புதன், 9 டிசம்பர், 2015

அப்போஸ்தலர் நடபடிகள் - பரிசுத்த ஆவியானவரின் பெலன்

பரிசுத்த ஆவியானவரின் பெலனால் -

     🌹அப்போஸ்தலர்
                    நடபடிகள் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Praxeis ton Apostolon” (Acts of the Apostles) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 44-வது புத்தகமாக வருகிறது.

☀ லூக்கா சுவிசேஷத்தின் தொடர்ச்சியே அப்போஸ்தலர் நடவடிகலாகும்.

☀ லூக்கா புத்தகத்தை எழுதிய வைத்தியர் லூக்காவினாலே அப்போஸ்தலர் புத்தகமும் எழுதப்பட்டுள்ளது.

☀ பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டினால் சபை ஸ்தாபிக்கப்பட்டதை விளக்கி, ஆதிசபையின் வரலாற்றை தொடர்ந்து விவரிக்கிறது.

☀ முதல் 12 அதிகாரங்களில் பெரும்பாலும் பேதுருவின் நடவடிக்கைகள் விவரிக்கப்படுகின்றன. மீதமுள்ள 16 அதிகாரங்களில் பவுலின் நடவடிக்கைகள் அடங்கியுள்ளன.

☀ இந்தப் புத்தகம், ஆதிசபை நிறுவப்பட்டதையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய திருத்தமான சரித்திரப் பதிவை அளிக்கிறது.

☀ இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் அவர் தம்முடைய சீஷருக்கு காட்சியளித்த சந்தர்ப்பங்களைப் பற்றிய குறிப்போடு தொடங்குகிறது.

☀ மொத்தமாய் ஏறக்குறைய 28 ஆண்டு கால சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

☀ லூக்கா புத்தகத்தைப் போன்றே இந்தப் புத்தகமும் தெயோப்பிலுவுக்கு எழுதப்படுகிறது. (லூக். 1:3; அப். 1:1).

☀ பேதுரு, ஸ்தேவான், கொர்நேலியு, தெர்த்துல்லு, பவுல் உட்பட இன்னும் அநேகர் கொடுத்த பல்வேறு சொற்பொழிவுகளை லூக்கா பதிவு செய்தார்; இவையெல்லாம் நடையிலும் தொகுப்பிலும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

☀ வெவ்வேறு கூட்டத்தார் முன்பாக பவுல் ஆற்றிய உரைகள், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடையில் மாறுபட்டன.

☀ லூக்கா தான் கேட்டவற்றை அல்லது மற்ற கண்கண்ட சாட்சிகள் தனக்கு அறிவித்தவற்றை மட்டுமே பதிவு செய்தாரென்று இது தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. லூக்கா நிச்சயமாகவே புனைக்கதை எழுத்தாளர் அல்ல.

☀ லூக்காவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி அறியப்பட்டிருப்பது வெகு கொஞ்சம்தான்.

☀ லூக்கா அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்ல, ஆனால் அப்போஸ்தலர்களோடு கூட்டுறவு வைத்திருந்தார். (லூக். 1:1-4).

☀ அப்போஸ்தலனாகிய பவுல் மூன்று சந்தர்ப்பங்களில் லூக்காவின் பெயரைக் குறிப்பிடுகிறார். (கொலோ. 4:10, 14; 2 தீ. 4:11; பிலே. 24).

☀ சில ஆண்டுகள் அவர் பவுலை விட்டு பிரியா உற்ற நண்பராய் இருந்தார்; ஆகவே, பவுல் அவரை “பிரியமான வைத்தியனாகிய லூக்கா” என்று அழைத்தார்.

☀ அப்போஸ்தலர் பதிவில் “அவர்கள்,” “நாங்கள்” என்ற பதங்கள் மாறிமாறி உபயோகிக்கப்படுகின்றன. இது, பவுலின் இரண்டாவது அப்போஸ்தலர் பயணத்தின்போது லூக்கா அவருடன் துரோவாவில் இருந்தார் என்றும், பவுல் திரும்பிவரும் வரையில் சில ஆண்டுகள் பிலிப்பியில் தங்கியிருந்திருக்கலாம் என்றும், பின்னர் விசாரணைக்காக ரோமுக்கு பவுல் அழைத்துச் செல்லப்பட்டபோது இவரும் உடன் சென்றார் என்றும் காட்டுகிறது. (அப். 16:8, 10; 17:1; 20:4-6; 28:16).

☀ அப்போஸ்தலர் புத்தகத்தின் சில மறக்க முடியாத அனுபவங்கள்...,

✍ பெந்தெகொஸ்தே நாள் (2:1-42).
✍ ஸ்தேவான் இரத்த சாட்சியாய் மரித்தல் (6:1–8:1).
✍ துன்புறுத்துதல்களும் சவுலின் மதமாற்றமும் (8:1; 9:30).
✍ விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது (9:31–12:25).
✍ பர்னபாவுடன் பவுலின் முதல் அப்போஸ்தலர் பயணம் (13:1–14:28).
✍ விருத்தசேதன விவாதத்துக்கு முடிவுகட்டுதல் (15:1-35).
✍ பவுலின் இரண்டாவது பயணத்துடன் ஊழியம் விரிவடைகிறது (15:36–18:22).
✍ பவுல் சபைகளைத் திரும்பவும் சந்திக்கிறார், மூன்றாவது பயணம் (18:23–21:26).
✍ பவுல் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார் (21:27–26:32).
✍ பவுல் ரோமுக்குச் செல்கிறார் (27:1–28:31).

☀ தொல்பொருளாராய்ச்சி கண்டுபிடிப்புகளும் லூக்கா எழுதிய பதிவின் திருத்தமான தன்மைக்கு சான்றளிக்கின்றன. உதாரணமாக, எபேசுவில் தோண்டியெடுக்கப்பட்ட அர்த்தெமியின் (தியானாளின்) கோவிலும் அதோடு, அப்போஸ்தலன் பவுலுக்கு எதிராக எபேசியர் அமளி செய்த இடமாகிய பண்டைய அரங்கசாலையும் இதற்கு முக்கிய சான்று. (அப். 19:27-41).

☀ ‘பட்டணத்து அதிகாரிகள்’ என்ற பட்டப்பெயரை தெசலோனிக்கே அதிகாரிகளைக் குறிப்பிட லூக்கா பயன்படுத்தியது திருத்தமானதே என்பதை உறுதிசெய்யும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. (17:6, 8).

☀ புபிலியுவை மெலித்தா தீவின் “தலைவர்” என லூக்கா குறிப்பிட்டது முற்றிலும் சரியானதுதான் என்பதை இரண்டு மெலித்தா எழுத்துப் பொறிப்புகள் காட்டுகின்றன.

☀ மொத்தம் 28 அதிகாரங்களும், 1007 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 7-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 6-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ பெந்தெகொஸ்தே நெருங்குகையில், பேதுரு, “யூதாசைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன் சொன்ன” இரண்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை குறிப்பிட்டார். (அப். 1:16, 20; சங். 69:25; 109:8).

☀ ஏசாயா 53:7,8-ன் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது என்று எத்தியோப்பிய அரசவை அதிகாரிக்கு பிலிப்பு விளக்கிக் காட்டினார். சரியான புரிந்துகொள்ளுதலைப் பெற்றபோது அவர் ஞானஸ்நானம் எடுக்கும்படி தாழ்மையோடு வேண்டினார். (அப். 8:28-35).

☀ அவர்கள் வேண்டாமென தள்ளின அந்தக் கல்லாகிய கிறிஸ்துவே “மூலைக்குத் தலைக்கல்லா”னார் என்று ஆலோசனை சங்கத்தில் பேதுரு குறிப்பிடுகையில் சங்கீதம் 118:22-ஐ மேற்கோள் காட்டினார். (அப். 3:22-24).

☀ இயேசுவைப் பற்றி கொர்நேலியுவிடம் பேசிய பேதுரு, “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள்” என்று சாட்சி பகர்ந்தார். (10:43)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD