத்திரங்களை, “யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே” ஈராம்வார்த்ததாக 1 இராஜாக்கள் 7:45,46ல் நாம் வாசிக்கிறோம். பூர்வசுக்கோத் இருந்த இடத்தில் தோண்டுகையில் வார்ப்பு வேலைகள் நடந்ததற்கான அத்தாட்சிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
☀ கர்த்தருடைய வல்லமைமிக்க தீர்க்கத்தரிசி எலியாவை குறித்தும் கர்த்தர் அவரைக்கொண்டு செய்த அற்புதங்கள், விக்கிரக ஆராதனையையும் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பானதையும் செய்துக்கொண்டிருந்த இஸ்ராயேல் அரசர்களுக்கெதிராக கர்த்தருடைய வெளிப்பாட்டை, பயமின்றி எலியா வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களை இப்புத்தகத்தினூடாகவே காணமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக