முன்மாதிரியான வாலிபன்
🌹 1 தீமோத்தேயு 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Timotheon A” (First Letter [Epistle] to Timothy) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 54-வது புத்தகமாக வருகிறது.
☀ தீமோத்தேயுவிற்கும் தீத்துவிற்கும் பவுல் நிருபங்கள் எழுதினார். அவை எழுதப்பட்ட காலத்தை அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிட்ட காலத்தோடு பொருத்துவதில் சிக்கல் இருந்தது.
☀ ஆகவே அவற்றை கூர்ந்து கவனித்த வேதாகம உரையாசிரியர்கள் இராயனுக்கு செய்த மேல்முறையீடு வெற்றி அடைந்து கிட்டத்தட்ட கி.பி. 61-ல் பவுல் விடுதலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தனர்.
☀ த நியூ வெஸ்ட்மினிஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் சொல்கிறது: “[பவுல் இரண்டு ஆண்டுகள் சிறையிருப்புக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார் என்ற] இந்த கருத்தை அப்போஸ்தலர் புத்தகத்தின் முடிவான வசனம் ஆதரிக்கிறது; விவரிக்கப்பட்ட அந்தச் சிறையிருப்பு அப்போஸ்தலனின் மரணத்தில் முடிவடைந்தது என்று ஊகிப்பதைவிட இந்தக் கருத்துதான் சரியாக பொருந்துகிறது.
☀ பவுலுடைய ஊழியத்தை ஒருவரும் தடைசெய்யவில்லை என்ற உண்மையை லூக்கா அழுத்திக் கூறுகிறார்; இதன் மூலம் அவருடைய ஊழியத்தின் முடிவு நெருங்கவில்லை என்ற எண்ணத்தையே கொடுக்கிறார்.
☀ அப்படியென்றால் அவர் ரோமில் முதல் சிறையிருப்பிலிருந்து விடுதலையானதற்கும் கடைசி சிறையிருப்புக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அல்லது ஏறக்குறைய கி.பி. 61-64-ல் ஒன்று தீமோத்தேயு எழுதப்பட்டது.
☀ முதலாம் தீமோத்தேயு நிருபமானது ஒரு தனிப்பட்ட கடிதமாகவும், சபை நிர்வாகத்திற்கும், ஓழுக்கத்திற்கும் ஒரு கையேடு போலவும் காணப்படுகிறது.
☀ சத்திய வசனத்தை நிதானமாய் போதிக்கிறவனாயிரு என பவுல் அறிவுறுத்துகிறார் (2தீமோத்தேயு 2:15).
☀ இது பவுலின் கடைசி கடிதமானபடியால் பவுல் தனது இருதயத்தின் விருப்பமாகிய வல்லமையான போதனைகள், விசுவாசத்தில் தரித்திருத்தல், தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் மாறாத அன்பு ஆகிய இவைகளில் நிலைத்திருக்கும்படி போதிக்கிறார்.
☀ பவுல் இந்த நிருபத்தை புதிய தலைமுறையினராகிய திருச்சபை தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டும் ஒளியாக அமையும் வண்ணம் எழுதுகிறார். இந்த நிருபமனது எபேசு சபையின் போதகனாயிருந்த தீமோத்தேயுவுக்கு உற்சாகமூட்டும் போதனையாகக் காணப்படுகிறது.
☀ எபேசுவில் சபை காரியங்கள் சிலவற்றை கவனிப்பதற்காக தீமோத்தேயுவை அனுப்பிவிட்டு பவுல் மக்கெதோனியாவுக்குச் சென்றாரென ஒன்று தீமோத்தேயு 1:4 காட்டுகிறது.
☀ இங்கிருந்தே எபேசுவிலிருந்த தீமோத்தேயுவுக்கு இந்த நிருபத்தை எழுதினாரென தோன்றுகிறது.
☀ வாணிகத்திற்கு பேர்போன நகரமாகிய எபேசு பொருளாசையையும் “பண ஆசை”யையும் தூண்டிவிடும்; ஆகவே இதைப் பற்றியும் அறிவுரை கொடுப்பது காலத்திற்கு ஏற்றதாயிருக்கும். (6:10)
☀ ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற நல்ல அனுபவமும் பயிற்சியும் தீமோத்தேயுவுக்கு இருந்தது.
☀ தீமோத்தேயுவின் தந்தை கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர், தாயோ கடவுள் பயமுள்ள யூத பெண்.
☀ தீமோத்தேயு சுவிசேஷத்தை எப்போது முதன் முதலாக கேள்விப்பட்டார் என்று திட்டமாக தெரியவில்லை.
☀ தன் இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, கி.பி. 49-ன் முடிவில், அல்லது கி.பி. 50-ன் தொடக்கத்தில் பவுல் லீஸ்திராவுக்குச் சென்றிருக்க வேண்டும்; அப்போது தீமோத்தேயு (பதினெட்டு வயதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குள்ளாக இருந்திருக்கலாம்) ‘லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றிருந்தார்.’ ஆகவே தன்னோடும் சீலாவோடும் தீமோத்தேயு பயணம் செய்வதற்கு பவுல் ஏற்பாடு செய்தார். (அப். 16:1-3)
☀ தீமோத்தேயுவைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு பவுலின் 14 கடிதங்களில் 11-ல் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
☀ பவுல் தீமோத்தேயுவிடம் தகப்பனைப் போன்ற பாசத்தைக் காட்டினார். பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சபைகளுக்குச் சென்று சேவிக்கும்படி அவரை நியமித்தார். இதிலிருந்து தீமோத்தேயு மிஷனரி ஊழியத்தை நல்லவிதமாக செய்திருந்தார் என்பதும், முக்கியமான பொறுப்புகளைக் கையாள தகுதிபெற்றிருந்தார் என்பதும் தெளிவாகிறது.
☀ தேவபக்தி நிறைந்த உறவினர்களால் உண்டான தாக்கத்திற்கு தீமோத்தேயு ஒரு முக்கிய உதாரணமாகக் காணப்படுகிறார்.
☀ யூத விசுவாசிகளாகிய இவரது தாயார் ஐனிக்கேயாள் மற்றும் இவரது பாட்டி லோவிசாள் ஆகிய இருவரும் இவரது வாழ்க்கையை வடிவமைக்கவும் இவரது கிறிஸ்தவ வாழ்கையில் முன்னேறவும் உறுதுணையாக இருந்தனர் (2தீமோத்தேயு 1:5, 3:15).
☀ எபேசு சபையிலே காணப்பட்ட தவறான போதனைகளை எதிர்க்கும் வண்ணம் அங்கே அனுப்பப்பட்டார். இவர் அங்குப் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது.
☀ தீமோத்தேயுவுக்கு ஊழியத்தைக் குறித்த நடைமுறை அலோசனைகளை வழங்கி இவரை உற்சாகப்படுத்தும் வண்ணம் பவுல் நிருபங்களை எழுதுகிறார்.
☀ தீமோத்தேயு, சபையினராலும், சுற்றியிருந்த ஜனங்களாலும் அவர்களது கலாச்சாரத்தாலும் பல தொல்லைகளையும், குழப்பங்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
☀ பவுல் இவருக்கு உற்சாகமும் ஆலோசனையும் வழங்கும் வண்ணம் ஒன்று மற்றும் இரண்டு தீமோத்தேயு ஆகிய இவ்விரண்டு நிருபங்களையும் எழுதுகிறார்.
☀ மொத்தம் 6 அதிகாரங்களும், 113 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ 5-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 2-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ ஒரு கிறிஸ்தவ வாலிபர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு தீமோத்தேயு நல்ல முன்மாதிரியாக இருந்தாரென பவுலின் நிருபம் காட்டுகிறது.
☀ தீமோத்தேயு வயதில் இளைஞராக இருந்தபோதிலும் ஆவிக்குரிய வளர்ச்சியில் முதிர்ச்சியடைந்திருந்தார். ஒரு கண்காணியாவதற்கு தகுதிபெற்றிருந்தார். அந்தப் பொறுப்புகளை நன்றாக நிறைவேற்றியதால் ஆசீர்வதிக்கப்பட்டார். அதேசமயம், தொடர்ந்து முன்னேறுவதற்கு தீமோத்தேயு அறிவுரைகளைப் பற்றி இடைவிடாமல் சிந்தித்து அவற்றில் நிலைத்தும் இருக்க வேண்டியிருந்தது. வைராக்கியமுள்ள இன்றைய இளம் ஊழியர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.
☀ கிறிஸ்தவ முன்னேற்றத்தில் மகிழ்ச்சியை நாடும் யாவருக்கும் பவுலின் அறிவுரை காலத்துக்கேற்றது: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (4:15,16.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக