புதன், 9 டிசம்பர், 2015

1 கொரிந்தியர் - பெரிய நிருபம்

பெரிய நிருபம் -

🌹1 கொரிந்தியர் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “A' Epistole pros Korinthios” (First Letter [Epistle] to the Corinthians) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 46-வது புத்தகமாக வருகிறது.

☀ ரோம உலகின் முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட்ட, ஆனால் அதே நேரத்தில் ஒழுக்கப்பிரகாரமாய் சீர்குலைந்திருந்த இந்த மாநகரத்திற்கு சுமார் கி.பி. 50-ல் பவுல் பயணப்பட்டார்.

☀ அங்கே அவர் தங்கியிருந்த 18 மாத காலத்தில், திருச்சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. (அப். 18:1-11).

☀ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை இந்த விசுவாசிகளிடம் முதலாவதாக அறிவிக்க சென்ற பவுலுக்கு அவர்களிடம் எப்பேர்ப்பட்ட அன்பு! அவர்களிடம் தனக்கிருந்த ஆவிக்குரிய பந்தத்தை நினைவுகூர்ந்து இந்த நிருபத்தில் அவர் கூறியதாவது: “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.” (1 கொ. 4:15).

☀ அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் பவுலுக்கிருந்த ஆழ்ந்த அக்கறையே, அவரது மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குத் தன் முதல் நிருபத்தை எழுதும்படி அவரைத் தூண்டியது.

☀ அவர் கொரிந்துவிலிருந்து பயணப்பட்டு இப்போது சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஏறக்குறைய கி.பி. 55-ல் பவுல் எபேசுவில் இருந்தார்.

☀ அனுபவமற்ற புதிய சபையாய் இருந்த கொரிந்துவிலிருந்து அவர் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்தது தெரிகிறது; அதற்குப் பதில் எழுத கடமைப்பட்டிருந்தார்.

☀ மேலும், தன் மன அமைதியைக் குலைக்கும் செய்திகளையும் பவுல் கேள்விப்பட்டிருந்தார். (7:1; 1:11; 5:1; 11:18) இவை அந்தளவு அதிக மனத்துயரத்தை உண்டுபண்ணியதால், தன் நிருபத்தில் 7-ம் அதிகாரத்தை தொடங்கும் வரையில் அவர்களிடமிருந்து கடிதத்தைத் தான் பெற்றிருந்ததைப் பற்றி பவுல் குறிப்பிடக்கூட இல்லை.

☀ முக்கியமாய் அவர் கேள்விப்பட்டிருந்த செய்திகளே, கொரிந்துவிலிருந்த தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும்படி பவுலை தூண்டுவித்தது.

☀ இந்த நிருபத்தை பவுல் வாழ்த்துக்களோடு முடிக்கையில், ஆக்கில்லா, பிரிஸ்காளின் (பிரிஸ்கில்லாளின்) வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கிறார். (16:19)

☀ அவர்கள் ஏற்கெனவே கொரிந்துவிலிருந்து எபேசுக்கு மாறிச் சென்றிருந்ததை அப்போஸ்தலர் 18:18, 19 குறிப்பிடுகிறது.

☀ ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அங்கே வசித்து வந்ததாலும், பவுல் ஒன்று கொரிந்தியரின் முடிவான வாழ்த்துக்களில் அவர்களுடைய வாழ்த்துக்களை சேர்த்திருந்ததாலும், அந்த நிருபத்தை அவர் எபேசுவில் தங்கியிருக்கையிலேயே எழுதியிருக்க வேண்டும்.

☀ எனினும், துளியும் சந்தேகத்திற்கு இடமளிக்காத ஒரு குறிப்பானது, 1 கொரிந்தியர் 16:8-லுள்ள பவுலின் இந்தக் கூற்றாகும்: ‘ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.’ ஆகவே, ஒன்று கொரிந்தியரை பவுல் எபேசுவிலிருந்தே எழுதினார். பெரும்பாலும் அவர் அங்கே தங்கியிருந்த காலப்பகுதி முடியும் சமயத்தில் எழுதியிருக்கலாம்.

☀ கொரிந்து “புகழ்பெற்ற, சிற்றின்ப கேளிக்கை நிறைந்த நகரம், அங்கே கிழக்கத்திய மேற்கத்திய தீயொழுக்கங்கள் ஒன்றர கலந்திருந்தன.”

☀ பொலோபொனெஸுக்கும் கிரீஸ் கண்டத்துக்கும் இடையிலுள்ள ஒடுக்கமான பூசந்தியில் கொரிந்து அமைந்திருந்தது.

☀ கண்டத்திற்குச் செல்லும் தரைவழி மார்க்கத்தில் முக்கிய நகரமாக இது ஆதிக்கம் செலுத்தி வந்தது.

☀ அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், அதன் ஜனத்தொகை ஏறக்குறைய 4,00,000.

☀ ரோம், அலெக்ஸாண்டிரியா, சீரியாவின் அந்தியோகியா ஆகியவற்றில் மாத்திரமே இதைப் பார்க்கிலும் மிகுந்த ஜனத்தார் குடியிருந்தனர்.

☀ கொரிந்துவுக்குக் கிழக்கே ஈஜியன் கடலும் மேற்கே கொரிந்து வளைகுடாவும் அயோனியன் கடலும் இருந்தன. ஆகவே கெங்கிரேயா, லீக்கேயம் என்னும் இரண்டு துறைமுகப் பட்டணங்களுடன், அகாயா மாகாணத்தின் தலைநகராகிய கொரிந்து, வாணிக சம்பந்தமாய் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது.

☀ இது கிரேக்க கல்விக்கும் மைய ஸ்தலமாயிருந்தது. “அதன் செல்வம், யாவரறியும் அளவுக்கு அதிக பெயர்பெற்றதாயிருந்தது; அவ்வாறே அதன் குடிகளின் தீயொழுக்கமும் வரம்புமீறிய ஊதாரித்தனமும் நன்கறியப்பட்டிருந்தன” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

☀ அதன் புறமதப் பழக்கவழக்கங்களில் (ரோம வீனஸுக்கு சமமான) அஃப்ரோடைட் என்ற காதல் தேவதை வணக்கமும் இருந்தது. கொரிந்திய வணக்க முறை மட்டுக்குமீறிய சிற்றின்ப வாழ்க்கையை தோற்றுவித்தது.

☀ கொரிந்தியருக்கு எழுதிய பவுலின் முதல் நிருபம் அந்தக் கொரிந்திய சபைக்குள் நோட்டம்விட நமக்கு வாய்ப்பளிக்கிறது.

☀ எதிர்த்து சமாளிக்க வேண்டிய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் இந்தக் கிறிஸ்தவர்களுக்கு இருந்தன. சபைக்குள் பிரிவினைகள் இருந்தன, ஏனெனில் சிலர் மனிதரைப் பின்பற்றி வந்தனர்.

☀ மிக மோசமான ஒழுக்கக்கேடு ஒன்று நிகழ்ந்திருந்தது. சிலர் மத சம்பந்தமாய்ப் பிரிவுற்ற குடும்பங்களில் வாழ்ந்து வந்தனர்.

☀ அவிசுவாசியான தங்கள் மணத்துணைவரோடு வாழ்க்கையைத் தொடருவதா அல்லது பிரிந்துசெல்வதா? விக்கிரகங்களுக்குப் பலிசெலுத்தப்பட்ட மாம்சத்தைச் சாப்பிடுவதைப் பற்றியதென்ன? அவர்கள் அதை சாப்பிடலாமா? கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பு உட்பட, தங்கள் கூட்டங்களை நடத்துவதைக் குறித்ததிலும் கொரிந்தியருக்கு அறிவுரை தேவைப்பட்டது.

☀ சபையில் பெண்களின் ஸ்தானம் என்ன? அந்த சபையில் உயிர்த்தெழுதலை மறுதலிப்போரும் இருந்தனர். ஏகப்பட்ட பிரச்சினைகள். எனினும் முக்கியமாக, கொரிந்தியர்களை மீண்டும் ஆவிக்குரிய நிலைக்கு கொண்டு வருவதிலேயே அப்போஸ்தலனாகிய பவுல் ஆர்வம் காட்டினார்.

☀ மொத்தம் 16 அதிகாரங்களும், 437 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 15-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும்; 5,8,13 ஆகிய அதிகாரங்கள் 13'வசனங்களை கொண்ட சிரிய அதிகாரங்களாகவும் உள்ளது.

☀ பவுல் எழுதிய நிருபங்களில் இதுவே பெரிய நிருபமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD