சேராபீன்கள்
சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;” (ஏசாயா 6:2)
முழு வேதாகமத்திலேயே இந்த ஒரு அதிகாரத்தில்தான், அதாவது ஏசாயா 6-ஆம் அதிகாரத்தில்தான் சேராபீன்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே இவர்கள் மிக உயர்ந்த ஸ்தானங்களையும் மதிப்புள்ள பொறுப்புகளையும் வகிக்கும் தூதர்கள். ஏனெனில் கர்த்தரின் பரலோக சிங்காசனத்திற்கு அருகிலேயே நிற்கிறார்கள். இருந்தாலும் உசியாவைப் போல் ஆணவங்கொள்ளாமல் மிகுந்த பணிவோடும் தாழ்மையோடும் பொறுப்புகளை நிறைவேற்றுகிறார்கள். பரலோகப் பேரரசரின் சந்நிதானத்தில் நிற்பதால் தங்கள் முகங்களை இரு இறக்கைகளால் மூடிக்கொண்டிருக்கின்றனர். பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதால் தங்கள் பாதங்களையும் இரு இறக்கைகளால் மூடியிருக்கின்றனர்.
பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதால் தங்கள் பாதங்களையும் இரு இறக்கைகளால் மூடியிருக்கின்றனர். சர்வலோகப் பேரரசருக்கு அருகிலேயே நிற்பதால் எத்தனை பணிவு! அவரது மகிமை மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக என்னே அடக்கமான தோரணை!
“சேராபீன்கள்” என்ற பதம் “தகதகவென எரிகிறவர்கள்” அல்லது “ஒளிர்கிறவர்கள்” என அர்த்தப்படுத்துவதால் அவர்கள் ஒளிவீசிப் பிரகாசிப்பவர்கள் என்பது தெரிகிறது. இருந்தாலும் பலமடங்கு அதிக பிரகாசத்தோடு ஜகஜோதியாக ஜொலிக்கும் கர்த்தருக்கு முன் தங்கள் முகங்களை மூடிக்கொள்கிறார்கள்.
சேராபீன்கள் இன்னும் இரு இறக்கைகளைப் பறப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அந்தரத்தில் தங்கள் இடங்களில் ‘நிற்கவும்’ இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. (உபாகமம் 31:15-ஐ ஒப்பிடுக.) இதைக் குறித்து பேராசிரியர் ஃப்ரான்ஸ் டெலிட்ஷ் இப்படிச் சொல்கிறார்: “சேராபீன்கள், சிங்காசனத்தில் வீற்றிருப்பவரின் தலைக்கு மேலாக நிச்சயம் நிற்க மாட்டார்கள். ஆலயத்தை நிரப்பிய அவரது வஸ்திரத்திற்கு மேலாகவே அவர்கள் நிற்கிறார்கள்.” (பழைய ஏற்பாட்டின் விளக்கவுரை) அவர் சொல்வதும் நியாயமே. சேராபீன்கள் கர்த்தரைவிட உயர்ந்தவர்களென்ற கருத்தில் அல்ல, ஆனால் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனடியாக செயல்படக் காத்திருக்கும் கருத்திலேயே ‘அவருக்கு மேலாக நிற்கிறார்கள்.’
இப்படி பாக்கியம் பெற்ற சேராபீன்கள் சொல்வதை இப்போது கேளுங்கள்! அவர்கள் “ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.” (ஏசாயா 6:3) கர்த்தரின் பரிசுத்தத்தன்மையும் மகிமையும் சர்வலோகமெங்கும் யாவரறிய அறிவிக்கப்படும்படி மேற்பார்வை செய்வது அவர்கள் பொறுப்பு. அந்தச் சர்வலோகத்தின் ஒரு பாகமே இந்தப் பூமி. கர்த்தரின் மகிமையை, அவர் சிருஷ்டித்த அனைத்தும் பறைசாற்றுகின்றன. விரைவில் பூமியின் குடிமக்கள் அனைவரும் அம்மகிமையை உணருவார்கள். (எண்ணாகமம் 14:21; சங்கீதம் 19:1-3; ஆபகூக் 2:14)
சேராபீன்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர்கள் சிங்காசனத்திற்கு அருகே தொகுதி தொகுதியாக நிற்பதாக எடுத்துக்கொள்ளலாம். கடவுளின் பரிசுத்தத்தையும் மகிமையையும் ஒருவர் மாறி ஒருவர் திரும்பத் திரும்ப இனிய பாடலாக பாடுகின்றனர். அதன் விளைவு என்ன? ஏசாயா தொடர்ந்து சொல்வதை மீண்டும் கேளுங்கள்: “கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.” (ஏசாயா 6:4) வேதாகமத்தில், புகையும் மேகமும் கடவுளுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. (யாத்திராகமம் 19:18; 40:34, 35; 1 இராஜாக்கள் 8:10, 11; வெளிப்படுத்துதல் 15:5-8)
மனிதர்களாகிய நம்மால் ஒருபோதும் நெருங்க முடியாத மகிமையை அவை குறிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக