இயேசுவின் சகோதரன் யாக்கோபின் நிருபம்
🌹 யாக்கோபு 🌹
☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole Iakobou” (Letter [Epistle] of James) என்று அழைக்கப்படுகிறது.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 59-வது புத்தகமாக வருகிறது.
☀ யாக்கோபு நிருபத்தின் ஆசிரியர் தம்மைப் பற்றி; “தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு” என்று குறிப்பிடுகிறார் (யாக் 1:1).
☀ மரபுக் கருத்துப்படி யாக்கோபு இயேசுவின் சகோதரன்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்புகொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; அப் 15:13).
☀ யாக்கோபைப் போலவே யூதாவின் அறிமுகச் சொற்கள், “இயேசு கிறிஸ்துவின் அடியானும் யாக்கோபின் சகோதரனுமான யூதா” என்று குறிப்பிடுகின்றன. (யாக். 1:1; யூதா 1) ஆகவே, இயேசுவின் சகோதரர்களாகிய யாக்கோபும் யூதாவும், தங்கள் பெயர்கள் தாங்கிய வேதாகம புத்தகங்களை எழுதினார்கள் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
☀ கிறிஸ்தவ சபைக்கு அறிவுரைகள் நிறைந்த ஒரு நிருபத்தை எழுதும் சிறப்பான தகுதியை யாக்கோபு பெற்றிருந்தார்.
☀ எருசலேம் சபையில் அவர் ஒரு மேய்ப்பனாக இருந்தார்; அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. கேபாவும் யோவானும் சபையின் ‘தூண்களாக’ கருதப்பட்டனர்; அவர்களோடு ‘கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபும்’ ஒரு தூணாக இருந்தார் என்று பவுல் சொல்கிறார். (கலா. 1:19; 2:9)
☀ பேதுரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் “யாக்கோபுக்கும் சகோதரருக்கும்” சொல்லி அனுப்பினார்; யாக்கோபு முதன்மையானவராக விளங்கினார் என்பது இதிலிருந்து காட்டப்படுகிறது.
☀ விருத்தசேதனத்தைப் பற்றி முடிவெடுக்கும்படி விண்ணப்பிப்பதற்கு பவுலும் பர்னபாவும் எருசலேமுக்குப் பயணம் செய்தனர்; அப்போது, “அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும்” பிரதிநிதியாக பேசியவர் யாக்கோபுதான். இந்தத் தீர்மானத்தின் ஆரம்பத்திலும் யாக்கோபுடைய நிருபத்தின் ஆரம்பத்திலும் “வாழ்த்துதல்” என்ற வார்த்தை காணப்படுகிறது. இதிலிருந்து அவற்றை எழுதியவர் ஒருவரே என்பதற்கு இன்னொரு சான்று சுட்டிக்காட்டப்படுகிறது. (அப். 12:17; 15:13,22,23; யாக். 1:1).
☀ சதுசேயனும் பிரதான ஆசாரியனுமாகிய அனானஸேதான் (அனனியாஸ்) யாக்கோபின் மரணத்துக்கு காரணம் என்பதாகவும், அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்பதாகவும் சரித்திராசிரியன் ஜொஸிஃபஸ் சொல்கிறார்.
☀ இது ஏறக்குறைய கி.பி. 62-ல் ரோம அதிபதி பெஸ்துவின் மரணத்திற்குப் பின், அல்பினஸ் பதவி ஏற்பதற்கு முன் நடந்திருக்க வேண்டும்.
☀ எருசலேமிலிருந்து யாக்கோபு இந்த நிருபத்தை எழுதினார்.
☀ யாக்கோபு, “சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு,” எழுதினார்; சொல்லர்த்தமாக, ‘சிதறியிருப்போருக்கு’ என்பது அதன் அர்த்தம். (யாக். 1:1).
☀ இந்த நிருபத்தில் சொல்லப்பட்ட கவலை தரும் நிலைமைகள் ஏற்படுவதற்கும் காலமெடுத்திருக்க வேண்டும்.
☀ மேலும், கிறிஸ்தவர்கள் சிறிய தொகுதிகளாக இருக்கவில்லை என்பதை இந்தக் கடிதம் காட்டியது; அதற்கு பதில் அவர்கள் சபைகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர் என்றும் பலவீனருக்காக ஜெபித்து அவர்களை ஆதரிக்கும் முதிர்ச்சி வாய்ந்த “மூப்பர்கள்” அந்த சபைகளில் இருந்தனர் என்பதையும் கவனிக்கிறோம்.
☀ இதோடுகூட, ஓரளவு அக்கறையின்மையும் சடங்கு சம்பிரதாயங்களும் சபைக்குள் நுழையும் அளவிற்கு காலம் கடந்திருந்தது. (2:1-4; 4:1-3; 5:14; 1:26,27)
☀ ஆகையால், யாக்கோபு தன் நிருபத்தை, பிற்காலத்தில், ஒருவேளை கி.பி. 62-க்குச் சற்று முன்பு எழுதியிருக்கலாம்.
☀ பெஸ்துவின் மரணத்தைப் பற்றி ஜொஸிஃபஸ் அளிக்கும் விவரம் சரியாக இருந்து, பெஸ்துவின் மரணத்தை ஏறக்குறைய கி.பி. 62 என காட்டும் ஆதாரங்கள் திருத்தமாயிருந்தால் மேற்சொன்ன குறிப்பு சரியாக இருக்கும்.
☀ யாக்கோபு, வாடிகன் எண் 1209, சினியாட்டிக், அலெக்ஸாண்ட்ரின் கையெழுத்துப் பிரதிகளில் அடங்கியுள்ளது.
☀ இந்த நிருபத்தை கவனமாக படிக்கும்போது, அப்போதைய நிலைமைகள் சகோதரருக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தன என்பது புலனாகிறது.
☀ கிறிஸ்தவ தராதரங்கள் மதிப்பிழந்தன, ஏன், புறக்கணிக்கவும்பட்டன. சிலர் உலக சிநேகத்தால் ஆவிக்குரிய விபசாரக்காரர்களாக ஆகிவிட்டனர்.
☀ முரண்பாடுகளை கண்டுபிடிப்பதற்காக ஆவல்கொண்டு சிலர் யாக்கோபின் நிருபத்தை பவுலின் நிருபத்தோடு ஒப்பிட்டனர்; யாக்கோபின் நிருபம் செயல்களைக் கொண்ட விசுவாசத்தை ஊக்குவிக்கிறது, செயல்களால் அல்ல விசுவாசத்தால் இரட்சிப்பு என்று பவுலின் நிருபங்கள் சொல்கின்றன. எனவே இது முரண்பாடாக தோன்றுவதால் பவுலின் நிருபத்தை இவரது எழுத்துக்கள் செல்லாததாக்கிவிடுகின்றன என்றும் வாதாடினர்.
☀ ஆனால், யாக்கோபு வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் ஆதரிக்கப்பட்ட விசுவாசத்தைக் குறிப்பிடுகிறார். பவுலோ நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை அல்லது செயல்களை குறிப்பிடுகிறார் என்பதை சூழமைவு தெளிவாக வெளிப்படுத்துகிறது.
☀ பவுலின் வார்த்தைகளை யாக்கோபு நிறைவு செய்கிறார் என்பதுதான் உண்மை; விசுவாசம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை யாக்கோபு விளக்குவதால் இன்னும் கூடுதலான தகவலை அளிக்கிறார்.
☀ யாக்கோபின் ஆலோசனைகள், ஒரு கிறிஸ்தவனின் அன்றாட பிரச்சினைகளை நடைமுறையில் கையாளுவதற்கு பயனுள்ளவை.
☀ மிருகங்கள், கப்பல்கள், விவசாயிகள், தாவரங்கள் உட்பட அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவைகளிலிருந்து யாக்கோபு உதாரணங்களை அளித்தார்.
☀ விசுவாசம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை அவர் விளக்குவதற்கு அவை நல்ல ஆதாரத்தை அளிக்கின்றன.
☀ இதன் மூலம் இயேசுவின் வெற்றிகரமான கற்பிக்கும் முறைகளை இவர் பின்பற்றியிருக்கிறார்; எனவே இவருடைய அறிவுரை அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.
☀ யாக்கோபு மற்றவர்களின் உள்நோக்கங்களை எந்தளவு நன்கு புரிந்துகொண்டார் என்பதை இந்த நிருபம் காட்டுகிறது.
☀ மொத்தம் 5 அதிகாரங்களும், 108 வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ முதலாவது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 4-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.
☀ இயேசுவின் பெயரை இருமுறை மாத்திரமே யாக்கோபு குறிப்பிடுகிறார் (1:1; 2:1). என்றபோதிலும், அவருடைய போதகங்களை நடைமுறையில் நல்ல விதத்தில் பொருத்திப் பயன்படுத்துகிறார்; யாக்கோபின் நிருபத்தையும் எஜமானரின் மலைப்பிரசங்கத்தையும் கவனமாய் ஒப்பிடும்போது இது தெளிவாக தெரிகிறது. அதேசமயத்தில், கர்த்தரின் பெயர் 13 முறை வருகிறது.
மிக தெளிவான கருத்துக்கள் தரப்பட்டிள்ளன.
பதிலளிநீக்கு